tamilnadu

img

விவசாயிகள் போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்கள்.... தென்மண்டல ஐ.ஜியிடம் சு.வெங்கடேசன் எம். பி., நேரில் முறையீடு....

மதுரை:
தமிழகத்தில் விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நடத்தப்பட்டு வரும் போராட்டங்களில் காவல்துறையினரின் அத்துமீறல்கள் கண்டனத்திற்குரியது என, காவல்துறையின் தென்மண்டல ஐ.ஜி முருகனிடம் மார்க்சிஸ்ட் கம்யூ
னிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் நேரில் முறையீடு செய்தார்.  இதைத்தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு:

இந்திய விவசாயத்தையும், விவசாயிகளின் வாழ்வையும் அழிக்கும் மத்திய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி தமிழகத்தில் விவசாய சங்கங்களின் சார்பில் தொடர்ந்து நடைபெறும் போராட்டங்களில் காவல்துறையினரால் செய்யப்படும் அத்துமீறல்கள் குறித்து காவல்துறையின் தென்மண்டல ஐ.ஜி முருகன் ஐபிஎஸ் அவர்களிடம்  பேசினேன். குறிப்பாக மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்ட  தோழர் கே.பாலபாரதி அவர்களிடம் திண்டுக்கல் காவல்துறையினர் நடந்து கொண்ட விதம் எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது; கடும் கண்டத்திற்கு உரியது . அதில் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளேன்.  இறுதியில் நாளை  விவசாய அமைப்புகளின் ஒருங்கிணைப்புக்குழுவின் சார்பில் நடைபெறக் கூடிய காத்திருப்பு போராட்டத்திற்கு தென்மண்டலத்துக்கு உட்பட்ட 10 தென் மாவட்டங்களில் அனுமதி வழங்குவதாக கூறியுள்ளார்.  அரசியலமைப்புச் சட்டம் நமக்கு வழங்கியுள்ள ஜனநாயக ரீதியிலான போராட்ட உரிமையை உயர்த்திப் பிடிப்போம்.

கொரோனா தாக்க முடியாத உயிரினங்களா?
அதே நேரத்தில் கொரோனா பரவல் தடுப்பு சம்பந்தப்பட்ட அரசாணையில் அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் விதிவிலக்கு என்று எந்தக் குறிப்புமில்லை. கொரோனா வைரஸ் தாக்க முடியாத உயிரினமாக  இவர்கள் இருப்பதாக எந்த மருத்துவ கண்டுபிடிப்பும் இதுவரை வரவுமில்லை என்பதையும் உரக்கச்சொல்வோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.