தொகுதி மேம்பாட்டு நிதியில் பகுதி நேர ரேசன் கடைகள்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ. நாகை மாலி, “நாகப்பட்டினம் மாவட்டத்தில், பகுதிநேர நியாய விலைக் கடைகள் எம்.எல்.ஏ. மேம்பாட்டு நிதியில் கட்ட முடியாது என்று சொல்கிறார்கள். எனவே, பகுதிநேர ரேசன் கடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். இதற்கு பதில் அளித்து பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், “100 நாள் வேலை திட்ட நிதியை முழுநேர கடைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். பகுதி நேர கடைகளுக்கு பயன்படுத்த முடியாது. ஆனால், எம்.எல்.ஏ. மேம்பாட்டு நிதியை பகுதிநேர ரேசன் கடைகள் கட்ட பயன்படுத்த லாம். எந்த தடையும் கிடையாது” என்று தெரிவித்தார்.
விக்கிரவாண்டி - கும்பகோணம் சாலை பணி நிலை என்ன?
விக்கிரவாண்டி முதல் கும்பகோணம் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அமைச்சர் எ.வ.வேலு, “நீண்ட காலமாக இந்தப் பணிகள் நடந்து வருகின்றன. தற்போது டெண்டர் விடப்பட்டு ஒரு நிறுவனம் அதை எடுத்துள்ளது. எனவே இந்த சாலை பணிகளை விரைந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
திருப்பூர் குமரனுக்கு சென்னிமலையில் மணிமண்டபம்
ஈரோடு கிழக்கு தொகுதி திமுக உறுப்பினர் வி.சி. சந்திரகுமார், “ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் பிறந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்த் தியாகம் செய்த திருப்பூர் குமரன் பிறந்த ஊரில், அவருக்கு மணிமண்டபம் அமைக்கப் படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு விழாவில் அறிவித்தார். இந்த மணிமண்டபம் அமைக்கும் பணி எந்த நிலையில் உள்ளது? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் மு.பெ. சாமிநாதன், “திருப்பூர் குமரன் பிறந்த ஊரான சென்னிமலையில் முதலில் தேர்வு செய்யப்பட்ட இடம் தூரமாக இருந்தது. சென்னிமலை பகுதியில் வேண்டும் என பொதுமக்கள் கேட்டார்கள். பிறகு, சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் வாடகை அடிப்படையில் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும்” என்றார்.
பூங்கா அமைக்க நிதி ஒதுக்கீடு
கிருஷ்ணகிரி தொகுதியில் புதிதாக பூங்கா அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அசோக் குமார் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.என். நேரு, “புதிய பூங்கா அமைப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை. தேவையான நிதியை முதலமைச்சர் ஒதுக்கீடு செய்துள்ளார். எனவே இடம் இருந்தால் புதிய பூங்கா அமைக்க இந்த ஆண்டே நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.
உதயநிதிக்கு பதில் முதல்வர் மானியக் கோரிக்கை தாக்கல்
தமிழக சட்டசபையில் துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடந்து வருகின்றன. ஒவ்வொரு துறை அமைச்சரும் மானிய கோரிக்கையை முன்வைத்து, எம்.எல்.ஏ.,க்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தும், அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகின்றனர். அதன்படி, மார்ச் 26 அன்று துணை முதல்வர் உதயநிதி கவனிக்கும் துறைகளில் ஒன்றான வறுமை ஒழிப்புத் திட்டங்கள் மற்றும் ஊரகக் கடன்கள் துறைக்கான மானியக் கோரிக்கையை உதயநிதி தாக்கல் செய்தார். மறுநாள் (வியாழக்கிழமை மார்ச் 27 ) இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை மானியக் கோரிக்கைகள் குறித்து விவாதம் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அன்றைய தினத்தில் பதிலுரையை அளிப்பார் என்று பேரவைத் தலைவர் மு. அப்பாவு அறிவித்தார். இந்த நிலையில், மார்ச் 27 வியாழக்கிழமை பேரவைக்கு துணை முதல்வர் உதயநிதி வரவில்லை. இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், ‘’துணை முதல்வர் உதயநிதி உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் புதன்கிழமை பேரவைக்கு வந்திருந்தார். இன்றைக்கு கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவர்கள் கட்டாயம் ஓய்வெடுக்க அறிவுரை வழங்கி உள்ளனர். எனவே, நான் மானியக் கோரிக்கை தாக்கல் செய்து பேசுகிறேன்” என்றார்.