tamilnadu

img

பஞ்சமி நிலங்களை மீட்க தனி ஆணையம் அமைத்திடுக!

சென்னை, பிப். 12 - பஞ்சமி நிலங்களை மீட்க தனி ஆணையத்தை தமிழ்நாடு அரசு  உருவாக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வலியுறுத்தி உள்ளார். பஞ்சமி நிலம், நிபந்தனை ஒப்படைப்பு நிலம், நில உச்ச வரம்பு நிலம், கோவில் மடாதிபதி நிலங்களை மீட்டு நிலமில்லா பட்டியலின மக்களுக்கு வழங்கக் கோரி புதனன்று (பிப்.12) சென்னை நிர்வாக இயக்குநர் அலுவலகம் அருகே காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.  தலித் விடுதலை இயக்கத்தின் தலைவர் ச.கருப்பையா தலை மையில் நடைபெற்ற இந்த போராட்டத்தை தொடங்கி வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

12 லட்சம் ஏக்கர்  பஞ்சமி நிலம் எங்கே?

125 ஆண்டுகளுக்கு முன்பு செங்கல்பட்டு ஆட்சியராக இருந்த ஜேம்ஸ் ட்ரெமென்கீரால் பரிந்துரை செய்து, தமிழகம் முழு வதும் பட்டியலின மக்களுக்கு சுமார் 12 லட்சம் ஏக்கர் நிலம் வழங் கப்பட்டது. இந்த நிலம் 10 ஆண்டு களுக்கு விற்கமுடியாது. அதன் பிறகும் பட்டியலினத்தவ ருக்குத்தான் விற்க முடியும். இதர சாதியினர் நிலம் வாங்கி னால் செல்லாது என்பன போன்ற நிபந்தனைகளோடு நிலம் வழங்கப் பட்டது. ஆனால், காலப்போக்கில் பட்டியலின மக்களிடம் இருந்து பஞ்சமி நிலங்கள் பறிக்கப்பட்டு விட்டன. 

உயர்நிலைக் குழு அமைப்பு

1994-ஆம் ஆண்டு பஞ்சமி  நில மீட்பு இயக்கம் உருவாக்கப் பட்டது. செங்கல்பட்டில் நடந்த ஊர்வலத்தில் அன்றைய ஆட்சியாளர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஜான்தாமஸ், ஏழுமலை ஆகிய இருவர் கொல்லப்பட்டனர். அதன்பிறகே பஞ்சமி நில விழிப்புணர்வு ஏற்பட் டது. அதனை தொடர்ந்து நடை பெற்ற போராட்டம், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்றத் தீர்ப்புகள், வருவாய்த்துறை ஆணைகள் பிறப்பிக்கப்பட்ட பிறகும் ஒரு ஏக்கர் பஞ்சமி நிலம் கூட மீட்டு வழங்கப்படவில்லை. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி 2015-ஆம் ஆண்டு  பஞ்சமி நிலத்தை மீட்க உயர் நிலைக்குழு ஒன்றை தமிழக அரசு அமைத்தது. 2.50 லட்சம் ஏக்கர் அடையாளம் காணப்பட்டுள்ள தாக அந்தக் குழு அறிவித்தது. ஆனால், அந்த நிலத்தை கூட மீட்கவில்லை. பஞ்சமி நிலத்தை மீட்டு பட்டியலின மக்களுக்கு வழங்குவதில் ஆளும் அரசுகள் அலட்சியமாகவும், மெத்த னமாகவே நடந்து கொள்கின்றன.

ஆட்சியாளர்களால்  பறிக்கப்படும் நிலம்

அரசின் வளர்ச்சித் திட்டங் களுக்கு பட்டியலின மக்களிடம் இருந்து பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பறிக்கப்படு கின்றன. பரந்தூர் விமான நிலை யத்திற்கும் பட்டியலின மக்களின் நிலம் பறிக்கப்பட்டுள்ளது. 60 ஆண்டுகளுக்கும் மேலாக நில  உச்சவரம்புச் சட்டம் அமலில் உள்ளது. இத்தனை ஆண்டுகளி லும் 2 லட்சம் ஏக்கர் மட்டுமே எடுக்கப்பட்டு மக்களுக்கு விநி யோகிக்கப்பட்டு உள்ளது. ஆகவே, நில விநியோகத்தில் ஆட்சியாளர்கள் தோல்வி யடைந்துவிட்டனர். 2015-இல் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழு கண்டறிந்த 2.50  லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலத்தை மீட்பதற்கு போர்க்கால அடிப்படை யில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த வகை யில், யாரிடம் இருந்தாலும் 12  லட்சம் ஏக்கர் நிலத்தையும் மீட்டுப் பட்டியலின மக்களுக்குவேண் டும். உயர்நிலைக்குழு தற்போது உள்ளதா? என தெரியவில்லை. பஞ்சமி நிலத்தை மீட்பதற்கு என்று தனி ஆணையத்தை அரசு உரு வாக்க வேண்டும். குறிப்பிட்ட கால அளவை நிர்ணயித்து நில த்தை மீட்டு வழங்க வேண்டும். பஞ்சமி நிலம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் விரிவான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. கட்சியின் அகில இந்திய மாநாடு ஏப்ரல் மாதம் மதுரையில் முடிந்த பிறகு, ஒத்தக் கருத்துள்ள இயக்கங்களை ஒருங்கிணைத்து பஞ்சமி நில மீட்பு போராட்டத்தை நடத்த உள்ளோம். இவ்வாறு பெ. சண்முகம் கூறினார்.

ஓ.பன்னீர்செல்வம் வாங்கிய  பஞ்சமி நிலப் பட்டா ரத்து!

எஸ்.சி. - எஸ்.டி. ஆணையம் உத்தரவு

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி வாங்கிய பஞ்சமி நிலத்தின் பட்டாவை எஸ்.சி. மற்றும் எஸ்.டி. ஆணையம் ரத்து செய்துள்ளது. கடந்த 1991-ஆம் ஆண்டு தேனி, ராஜா களம் பகுதியில் உள்ள 40 செண்ட் பஞ்சமி நிலத்தை, மூக்கன் என்பவருக்கு ஆதிதிராவிட நலத்துறை வழங்கி இருக்கிறது. இந்த நிலத்தை 15 ஆண்டுகளுக்கு வேறு யாருக்கும் உரிமை மாற்றம் செய்யக் கூடாது என்றும், அதன்பிறகும் அந்த நிலத்தை பட்டியலினத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் ஒதுக்க முடியும் என்றும் நிபந்தனை உள்ளது. இதனை மீறி, கடந்த 2008-ஆம் ஆண்டு இந்த நிலத்தை பட்டியலினத்தைச் சாராத ஹரி சங்கர் என்பவருக்கு மூக்கன் எழுதிக் கொடுத்ததாக கூறப்படுகிறது. அவரிடமிருந்து முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இந்நிலத்தை வாங்கி, தனது பெயரில் பட்டா பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.  இதுதொடர்பாக மூக்கன் மகன் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் மாநில பட்டியலின மற்றும் பழங்குடியினத்தவர் ஆணையத்தில் புகார் அளித்தனர். இப்புகாரை விசாரித்த சென்னையில் உள்ள மாநில எஸ்.சி. - எஸ்.டி. ஆணையம், பஞ்சமி நிலத்தை முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி வாங்கியதற்கு ஆதாரங்கள் உள்ளதாகக் கூறி, அந்த நிலத்துக்கு அவர் பெயரில் வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளது. முறையற்ற வகையில், நிலத்தை மாற்றிக் கொடுத்த வட்டாட்சியர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அதிகாரி ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆணையம், அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.  தேனி மாவட்டத்தில் பஞ்சமி நிலங்கள் எஸ்.சி., எஸ்.டி. அல்லாத சிலருக்கு விற்கப்பட்டது சம்பந்தமான பல்வேறு புகார்கள் எழுந்துள்ள நிலையில் ஓ. பன்னீர்செல்வம் பெயரில் பெறப்பட்ட பட்டாவை ரத்துசெய்ய எஸ்.சி. – எஸ்.டி. ஆணையம் உத்தரவிட்டுள்ளது.