tamilnadu

img

கேரளாவிலிருந்து ஆக்சிஜன்.... பினராயி விஜயனுக்கு சு.வெங்கடேசன் எம்.பி., நன்றி.....

மதுரை:
கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு ஆக்சிஜன் அனுப்பி உதவுமாறு விடுத்த வேண்டுகோளை ஏற்று ஆக்சிஜன் அனுப்பி வைத்துள்ள முதல்வர் பினராயி விஜயனுக்கு சு.வெங்கடேசன் எம்.பி. நன்றி தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூரில் உள்ள அழகு ஏர் புராடக்ட்ஸ் நிறுவனம் தமிழகத்தில் மேற்கு மற்றும் தென் மாவட்டங்களுக்கு மருத்துவ ஆக்சிஜன் சப்ளை செய்து வருகிறது. இந்நிறுவனம் கேரளாவின் கஞ்சிக்கோட்டில் உள்ள இனோக்ஸ் எனும் நிறுவனத்திடமிருந்து ஆக்சிஜனை பெற்று மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட மருத்துவ மையங்களுக்கு ஆக்சிஜன் அளித்து வருகிறது. இந்நிலையில், கஞ்சிக்கோடு இனோக்ஸ் நிறுவனம் கடந்த 3 வார காலமாக திடீரென ஆக்சிஜன் சப்ளையை நிறுத்திவிட்டது.

இதுதொடர்பாக அழகு ஏர் புராடக்ட்ஸ் நிறுவனத்திடமிருந்து கிடைக்கப் பெற்ற தகவலை தொடர்ந்து, தமிழக மக்களின் உயிர் காக்க, கஞ்சிக்கோடு நிறுவனத்திடமிருந்து ஆக்சிஜன் அனுப்பிவைக்க உதவுமாறு கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு மே 4 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் அனுப்பியிருந்தார். அந்தக் கடிதத்தை ஏற்று, மே 11 செவ்வாயன்று காலை 11 மெட்ரிக் டன் ஆக்சிஜன் அனுப்பிட முதலமைச்சர் பினராயி விஜயன் நடவடிக்கை எடுத்ததன் பேரில், ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இந்த மகத்தான உதவிக்கு கேரள முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக சு.வெங்கடேசன் எம்.பி. கூறியுள்ளார்.