மதுரை:
சிறையில் உள்ள மகளை அல்ல, கருத்துக்களை மீட்பதற்கே போராட்டம் என்று முழங்கிய கம்யூனிஸ்டும் அறிவியலாளருமான மகாவீர் நர்வால் காலமானார்.
அன்னாரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறியிருப்பதாவது:
ஞாயிற்றுக்கிழமை இம்மாமனிதர் மறைந்து விட்டார். அவர் கம்யூனிஸ்ட், அறிவியலாளர். அவரின் மகள் நடாஷா கடந்த ஓராண்டாக சிறையில் உள்ளார். அவர் ஒரு சமூக செயற்பாட்டாளர். ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர். கொடூரமான சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ளார். குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டக் களத்தில் முன் நின்றவர். ஒரு வழக்கில் கைது செய்யப்பட்ட போது தில்லி உயர் நீதி மன்றம் பிணை வழங்கியது. உடனே பிணையில் வர முடியாத யுஏபிஏ (UAPA) சட்டத்தின் கீழ் வழக்கைப் போட்டு வெளியே வராமல் பார்த்துக் கொள்ளப்பட்டார். மகளிடம் மகாவீர் நர்வாலால் பேசக் கூட இயலாத நிலை இருந்தது.
நவம்பர் 2020 இல் மகள் போன்ற விசாரணைக் கைதிகளின் நிலை குறித்த ஒரு கருத்தரங்கில் பேசும் போது சொன்னார்.“என் மகளிடம் இருந்து நான் நிறையக் கற்றுக் கொள்ள வேண்டும். அவள் உண்மையில் சிறையில் இருப்பதாக வருந்தவில்லை. மற்றவர்களைப் போல்தான் தன்னையும் அவள் நினைக்கிறாள். சிறைக்கு வெளியே இருப்பவர்களும், உள்ளே வாடுபவர்களைப் போலவே, துன்பத்தை அனுபவிக்கிறார்கள். எனது குடும்பத்தில் யாருமே தார்மீக பலத்தை இழக்கவில்லை. அச்சத்திற்கு ஆளாகவில்லை. நாங்களும் போராட்டத்தில் இணைந்து பங்கேற்கிறோம். சிறையில் உள்ளவர்களை விடுவிப்பதற்கு அல்ல... நல்ல கருத்துக்களை சிறையில் இருந்து மீட்பதற்கே நமது போராட்டம்”
நான் எனது மகளை நினைத்து பெருமைப்படுகிறேன், அவளின் செயல், துணிச்சலுக்காக...”
இது அவரின் வார்த்தைகள்.மகாவீர் அவர்களே! உங்கள் வார்த்தைகளை வரலாறு குறித்துக் கொள்ளும். அறிவார்ந்த விஞ்ஞானியாக, விழுமியங்களை சற்றும் விட்டுத் தராத கம்யூனிஸ்ட்டாக, பாசிச எண்ணங்களுக்கு எதிரான போரில் சொந்த மக்களை பெருமிதத்தோடு களத்தில் நிறுத்துகிறது தந்தையாக உங்களை என்றும் அது மறவாது.
கோவிட் பெருந்தொற்றில் உங்களோடு இணைந்து பாதிக்கப்பட்டுள்ள அன்பு மகன் ஆகாஷ், பிணை கிடைக்குமா தந்தையின் முகத்தைப் பார்க்க என நீதி மன்றத்தின் கதவுகளைத் தட்டிக் கொண்டிருக்கிற பெருமைக்குரிய மகள் நடாஷா ஆகியோருக்கு எனது ஆறுதல்கள். செவ்வணக்கம் மகாவீர் நர்வால்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.