வேலூர் நீதிபதிக்கு உத்தரவு!
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நாகேந்திரனின் உடல் நிலை குறித்து, வேலூர் மாவட்ட நீதிபதி நேரில் ஆய்வு செய்து, அறிக்கை அளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. மேலும் விசாரணை பிப்.21-க்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்திய குடியுரிமை வேண்டும்!
சென்னை: 1984 ஆம் ஆண்டு யுத்த காலத்தில் இலங்கையில் இருந்து இந்தியா வந்த பெற்றோருக்கு பிறந்த தனக்கு, இந்திய குடியுரிமை வழங்க உத்தரவிடக் கோரி, கோவையைச் சேர்ந்த ரம்யா என்பவர் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்ற சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி, இதற்கு ஒன்றிய அரசின் உள்துறை-வெளி யுறவுத் துறை பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசார ணையை மார்ச் 17 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
அமைச்சர் அறிவுறுத்தல்
சென்னை: சென்னை நந்தனம் ஆவின் இல்லத்தில் பால்வளத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தலைமையில், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டு றவு இணையம் - ஆவினில் உள்ள அனைத்து துறைத் தலைவர்கள் மற்றும் பெருநகர பால் பண்ணை அலுவ லர்கள் உடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், ஆவின் திட்டப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அமைச்சர் அறிவுறுத்தினார்.
நிபந்தனையுடன் விடுதலை
மண்டபம்: இராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து கடந்த பிப்.8 அன்று 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். நள்ளிரவில், சுமார் 20 விசைப்படகுகளைச் சேர்ந்த மீனவர்கள் இந்திய கடல் எல்லையான கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கை கடற்படையினர் 14 மீனவர்களை சிறை பிடித்தனர். இவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப் பட்ட நிலையில், புதனன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி 14 பேரில் 12 மீன வர்களை அபராதத்துடன் விடுதலை செய்ய உத்தரவிட்டார். மேலும், படகோட்டியான ஜான் போஸ் என்பவருக்கு இலங்கை மதிப்பில் ரூ.1.20 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
சென்னையில் ஜப்பான் ஆலை
சென்னை: எலக்ட்ரானிக்ஸ் தொழிலில் ஈடுபட்டுள்ள ஜப்பானைச் சேர்ந்த முராட்டா மேனுஃபேக்சரிங் நிறுவனம் சென்னையில் ஆலை அமைக்கிறது. சென்னையில் அமைக்கப்படும் ஆலையில் பல அடுக்கு செராமிக் கெபாசிட்டர்கள் தயாரிக்க உள்ளது. முராட்டா நிறுவனம் 2026 ஆம் ஆண்டில் முழு அளவிலான உற்பத்தியை மேற் கொள்ளும் என்று அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தகவல் தெரி வித்துள்ளார்.
அமைச்சர் ஆலோசனை
சென்னை: 2025-26 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு நிதிநிலை தயாரிப்பு தொடர்பாக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்தவர்களு டன் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சமூக நலம், குழந்தைகள் பாதுகாப்பு, ஆதிதிராவிடர், பழங்குடியினர், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர் ஆகிய துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளுடன் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
கல்வி அலுவலருக்கு சிறை
மதுரை: நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத நெல்லை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சின்னராசுவுக்கு, ஒரு வார கால சிறை தண்டனை மற்றும் ரூ.5000 அபராதம் விதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. பணி நிரந்தரம் தொடர்பாக தற்காலிக ஆசிரியர் தொடர்ந்த வழக்கில், நீதிமன்றம் வழங்கிய உத்தரவை நடைமுறைப் படுத்தவில்லை என நீதிபதி விக்டோரியா கெளரி உத்தர விட்டுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் நீலகிரி, கொடைக்கானல், கன்னியாகுமரி போன்ற பிரபலமான சுற்றுலாத் தலங்களை உள்ளடக்கி 14 மாவட்டங்களில் 40 மலையேற்றப் பாதைகள் அடையாளம் காணப்பட்டு, கடந்தாண்டு முதல் டிரெக்கிங் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், காட்டில் தீ விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் மலையேற்றம் செல்வோரின் பாதுகாப்பை உறுதிசெய்யும் விதமாக ஏப்.15 வரை தமிழகம் முழுவதும் மலையேற்றத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.