tamilnadu

img

வெம்பக்கோட்டை அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து ஒருவர் பலி; 5 பேர் படுகாயம்

வெம்பக்கோட்டை அருகே  பட்டாசு ஆலை வெடிவிபத்து ஒருவர் பலி; 5 பேர் படுகாயம்

வெம்பக்கோட்டை, ஜூலை 6- விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே கீழத்தாயில்பட்டியில் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். 5 பேர் படுகாயமடைந்தனர். வெம்பக்கோட்டை அருகே கீழத்தாயில்பட்டியில் தனியாருககு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை இயங்கி வருகிறது. திருத்தங்கல்லைச் சேர்ந்த கணேசன் ஆலையின் உரிமையாளராக உள்ளார். இந்த பட்டாசு ஆலை,  நாக்பூரை தலைமையிடமாக கொண்ட மத்திய பெட்ரோலி யம் மற்றும் வெடிபொருள் கட்டுபாட்டுத்துறை உரிமம் பெற்றுது. இங்கு  பேன்சி ரக வெடிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் சுமார் 50க்கும் மேற்பட்ட அறைகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுவாக ஞாயிறன்று விடுமுறையாகும். அரசு விதியை மீறி பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழி லாளர்கள்  ஈடுபடுத்தியுள்ளனர். அப்போது ஏற்பட்ட திடீர்  உராய்வின் காரணமாக பட்டாசு ஆலையில் வெடி விபத்து  ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது. இதில்  16 அறைகள் இடிந்து  தரைமட்டமாகியது.  தகவலறிந்து  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தூர் மற்றும் வெம்பக்கோட்டை தீயணைப்புத் துறையினர் ஒருமணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

ஒருவர் பலி; 5 பேர் காயம்

சாத்தூர் பனையடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த பாலகுரு சாமி என்பவரின் உடல் சிதிலமடைந்த நிலையில் மீட்கப் பட்டது. மேலும் கண்ணன், ராஜபாண்டி, ராஜசேகர், கமலேஷ் ராம், ராக்கேஷ் ஆகிய 5 பேர் படுகாயமடைந்தனர். சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். மேலும் கட்டிட இடுபாடுகளில் யாரேனும் சிக்கி உள்ளனரா என தீயணைப்பு படை வீரர்கள் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்து குறித்து வெம்பக்கோட்டை காவல்துறை யினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், போர்மேன் லோகநாதன் கைது செய்யப்பட்டுள்ளார்.  மாவட்ட நிர்வாகம் பட்டாசு ஆலையின் உரிமத்தை ரத்து செய்துள்ளது.

ஒரே வாரத்தில் 2 விபத்து

சாத்தூர் அருகே சின்னகாமன்பட்டியில் கோகுலேஷ் பட்டாசு ஆலையில் கடந்த  ஜூலை 1ஆம் தேதி நிகழ்ந்த வெடி விபத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்.