வாலிபரிடம் ரூ.3 லட்சம் மோசடி: ஒருவர் கைது
தஞ்சாவூர், மே 17 - தஞ்சாவூர் மாவட்டம் விஷ்ணம்பேட்டை குடியானத் தெருவைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் சசிகுமார் (24). தஞ்சை வடக்கு மானோஜிப்பட்டி சிவநாராயணன் நகரைச் சேர்ந்தவர் மரியஜெயராஜ் (50). இவரும் ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், சசிகுமாரிடம் வெளிநாட்டு வேலைக்கு அனுப்பி வைப்பதாக கூறி அவரிடம் கடந்த 2022 ஆம் ஆண்டு பல தவணைகளாக ரூ.4 லட்சம் மற்றும் பாஸ்போர்ட்டை மரியஜெயராஜ் வாங்கினார். ஆனால் கூறியபடி வெளிநாட்டு வேலைக்கு அனுப்பி வைக்கவில்லை. இதனால், தான் கொடுத்த பணம் மற்றும் பாஸ்போர்ட்டை திருப்பி தருமாறு மரியஜெயராஜிடம், சசிகுமார் கேட்டார். இதில் ரூ.1 லட்சம் மட்டும் மரியஜெயராஜ் திருப்பி கொடுத்தார். மீதி பணம், பாஸ்போர்ட்டை கேட்டபோது தராமல் இழுத்தடித்தார். ஒரு கட்டத்தில் மீதம் உள்ள ரூ.3 லட்சத்துக்கு காசோலையை சசிகுமாரிடம் கொடுத்தார். அந்தக் காசோலையை வங்கியில் போட்டபோது பணம் இல்லாமல் திருப்பி வந்தது. இதனால் சந்தேகமடைந்த சசிக்குமார் மீதம் உள்ள பணம் மற்றும் பாஸ்போர்ட்டை உடனே கொடுக்கும் படி மரியஜெயராஜிடம் கேட்டார். ஆனால் அவர் திருப்பி கொடுக்கவில்லை. இதுகுறித்து தஞ்சை மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தில் சசிகுமார் அளித்த புகாரின்பேரில், உதவி ஆய்வாளர் முத்துகுமார் வழக்குப் பதிந்து மரியஜெயராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
காலமானார்
ச்சேரி ஒன்றியம், குழிக்கரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினரும் மூத்த தோழருமான என். கோவிந்தராஜன் வெள்ளியன்று இயற்கை எய்தினார். இரங்கல் செய்தி அறிந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் டி. முருகையன், தமிழ் மாநிலக் குழு உறுப்பினர். ஐ.வி நாகராஜன், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். சேகர், பி. கந்தசாமி, கொரடாச்சேரி ஒன்றியச் செயலாளர் கோபி ராஜ், மாவட்டக் குழு உறுப்பினர் கே சீனிவாசன், மாதர் சங்க ஒன்றியச் செயலாளர் சுலோச்சனா, கிளைச் செயலாளர் குமரவேல், தங்கராஜன் உள்ளிட்டோர், நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
செயல்படாத எஸ்பிஐ ஏடிஎம்: பொதுமக்கள் அவதி
ராயன்கோட்டை உக்கடை பகுதியில் பாரத ஸ்டேட் வங்கியின் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் (ஏடிஎம்) உள்ளது. இந்த ஏடிஎம் மையம், பட்டுக்கோட்டை, பொன்னவராயன்கோட்டை, அணைக்காடு, துவரங்குறிச்சி, பழஞ்சூர் போன்ற பகுதிகளில் உள்ள அரசு அலுவலர்கள், ஓய்வூதியர்கள், வர்த்தகர்கள், இறால் பண்ணை உரிமையாளர்கள், முதியோர்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள், குடும்பத் தலைவிகள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வந்தது. ஆனால், இந்த ஏடிஎம் இயந்திரம் தற்போது மூன்று மாதமாக இயங்காமல் உள்ளது. இதுகுறித்து, பாரத ஸ்டேட் வங்கி மேலதிகாரிகளுக்கு பலமுறை தகவல் தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் பயனாளிகள் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள பட்டுக்கோட்டை நகருக்குள் செல்ல வேண்டியுள்ளது. ஏடிஎம் இயந்திரம் செயல்படாததால், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே, பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகம், பொன்னவராயன்கோட்டை உக்கடை, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு பகுதியில் உள்ள, பழுதாகி உள்ள பழைய ஏடிஎம் இயந்திரத்திற்கு பதிலாக புதிய ஏடிஎம் இயந்திரத்தை நிறுவ வேண்டுமென வீட்டு வசதி வாரியக் குடியிருப்போர், அரசு அலுவலர்கள், ஓய்வூதியர்கள், வர்த்தகர்கள், இறால் பண்ணை உரிமையாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் கையெழுத்து இயக்கம் நடத்தி கோரிக்கை மனுக்களை பாரத ஸ்டேட் வங்கியின் மண்டல மேலாளர் மற்றும் உயர் அலுவலர்களுக்கு அனுப்பி உள்ளனர்.