கொரோனா பாதிப்பால் மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க் கெட் மூடப்பட்டுவிட்டது. இதனால் மதுரை மாவட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் மல்லிகை பூ பயிரிட்டுள்ள விவசாயிகளின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.
மதுரைக்கு பெருமை சேர்க்கும் வகையில் புவிசார் குறியீடு பெற்ற மல்லிகை பறிக்கப்பட்டாலும், உரிய விலை கிடைக்காததால் டன் கணக்கில் செடியிலேயே கருகி வருகின்றன.இதனால் மல்லிகை விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல கனகாம்பரம், அரளி, சம்மங்கி, கோழி கொண்டை, பிச்சி உள்ளிட்ட பூக்களை சாகுபடிசெய்யும் விவசாயிகளின் நிலையும் கவலயளிப்பதாய் உள்ளது.
மதுரை மாவட்டத்தில் திருமங்கலம், உசிலம்பட்டி, திருப்பரங்குன்றம், செல்லம்பட்டி, சத்திரப்பட்டி, மண்ணாடிமங்கலம், கல்லுப்பட்டி, விக்ரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ரூ.1 கோடி மதிப்பிலான பூக்கள் செடியில் கருகியும், குப்பையில் கொட்டும் நிலை யும் ஏற்பட்டுள்ளது. மதுரையில்லிருந்து கனடா, ஸ்பெயின், லண்டன், சிகப்பூர், மலேசியா, துபாய் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியாமல் தேங்கியிருக்கும் பூக்களின் மதிப்பு சுமார் ரூ. 6 கோடியாகும்.
சாலையோர வியாபாரிகள்
சாலையோரங்களில் பூ கடை வைத்துள்ள வியாபாரிகள் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வியாபாரம் இல்லாததால் அவர்களது குடும்பங்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. வருமானத்திற்கு வேறுவழியின்றி வீட்டிலேயே முடங்கியுள்ளனர். தமிழக அரசு பூ வியாபாரிகளுக்கு 50 சதவீதம் நிவாரணமும், விவசாயிகளுக்கு உரிய உதவித் தொகையும் அளிக்க வேண்டும். நமது நிருபர்