tamilnadu

img

தனித்து வாழும் பெண்ணின் குடிசை வீட்டை இடித்து தரைமட்டமாக்கிய சமூக விரோதிகள்: மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்

தனித்து வாழும் பெண்ணின் குடிசை வீட்டை இடித்து  தரைமட்டமாக்கிய சமூக விரோதிகள்: மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்

மயிலாடுதுறை, ஆக.4-  மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம், காழியப்பநல்லூர் ஊராட்சி, கண்ணப்பன்மூலை பகுதியில், தனிமையில் வசித்து வரும் ஆதரவற்ற பெண்ணுக்குச் சொந்தமான இடத்தை அபகரிக்க முயற்சி செய்யும் நபர்கள், அவரது குடிசை வீட்டை இரவோடு, இரவாக அடித்து, உடைத்து தரைமட்டமாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.  பாதிக்கப்பட்ட பெண்ணை, மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, இச்சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட பெண்ணான ஆ.குமாரி (த/பெ.ஆறுமுகம்) என்பவர், பொறையார் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில், எனது பெயர் குமாரி. 58 வயதாகிறது. தாய், தந்தை இறந்து விட்டனர்.தி ருமணம் செய்துக்கொள்ளாமல் தனித்து வாழ்ந்து வரும் நான். சென்னையில் வீட்டு வேலை செய்து வருகிறேன். எனது அண்ணன் ராஜேந்திரன் உள்ளூரிலேயே வசித்து வருகிறார். எனக்கு ஆதரவு யாரும் இல்லாததால் என் அண்ணன் வசிக்கும் வீட்டின் அருகிலேயே என்.என்.சாவடி பகுதியைச் சேர்ந்த சின்னப்பன் மகன் ராசய்யா அந்தோணி என்பவரிடம் 200 குழி இடத்தை ரூ.8 லட்சத்துக்கு வாங்கி வீடு கட்டி குடியிருந்தேன்.  நான் சென்னை செல்வதால், அந்த இடத்தினை எனது அண்ணன் மகனான செந்திலிடம் பாதுகாக்கும்படி ஒப்படைத்தேன். அவரும் பராமரித்து வந்தார். இடைப்பட்ட காலத்தில் செந்திலுக்கு விபத்து ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, இதே ஊரைச் சேர்ந்த முத்துசாமி மகனான சக்திகேசவன், அவரது மனைவி விஜிலா இருவரும் அதே ஊரை சேர்ந்த சம்பந்தம் மகன் பழனியப்பன் என்பவர் மூலம், எனது அண்ணன் மகன் செந்திலை மிரட்டி, எனது இடத்தை அபகரிக்க முயற்சி செய்தனர்.  இதுகுறித்து தகவலறிந்து நான் ஊருக்கு வந்து என் இடத்தில் வீடு கட்டியபோது பழனியப்பன், சக்தி கேசவன், விஜிலா மூவரும் என்னை அடித்து கீழே தள்ளி, உனக்கு ஏது இங்கே இடம்? உன்னை வெட்டினால் கூட கேட்க நாதியில்லை என மிரட்டி தாக்கியதால், கடந்த ஜனவரி 24 அன்று பொறையார் காவல் நிலையத்தில் புகார் அளித்ததோடு, தரங்கம்பாடி குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்து, எனக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டி குடியிருந்து வருகிறேன்.  இந்நிலையில், சனிக்கிழமை இரவு 11 மணியளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, எனது வீட்டு கதவை உடைக்கும் சத்தம் கேட்டு எழுந்தபோது, பழனியப்பன், சக்தி கேசவன், அவரது சகோதரரான ராஜா, உள்ளிட்ட மேலும் சில நபர்கள், பயங்கர ஆயூதங்களுடன் என்னை கொலை செய்ய முயன்றனர். அப்போது உயிருக்கு பயந்து தப்பி ஓடிவிட்டேன். சில மணி நேரங்கள் கடந்து வந்து பார்த்தபோது எனது வீடு தரை மட்டமாக்கப்பட்டிருந்தது. பீரோவிலிருந்த 3 பவுன், 2 கிராம் தங்க நகைகள், 1 லட்சத்து இருபத்து நான்காயிரம் பணம், பித்தளை பாத்திரங்கள், வீட்டு உபயோகப் பொருட்களையும் திருடிச் சென்றுவிட்டதாகவும், உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலையில் தான் இருப்பதாகவும், தனக்கு பாதுகாப்பையும், திருடப்பட்ட சுமார் ரூ.7 லட்சம் மதிப்பிலான பொருட்களை மீட்டுத்தரும்படியும், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென பொறையார் காவல் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்துள்ளார்.  இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணை சந்தித்து, மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.சிம்சன், மாவட்டக் குழு உறுப்பினர் அய்யப்பன் உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆறுதல் கூறி, சமூக விரோதிகளால் சூறையாடப்பட்ட பெண்ணின் வீட்டை பார்வையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறையை வலியுறுத்தியுள்ளனர்.