குடியிருப்பு பட்டா வழங்க கோரி ஆட்சியரிடம் சிபிஎம் தலைவர்கள் மனு
திருவாரூர், ஆக. 4- திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி பகுதியை சார்ந்த 30-குடும்பங்களுக்கு குடியிருப்பு பட்டா வழங்கிட கோரி மாவட்ட ஆட்சியரை சந்தித்து சிபிஎம் தலைவர்கள் மனு அளித்தனர். மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், “திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகரம், 2 ஆவது வார்டு, 12 ஆவது அம்பலக்கார தெரு, தெப்பக்குளம் மேல்கரை, மேற்படி தெருவில் சுமார் 30 குடும்பங்கள் சொந்தமாக வீடுகட்டி நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, மின் இணைப்பு, தெரு விளக்கு, சாலை வசதி, அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு உள்பட அனைத்து வசதிகளும் உள்ளன. ஆனாலும், நூறாண்டு கடந்த இவர்களுக்கு, இன்னும் குடியிருப்பு மனைகளுக்கு பட்டா மட்டும் வழங்கப்படவில்லை. இவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் பல்வேறு போராட்டங்கள் நடத்தி, அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. போராட்டத்தின் எதிரொலியாக அதிகாரிகள் ஆய்வுக்கு வந்து பார்வையிட, இது தனியார் இடம் என காரணம் கூறி பட்டா வழங்க மறுக்கிறார்கள். எனவே மாவட்ட ஆட்சியர், நேரில் கள ஆய்வு செய்து 30 குடும்பங்களின் வாழ்வாதாரம் மேம்பட, பட்டா வழங்க ஆவன செய்யுமாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சியரிடம் மனு அளிக்கும் போது, சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.பி. ஜோதிபாசு, மன்னார்குடி நகரச்செயலாளர் ஜி.தாயுமானவன், மூத்த தோழர் ஜெகதீசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன், மாவட்ட ஆட்சியருக்கு புத்தகம் வழங்கி நன்றி தெரிவித்தார்.