மருத்துவப் படிப்புக்கு தேர்வான மாணவிக்கு பாராட்டு
தஞ்சாவூர், ஆக. 4- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள காலகம் கிராமத்தைச் சேர்ந்த, விவசாயி மதியழகன் - ரெஜி தம்பதியின் மகள் ரோகிணிஸ்ரீ. இவர், கொன்றைக்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு வரையும், 11, 12 ஆம் வகுப்பு தஞ்சாவூர் மாதிரி மேல்நிலைப் பள்ளியிலும் பயின்றுள்ளார். இவர் நீட் தேர்வில் மாநில அளவில் 13 ஆவது இடமும், டெல்டா மாவட்ட அளவில் முதல் இடமும், பி.சி பிரிவில் மாநில அளவில் 5 ஆம் இடமும் பெற்று, சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார், மாணவியின் இல்லத்திற்கு திங்கட்கிழமை நேரில் சென்று, அவரைப் பாராட்டி பொன்னாடை அணிவித்து, ரொக்கப் பரிசு வழங்கி பாராட்டினார்.