இஸ்லாமாபாத், ஜன.11- முஸ்லிம் சமூகங்கள் நடத்தும் பெண்கள் கல்வி குறித்த சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப்சாய் ஜனவரி 11-ஆம் தேதி பாகிஸ்தான் சென்றடைந்தார். பெண்கள் கல்வி கற்பதன் அவசியத்தை வலியுறுத்தி பாகிஸ்தானில் பிரச்சாரம் மேற்கொண்ட 15 வயது நிரம்பிய மலாலா யூசுப்சாய் தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் என்ற அமைப்பினரால் கடந்த 2012-ஆம் ஆண்டு துப்பாக்கியால் சுடப்பட்டார். தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்குப் போராடிய அவர் உயர் சிகிச்சைக்காக பிரிட்டன் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. உடல்நலம் தேறி அவர் மீண்டும் தனது சொந்த ஊருக்கு கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் முறையாகச் சென்றார். தற்போது பெண் கல்வி குறித்த சர்வதேச மாநாட்டில் பங்கேற்பதற்காக பாகிஸ் தான் வந்துள்ளார். தலைநகர் இஸ்லாமாபாத்தில் செய்தி யாளர்களிடம் பேசிய மலாலா “பாகிஸ்தா னிற்கு வந்திருப்பதற்காக நான் உண்மையி லேயே பெருமைப்படுகிறேன், மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்”. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் சிறப்புரையாற்றும் இந்த மாநாட்டில் மலாலா முஸ்லிம் சமூகங்களில் பெண் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து உரை நிகழ்த்துகிறார். சனிக்கிழமை தொடங்கிய மாநாடு ஞாயிறன்று நடைபெறுகிறது. ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசு தற்போது பெண் கல்விக்கு தடை விதித்துள்ள நிலையில் பாகிஸ்தானில் நடைபெறும் இந்த மாநாடு முக்கியத்துவம் பெறுகிறது. இந்த மாநாட்டில் 44 முஸ்லிம் மற்றும் நட்பு நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள், தூதர்கள், அறிஞர்கள், கல்வியாளர்கள், யுனெஸ்கோ, யுனிசெஃப் மற்றும் உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட 150 க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொள்கின்றனர்.