மதுரை, மார்ச் 31-
மதுரை தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனை வெற்றி பெறச் செய்யுங்கள். வாக்குச்சாவடிக்கு சென்று அரிவாள் சுத்தியல் நட்சத்திர பொத்தானை அழுத்தும் போது அதிலிருந்து “ஒளி” வெளிப்படும். அந்தஒளி உங்கள் வீட்டில் ஒளியேற்றும். நாட்டில் ஒளியேற்றும். அறியாமை என்ற இருள் அகலும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறினார்.சு.வெங்கடேசனை ஆதரித்து மதுரையில் நடைபெற்ற தேர்தல்பிரச்சாரக்கூட்டத்தில் கி.வீரமணி பேசியதாவது:-மதுரையில் சு.வெங்கடேசன் வெற்றிபெறுவது உறுதி செய்யப்பட்டுவிட்டது. தமிழகம் முழுவதும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறுவதுதிண்ணம். தமிழகத்தின் உரிமையை, மானத்தை, இனத்தை தமிழக முதல்வர் மத்திய அரசிடம் அடகுவைத்து விட்டார். தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது சமையலில் வேண்டுமானால் “கூட்டு” வைக் கிறேன்; ஆனால், அரசியலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என உறுதியாகக் கூறினார். ஆனால் இன்றைக்கு பாஜகவுடன் அதிமுக கூட்டு வைத்துள்ளது. இப்போது நடைபெறு வது “அம்மா ஆட்சியா”? “சும்மா ஆட்சியா”? மோடி எங்களது டாடி என்கின்றனர். இது வெட்கக்கேடானது.ஜெயலலிதா முதல்வராக இருந்த போது “செய்வீர்களா செய்வீர்களா” என தேர்தலில் மக்களைப் பார்த்துக் கேட்டார். இப்போது முதல்வர் எடப்பாடியைப் பார்த்து “செய்தீர்களா செய்தீர்களா” என வாக்காளர்கள் கேள்வியெழுப்ப வேண்டும்.
பாஜக 30 இடம் கூடப்பெற முடியாது
மோடி பல்வேறு வித்தைகளை காட்டி மக்களை ஏமாற்றி வருகிறார். பாஜக கடந்த தேர்தலில் 31 சதவீத வாக்குகளைப் பெற்றது. மற்றவர்கள் 69 சதவீத வாக்குகளைப் பெற்றனர். 31 சதவீத வாக்குகளைப் பெற்றவர் பிரதமர் ஆகிவிட்டார். விகிதாச்சார பிரதிநிதித்துவம் இல்லாததே இதற்குக் காரணம். தற்போது ஒன்பது சதவீத மக்கள் கூட மோடிக்கு ஓட்டுப்போடத் தயாரில்லை.கார்ப்பரேட் ஊடகங்களை மோடி கையில் வைத்துக்கொண்டு 300 இடங்களை பெற்றுவிடுவோம் எனக்கூறுகிறார். 30 இடங்களைக் கூடஅவர்களால் பெறமுடியாது. ஜனநாயகமும். மதச்சார்பின்மையும் காப்பாற்றப்பட வேண்டும். மோடிக்கு ஓட்டுப் போட்டால் இது தான் கடைசித் தேர்தல்என்கின்றனர்.சமூக நீதி காப்பாற்றப்பட சு.வெங்கடேசனுக்கு வாக்களியுங்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்காகவோ, எங்கள் கூட்டணிக்காகவோ அல்ல; உங்கள் எதிர்கால சந்ததி யினருக்காக வாக்களியுங்கள்.நீட் தேர்வை கொண்டு வந்து அனிதாவை பிணமாக்கியதை தமிழக மக்கள் மறக்கவில்லை. பொள்ளாச்சி சம்பவம் தமிழகத்திற்கே தலை குனிவை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக தமிழக அரசு கூறுகிறது. பெண்கள் சாலையில் தனியாக நடந்து செல்ல முடியவில்லை. வீட்டுவாசலில் கோலம்போட முடியவில்லை. அவர்களுக்கு பாதுகாப்பில்லை. மோடி துப்புரவுத் தொழிலாளிகளின் கால்களைக் கழுவி முத்தமிட்டு வித்தை காட்டுகிறார்.
ஆனால் தமிழகத்தில் இன்றைக்கும்மலக்குழிக்குள் இறங்கி துப்புரவுத் தொழிலாளர்கள் பணியாற்றி வரு கின்றனர். சமீபத்தில் கூட மலக்குழிக்குள் இறங்கி பணியாற்றிய ஆறு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் இயந்திரங்களைப் புகுத்துவதற்கு ஆட்சியாளர்கள் தயாரி ல்லை. கருப்புப்பணத்தை மீட்டு ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவேன் என்றார் மோடி.ரூ.15 கூட ஒருவர் வங்கிக் கணக் கிற்கும் வரவில்லை. வருடத்திற்கு இரண்டு கோடிப் பேருக்கு வேலை தருவேன் என்றார். ஆனால் கடந்த45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையின்மை ஏற்பட்டுள்ளது. சுமார் 4.5 கோடிப்பேர் வேலையிழந்துள்ளனர். ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோரை அருகில் வைத்துக் கொண்டு ஊழலை ஒழிப்பேன் என்கிறார் மோடி. இது சாத்தியமில்லாத ஒன்று.ஜிஎஸ்டி-யால் சிறு-குறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
நாட்டில் கருத்துச் சுதந்திரம் இல்லை.செம்மொழி துறையில் பணியாற்று பவர்களுக்கு நிரந்தர வேலையில்லை. தமிழகம் அனைத்து நிலைகளிலும் புறக்கணிக்கப்படுகிறது.விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்று கூறி அவர்களது வாயில் தேன் தடவினார் மோடி. ஆனால், தமிழக விவசாயிகள் தில்லியில் போராட்டம் நடத்தியபோது அவர்களைக் கண்டுகொள்ளவில்லை. மனிதாபிமானத்திற்கும் மோடிக்கும் எந்த சம்பந்தமுமில்லை. ஒக்கி, கஜா புயலால் தமிழகம் பாதிக்கப்பட்டபோது ரூ.15 ஆயிரம் கோடி நிவாரணம் வேண்டுமென எடப்பாடி மோடியிடம் கேட்டார். ஆனால் கிடைத்ததோ ரூ.353 கோடி தான்.தமிழகத்தில் கொள்கைக் கூட்டணி தான் வெற்றி பெற வேண்டும்.பேரத்தால் உருவான கூட்டணி வெற்றி பெறக்கூடாது. “விட்டமின்-ப” வேலை செய்யும் என நினைக்கிறார்கள். மக்கள் தங்களை விற்றுக்கொள்ளமாட்டார்கள் என நம்புகிறேன்.பாஜக வெற்றி பெற்றால் மோடி தான் பிரதமர், உங்கள் அணியில் யார் பிரதமர் என கேள்வியெழுப்புகின்றனர். இது சுயம்வரம். மணப்பெண் யார் கழுத்தில் மாலையிடுகிறாரோ அவர்தான் மாப்பிள்ளை.
இதைக் கூட நாம்அவர்களுக்கு சொல்லித் தரவேண்டி யுள்ளது. ராணுவவீரர்களின் தியாகத்தை வாக்குப் பெட்டியின் பக்கம் திசை திருப்பப் பார்க்கிறார் மோடி.ஏப்ரல் 18-ஆம் தேதி வாக்குச் சாவடிக்குச் சென்று சு.வெங்கடேசன் என்ற பெயருக்கு எதிரில் உள்ள அரிவாள் சுத்தியல் நட்சத்திர பொத்தானை அழுத்தும் போது அதிலிருந்து “ஒளி” வெளிப்படும். அந்த ஒளி உங்கள் வீட்டில் ஒளி யேற்றும். நாட்டில் ஒளியேற்றும். அறியாமை என்ற இருள் அகலும்.இவ்வாறு அவர் பேசினார்.இந்தக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஜா.நரசிம்மன், பி.ராதா உள்ளிட்ட கூட்டணிக்கட்சித் தலைவர்கள் உரையாற்றினர்.