tamilnadu

img

தொழிலாளர்கள் பக்கம் நிற்போம்... சிஐடியு தலைவர் அ.சவுந்தரராசன் பேச்சு....

மதுரை:
தொழிற்சங்க இயக்கத்தின் மூத்தமுன்னோடிகளில் ஒருவரும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக மட்டுமல்லாமல் அனைத்துத் தரப்பு மக்களுக்காகவும் போராடிய தோழர் எஸ்.மன்னார்சாமி சமீபத்தில் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது படத்திறப்பு நிகழ்வு மதுரையில் நடைபெற்றது.

அவரது படத்தைத் திறந்து வைத்து சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் பேசியதாவது:-

தோழர் எஸ்.எம் (மன்னார்சாமி) என்றால்  “ஏட்டில், ரோட்டில், கோர்ட்டில் - என இந்த மூன்று இடங்களில் தொடர்ந்து  நடத்தப்பட்ட போராட்டங்கள் தான் நம் நினைவுக்கு வருகிறது.  நீதிமன்றத்தில், சட்டத்துறையில் நம்முடைய பிரச்சனைகளை முன் வைத்து  நிர்வாகத்தை, அரசாங்கத்தை ஏற்கவைப்பதில் அவரது பங்கு தனித்துவம் வாய்ந்தது. கேசுவல் விடுப்பை நமக்குசம்பளத்தோடு பெற்றுக்கொடுத்தது சிஐடியு தான்.   தொழிலாளிகளுக்கான சட்ட நுணுக்கங்களை தெரிந்து  கொண்டவர் தோழர் எஸ்.எம். அவர்கற்றுக்கொடுத்த பாடத்தால்தான் இன்றைக்கு நாம் சில சட்ட திட்டங்களை தெரிந்து கொள்ளமுடிகிறது. இன்றைக்கும் தோழர் எஸ்.எம். போன்று  நமக்கு சட்ட நுணுக்கங்கள் தெரிந்தவர்கள் தேவைப்படு கிறார்கள்.  ஏனென்றால் மோட்டார் வாகன சட்டங்களில் நிறைய திருத்தங்கள் உள்ளன. உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா தமது  சுதந்திர தின உரையில், “ சட்ட நுணுக்கங்களை விவாதிக்காமல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுகின்றன”  என்றார். நீதிபதிகளும் வழக்கறிஞர்களும்  நிறை குறைகளை எளியோர் புரியும் வகையில் விளக்கிக் கூற வேண்டும்.  இல்லை என்றால் நீதிமன்றத்தில்  வழக்குகள் குவியத்துவங்கிவிடும். 

மோட்டார் வாகன திருத்த சட்ட மசோதாவில் பல்வேறு  திருத்தங்கள் வந்துவிட்டது. இந்தச் சட்டத்தில் பல்வேறு விஷயங்களை அரசு மீறுகிறது.  அவற்றை இன்றைக்கு தொழிலாளிகள் விவாதிக்க வேண்டும். அதற்குத்தான் எஸ். எம் போன்றவர் கள் நமக்கு தேவைப்படுகிறார்கள். போக்குவரத்துக்கழகங்களை  நாட்டுடைமையாக்க வேண்டும் என்ற பார்வை திமுக-விற்கு இருந்தது. அதைத் தொடர்ந்து பேருந்துகள் நாட்டுடைமையாக்கப்பட்டன. கழகங்களுக்கு சேரன், சோழன்,பாண்டியன் என பெயர்சூட்டப் பட்டது. அப்போது அனைத்து போக்குவரத்துக் கழகங்களுக்கும் ஒரே மாதிரியான வசதிகள் வேண்டும் என்று போராடியது சிஐடியு தான்.  

தொழிலாளர்களும் - கலைஞரும்
அரசு போக்குவரத்து கழகத் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியதற்காக அன்றைய போக்கு வரத்துத் துறை அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் 98 பேரை வேலை நீக்கம் செய்தார். வி.பி.சிந்தன் பேச்சுவார்த்தை நடத்தினர். உடன்பாடு எட்டப்படவில்லை. வேலை நீக்கம் செய்தது செய்ததுதான் என்றார் பண்ருட்டி ராமச்சந்தின். பின்னர் வி.பி. சிந்தன் மபொசியைச் சந்தித்துப்பேசினார். அவர் கலைஞரிடம் பேசினார். கலைஞர்  பண்ருட்டி ராமசந்திரனிடம்  பேசியதைத் தொடர்ந்து 98 பேர் வேறுஇடங்களுக்கு  மாற்றம்  செய்யப்பட்டனர்.தமிழகத்தின் தற்போதைய நிதியமைச்சர் அமெரிக்காவில் படித்தப் பொருளாதார நிபுணர். அவர்சாமானிய மக்களின் நிலைகளை புரிந்துகொள்வார் என் நம்பு கிறேன். பஞ்சப்படியை  அரசு அறிவித்தது ‘அதில் அரசும் கையெழுத்திட்டுள்ளது. எனவே அதை வழங்க வேண்டும்.  அரசு தற்போதைக்கு வழங்க முடியாது, இரண்டு மாதங்கள் ஆகும் அல்லதுஆறு மாதங்கள் ஆகும் என்று கூறலாம். அரசு வருவாயில் பெரும்பகுதிஅரசு ஊழியர்களுக்கு சென்று விடு
கிறது என்று கூறுவது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறியதைப் போல் உள்ளது.

துணை நிற்போம்...
அரசு ஊழியர்களுக்கு பெரும்வருவாயை அரசு வழங்குகிறது என்று நிதியமைச்சர் கூறுவதைத் தவிர்க்க வேண்டும். ஒன்றிய அரசினால் மாநில அரசுக்கு பிரச்சனை என்றால் மாநில அரசுக்குத் துணை நிற்போம். மாநில அரசுக்கும் தொழிலாளிகளுக்கும் பிரச்சனை என்றால் தொழிலாளிகளுடன் நிற்போம்.

கார்ப்பரேட் ஆட்சியை தொழிலாளிகள் வீழ்த்துவார்கள்
எதிர்வரும் காலங்கள் மிக மிக நெருக்கடியானது. பாஜக போன்ற கட்சிகள் பாசிசத்தை முன்னெடுத்துச் செல்கிறார்கள். மதம் மற்றும் ஜாதி மோதல்களை முன்னெடுக்கிறார்கள். நீதிமன்றங்களை அவமதிக்கிறார்கள். அரசிய லமைப்புச் சட்டத்தையே மீறி வருகிறார்கள். இவர்களுடைய நடவடிக்கை அனைத்தும் பாசிசத்தின் அடையாளங்கள். அரசியல் ரீதியாக அவர்களை தோற்கடிக்க வேண்டும். மத்தியில் கார்ப்பரேட்டுகள் மற்றும் பெரும் பணக்காரர்களுக்கான ஆட்சி மட்டுமே நடக்கின்றது.இவ்வாறு அவர் பேசினார்.