tamilnadu

img

கொல்லப்பட்ட தமிழக மீனவர்கள்... இலங்கையில் உடற்கூராய்வு நடக்கிறது.... உயிரிழந்த குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் நிவாரணம்....

மதுரை:
இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஆரோக்கிய ஜேசு (50) என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மெசியா(30), திருப்புல்லானி ஒன்றியம் தாத நேந்தல் நாகராஜ் (52), உச்சிப்புளியை அடுத்துள்ள வட்டானவலசையைச் சேர்ந்த செல்வம் மகன் செந்தில்குமார் (32), மண்டபம் அகதிகள் முகாமைச் சேர்ந்த  நேசபெருமாள் மகன் என்.சாம்சன் டார்வின் (28) ஆகிய நான்கு மீனவர்கள் நடுக்கடலில் இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்பட்டனர். 

இவர்களது உடல்களை யாழ்ப்பா ணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகஅதிகாரிகள்  அடையாளம் கண்டவுடன், மாஜிஸ்திரேட் நீதிமன்றம் மற்றும் நீதித்துறை மருத்துவ அதிகாரிகளின் உத்தரவின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கைக் கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர். உடற்கூராய்வில் கொரோனா நெறிமுறைகள் பின்பற்றப்பட உள்ளது. அதற்கேற்ற வகையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கடற்படை செய்தித் தொடர்பாளர் இந்திகா டி சில்வா தெரிவித்துள்ளார்.இந்தியா-இலங்கை மீனவர்கள் கைது தொடர்பாக தொடர்ந்து இரு நாட்டுஅரசுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. கடைசியாக  2017 ஆம் ஆண்டு, இராமேஸ்வரம் மீனவர்கே.பிரிட்ஜோ பாக் நீரிணைப் பகுதியில்துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்தார். கே.பிரிட்ஜோ இலங்கைக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தமிழக மீனவர்கள் குற்றம் சாட்டினர், இலங்கைக் கடற்படை குற்றச்சாட்டை மறுத்தது. ஆனால் இந்திய அரசு முழு விசாரணை நடத்த வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

நிவாரணம் வழங்கல்
இலங்கைக் கடற்படை தாக்குதலால் கடலில் மூழ்கி உயிரிழந்த நான்கு மீனவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சத்திற்கான காசோலையை இராமநாதபுரம் மாவட்டஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெள்ளியன்று வழங்கினார். தங்கச்சி மடம் சென்று  நான்கு மீனவர்கள் குடும்பத்தினரையும் சந்தித்து நிவாரண உதவியை வழங்கினார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நான்கு மீனவர்களின் குடும்பத்தினரில் தலா ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்க உத்தரவிட்டுள்ளார்.இந்த நிலையில், மத்திய மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங்தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனி சாமியை சென்னையில் உள்ள முகாம் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை  மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.  முதல்வருடன் மாநில மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் மற்றும் பால்வளத்துறை  அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி ஆகியோரும் சென்றிருந்தனர்.