மரித்திராத மனித நேயம்
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த 20 ஆண்டுகளாக யாசகம் பெற்று பிழைத்து வந்தவர் தேவி (வயது 54). இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு அதிராம்பட்டினத்தில் இயற்கை எய்தினார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த, காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் கே.செய்யது அகமது கபீர், நெய்னா முகமது, ஆரிப், ஹசன் உள்ளிட்ட இஸ்லாமிய இளைஞர்கள் தாமாக முன்வந்து காவல்துறை, கிராம நிர்வாக அலுவலர் அனுமதி பெற்று, தங்களது சொந்த செலவில் நல்லடக்கம் செய்ய முன்வந்தனர். இதையடுத்து, அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் ஆம்புலன்ஸ் வாகனத்தில் வண்டிப்பேட்டை இடுகாட்டிற்கு உடலை எடுத்துச் சென்று திங்கட்கிழமை காலை நல்லடக்கம் செய்தனர். இஸ்லாமிய இளைஞர்களின் இச்செயல் அனைத்து தரப்பு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. மதத்தின் பெயரால் சில அமைப்புகள் நாட்டைப் பிளவுபடுத்தி வரும் வேளையில் மனித நேயம் இன்னும் மரித்திடவில்லை என தேசப்பற்று மிக்க இளைஞர்களால் மீண்டும் நிரூபிக்கப்பட்டு வருகிறது.