tamilnadu

img

இது நிவாரணமா? தண்டனையா?  சு. வெங்கடேசன் எம் பி 

நிதி நிறுவனங்களின் கடன் மீதான இ.எம்.ஐ தவணைகள் மூன்று மாதங்களுக்கு வசூலிக்கப்படாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது. நான் உட்பட பல அரசியல் தலைவர்கள் எழுப்பிய கோரிக்கையே இது.ஆனால் இந்த அறிவிப்பின் மகிழ்ச்சி வியாழனன்று பாரத ஸ்டேட் வங்கி தனது இணைய தளத்தில் விடுத்துள்ள அறிவிப்பின் மூலம் திருடப்பட்டுள்ளது. பாரத் ஸ்டேட் வங்கி ஓர் கணக்கை தனது இணைய தளத்தில் போட்டுள்ளது. 

வாகனக் கடன் ரூ 6 லட்சம், நிலுவை தவணை 54 மாதங்கள் ஆக இருப்பின் இந்த மூன்று மாதம் தவணை செலுத்துதல் தள்ளி வைக்கப்படுவதால் கூடுதலாக இறுதியில் ரூ 19,000 கட்ட வேண்டி வரும். இது ஒன்றரை இ.எம்.ஐ தவணைகளுக்குச் சமம். 
  வீட்டுக் கடன் ரூ.30 லட்சமாம், நிலுவை ஆண்டுகள் 15 ஆக இருக்கிற பட்சத்தில் இந்த மூன்று மாதம் தவணை செலுத்துதல் தள்ளி வைக்கப்படுவதால் கூடுதலாக ரூ.2.34 லட்சம் கட்ட வேண்டி வரும். இது எட்டு இ.எம்.ஐ களுக்கு சமம். 
இந்தக் கணக்கு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள இ.எம்.ஐ தவணை தள்ளி வைப்பு நிவாரணம் அல்ல... தண்டனை என்ற அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

கொரோனோ-வால் நிலை குலைந்து, பரிதவித்து நிற்கிற சாதாரண, நடுத்தர வர்க்க மக்களுக்கு ஏதோ கைகளில் தருவது போல பாவனை செய்துவிட்டு அவர்களிடம் இருப்பதையும் (?) தட்டிப் பறிக்கிற குரூரத்தை அரங்கேற்றுவது என்ன நியாயம்?
மக்கள் கேட்பது, அவர்களுக்கு தெரிந்தது ஒன்றே ஒன்றுதான்... மூன்று மாத தவணைகள் பிடிக்கப்படாவிட்டால் நிலுவைக் காலத்திலும் அதே இ.எம்.ஐ தொகையோடு மூன்று மாதங்கள் நீடிக்க வேண்டும் என்பதுதான்...

நிதி அமைச்ச்சரே... ரிசர்வ் வங்கி கவர்னரே... கந்து வட்டிக் காரர்களை விட மோசமாக நடந்து கொள்ளாதீர்கள்... உங்களிடம் மனிதாபிமானம் எதிர்பார்த்தது அவ்வளவு பெரிய குற்றமா? அதற்குத் தண்டமா?

மக்களுக்கு கூடுதல் சுமை இன்றி உங்கள் முடிவை அமலாக்குங்கள்...