tamilnadu

img

மகளிர் கபடி உலகக்கோப்பை இந்தியா சாம்பியன்

மகளிர் கபடி உலகக்கோப்பை இந்தியா சாம்பியன்

13 வருட இடைவெளிக்குப் பிறகு மகளிர் கபடி உலகக்கோப்பை தொடரின் 2ஆவது சீசன் வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவில் நவம்பர் 17 அன்று தொடங்கியது. போட்டியை நடத்தும் வங்கதேசம், இந்தியா, சீன தைபே, ஜெர்மனி, ஈரான், கென்யா, நேபாளம், போலந்து, தாய்லாந்து, உகாண்டா மற்றும்  சான்சிபார் என 11 நாடுகள் பங்கேற்றன. லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, ஈரான், சீன தைபே, வங்கதேசம் ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. பரபரப்பாக நடைபெற்ற அரையிறுதி ஆட்டங்களின் முடிவில் ஈரானை 33-21 என்ற புள்ளிக்கணக்கில் இந்தியாவும், போட்டியை நடத்திய வங்கதேசத்தை 25-18 என்ற புள்ளிக்கணக்கில் சீன தைபேவும் வீழ்த்தி இறுதிக்கு முன்னேறின.  இந்நிலையில், திங்களன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்தியா -  சீன தைபே அணிகள் கோப்பைக்கு பலப்பரீட்சை நடத்தின. இந்த ஆட்டத்தில் 35-28 என்ற புள்ளிக் கணக்கில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்று, 2ஆவது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது. கடந்த 2012ஆம் ஆண்டு பீகாரில் நடைபெற்ற உலகக்கோப்பை முதல் சீசனில் இந்தியா வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றி இருந்த நிலையில், இரண்டாவது முறையாக மகளிர் கபடி உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு நாடு முழுவதும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.