tamilnadu

img

தென் மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை!

தென் மாவட்டங்களில்  கொட்டித் தீர்த்த கனமழை! 

திருநெல்வேலி, நவ. 24 - தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை  கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாற வாய்ப்புள்ளது. இதனால், அடுத்த 2 நாட்களுக்கு கன்னியாகுமரி, திரு நெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், இராமநாதபுரம், புதுக் கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் கன முதல் மிக கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி ஞாயிறன்று இரவு முதலே தென்மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. கன மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  தயார் நிலையில் பேரிடர் மீட்பு படைகள் தென்காசி, செங்கோட்டை மற்றும்  சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த  கனமழை காரணமாக பெரும்பாலான பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்துள் ளது.

குற்றாலத்தின் அனைத்து அருவி களிலும் குளிக்கத் தடை விதிக்கப் பட்டது. பாபநாசம் அகஸ்தியர் அருவி யிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள் ளது. தாமிரபரணி ஆற்றில் சுமார்  20 ஆயிரம் கன அடி அளவிற்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்ச ரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பள்ளி களுக்கு விடுமுறை விடப்பட்டதுடன், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைவு பெற்ற கல்லூரிகளில் நடை பெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. நெல்லை மாவட்டத்தில் 2023-ஆம் ஆண்டு வெள்ளம் பாதித்த 72 இடங் கள் அடையாளம் காணப்பட்டு, மிக வும் அபாயம், - மிதமான அபாயம், குறைவான அபாயம் என பிரிக்கப்பட்டு, அங்கு பொறுப்பு அதிகாரிகள் நிய மிக்கப்பட்டுள்ளனர். தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.  

தொடர்மழை எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளதால் தமிழ்நாடு பேரிடர் மீட்புப்படை அணியின் 26 வீரர்கள் பாளை அண்ணா விளையாட்டு அரங்கத் தில் தயார் நிலையில் உள்ளனர். தேசியப் பேரிடர் மீட்புப்படையை சேர்ந்த குழு வினர் வள்ளியூரில் உள்ளனர். அவர் களை முக்கூடலில் நிலை நிறுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாஞ்சோலையில் கனமழை பெய்து  வருவதால், அங்குள்ள மக்கள் வீடு களிலேயே பாதுகாப்பாக வசிக்க அறி வுறுத்தப்பட்டு உள்ளனர். அசாதாரண நிலை ஏற்படுமாயின் அங்கு வசிக்கும் 15 குடும்பத்தினர் பாதுகாப்புடன் கீழே இறங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சுமார் 1 லட்சம்  வாழைகள் சேதம் மாவட்ட நிர்வாகம் நடத்திய கணக் கெடுப்பில், நெல்லை மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் சுமார் 1 லட் சம் வாழை மரங்கள் சேதமடைந் திருக்கலாம் என முதற்கட்ட மதிப் பீட்டில் தெரியவந்துள்ளது. அம்பாசமுத் திரம், களக்காடு பகுதிகளில் சுமார் 15 ஏக்கர் நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. நீர் வடிந்த பிறகு 2  நாட்களுக்குப் பின் சேத கணக்கெடுப்பு நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் சுகுமார் தெரிவித்துள்ளார். நிரம்பி மறுகால் பாயும்  150-க்கும் மேற்பட்ட குளங்கள் தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் வேகமாகஉயர்ந்து வருகிறது.

 காட்டாற்று வெள்ளம் காரணமாக, பாவூர்சத்திரம் நாகல் குளத்தில் தொடங்கி நெல்லை மாவட்டம் மானூர் பெரியகுளம் வரையிலான பாதையில் உள்ள குளங்களுக்கு நீர்வரத்து அதி கரித்துள்ளது. இதில் 150-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பி மறுகால் பாய்கின்றன. 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் கன அடி  தண்ணீர் தாமிரபரணியில் ஓடிக்கொண்டிருப்பதாக பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கோரம்பள்ளம் குளத்தின்  7 மதகுகள் திறப்பு தூத்துக்குடி மாவட்டத்தில் கழுகுமலை, கயத்தாறு, கடம்பூர், மணியாச்சி, ஓட்டப்பிடாரம் பகுதிகளில் பெய்து வரும் கனமழை,  காட்டாற்று வெள்ளமாக கொம்பாடி ஓடை வழியே கோரம் பள்ளம் குளத்தை வந்தடைந்துள்ளது.

இதனையடுத்து 7 மதகு கள் மூலம் 7,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் உத்தரவின் பேரில், கோரம்பள்ளம் குளத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.  குடியிருப்புகளுக்குள்  புகுந்த மழை வெள்ளம் கனமழையால் கோரம்பள்ளம், காலாங்கரை, பெரியநாயகி புரம், வீரநாயக்கன்தட்டு, அத்திமரப்பட்டி, முத்தையாபுரம், முள்ளக்காடு, குலையன்கரிசல் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழைகள் நீரில் மூழ்கி கிடக்கின்றன.  ஞாயிறன்று இரவு முழுவதும் பெய்த கனமழை காரண மாக தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட ஆசிரியர் காலனி, பக்கில்புரம், செல் சீனி காலனி, கொக்கூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடியிருப்புப் பகுதிகளை மழைநீர் சூழ்ந்து, பொது மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது.

திற்பரப்பு அருவியில்  குளிப்பதற்குத் தடை கன்னியாகுமரி மாவட்டத்தில், ஞாயிற்றுக்கிழமை காலையில் துவங்கிய மழை திங்கட்கிழமை இரவு வரை நீடித்தது.  இதனால், குழித்துறை கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சுற்றுலாத் தலமான திற்பரப்பு அருவி  ஆர்ப்பரித்துக் கொட்டியது. இங்கு குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். மழைப் பேரிடரைச் சமாளிக்கும் வகையில், முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  டாக்டர் ஆர். ஸ்டாலின்  உத்தரவின்படி, கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய இடங்களில் மாநில பேரிடர் மீட்புப் படை,  வெள்ளம் மீட்பு பயிற்சி பெற்ற காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் தயார் நிலையில் உள்ளனர்.