tamilnadu

img

காற்றாகிவிட்ட கரிசல்குயிலே

 காற்றாகிவிட்ட கரிசல்குயிலே

தமிழ்நாடு முழுவதும் பாட்டாளி வர்க்க மக்களின் இதயங்களை தனது காந்தக் குரலால் கொள்ளை கொண்ட கரிசல்குயில் கிருஷ்ணசாமி, கடைசியாக தோன்றிய மேடை இது. தான் உயிராக நேசித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது அகில இந்திய மாநாட்டின் கலை நிகழ்வுகளின் மேடையை வசந்தமாக்கினார் கரிசல்குயில். அவரது கடைசித் தோற்றம்.  (படம்: ஜே.பொன்மாறன்) 

அமுத மழையில் கவிதை நனைந்ததாய் நிலவைக் குடை பிடிக்க அழைத்தவன் நம்மை அழவைத்துப் போய்விட்டான்.  இலைகள் அழுத மழைஇரவைப் பாடியவன் இமைகள் நனைய அழவிட்டுப் பறந்திட்டான்  பாரதிபிடித்த தேர்வடம் நாட்டின் நடுவீதியில் கிடப்பதாய்ப் பதறியவன் பாதிவழியிலேயே போய்விட்டான்  சாதுவாய் அமைதி காத்தவன் - பாட்டுச் சந்தத்தால் சபையை அலறவிட்டவன் -தன் சாவினால் நம்மை கதறவிட்டான்  எப்போதும் முணுமுணுக்கும் உதடுகள்- இனி எப்போது கானங்களை இசைக்கும்? எப்போதும் உன்னுடனே இருக்கும் பாட்டுகளைத் தவிக்கவிட்டுவிட்டு எப்படி நீ பிரிந்து சென்றாய்?  இசையால் அழ வைத்தாய் இசையால் எழ வைத்தாய் இசைக்குயிலே நீ ஏன் - எங்களை இப்போது விழ வைத்தாய்?  கானங்களை மறந்து காற்றாகிவிட்ட கரிசல்குயிலே கானக்குயிலே - இனி தரிசனம் எப்போது தருவாய் சொல்? சாதாரண பாட்டுகளை எல்லாம் சாகாவரப் பாட்டுகளாக்கினாய் சபைகள் எல்லாம் காத்திருக்க சாவிடம் ஏன் நீ போனாய்?  பாட்டாளி மக்கள் எல்லாம் -உன் பாட்டுக்காய் நிற்கையிலே -நீ ஏன் பாட்டை மறந்து சென்றாய்? நாட்டுக்கும் வீட்டுக்கும் நாசங்கள் நேர்கையிலே பாட்டுப் போராளியே - நீ பாடைக்குப் போகலாமா?  உன்பாட்டு உன்பாட்டு ஊரெல்லாம் உன்பாட்டு செம்பாட்டு செம்பாட்டு செவியெல்லாம் செம்பாட்டு சேர்ந்த கதை நாடறியும் சினந்த மனம் சிவப்பாகும்  கானக் கருங்குயிலே - இன்று  கண் சொரிய விட்டாயே! பாடாமல் சென்று விட்டாய் - உன் பாட்டுக்கு எங்கே செல்வோம் இனி!   - ப.முருகன்