tamilnadu

img

இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் முன்பு மாபெரும் தர்ணா போராட்டம்

இந்து சமய அறநிலையத்துறை  அலுவலகம் முன்பு மாபெரும் தர்ணா போராட்டம் 


மயிலாடுதுறை இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் முன்பு (சித்தர்காடு) தமிழ்நாடு அடிமனை பயனாளிகள், குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் மாபெரும் தர்ணா போராட்டம், சங்கத்தின் மாவட்டத் தலைவர் த.ராயர் தலைமையில் வியாழனன்று நடைபெற்றது.  கோவில், மடம், அறக்கட்டளை, வக்ஃப்போர்ட், தேவாலயம், இனாம் இடங்களில் குடியிருப்பவர்கள், சிறு வணிகம், சாகுபடி செய்பவர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் மாநிலச் செயலாளர் சாமி.நடராஜன் விளக்கவுரையாற்றினார். மாவட்டச் செயலாளர் ஏ.ஆர்.விஜய், விவசாய சங்க மாவட்டத் தலைவர் டி. சிம்சன், மாநிலக்குழு உறுப்பினர் பி. குணசுந்தரி, மாவட்ட பொருளாளர் அ. இராமலிங்கம், மாவட்ட இணைச் செயலாளர் சி. மேகநாதன் மற்றும் சங்கத்தின் நிர்வாகிகள் உரையாற்றினர்.  மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பி. சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.  தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள், மடம், அறக்கட்டளைகள் மற்றும் வக்ஃப்போர்ட், தேவாலயங்களின் அடிமனையில் குடியிருப்பவர்கள், சிறுகடை வைத்திருப்போர், விவசாய நிலங்களில் பல தலைமுறைகளாக உள்ளவர்களை வெளியேற்றுவதற்காக பல உத்தரவுகளை போட்டு, இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. கோவில் சொத்துக்களை இதுவரை பாதுகாத்து வரும் ஏழை, எளிய மக்கள், தாங்கள் அனுபவித்து வரும் இடங்களுக்கு கடந்த காலத்தில் பகுதி ‘பணமாக’ செலுத்தி வந்ததை வாடகையாக மாற்றி, அதை மூன்றாண்டுக்கு ஒருமுறை நிலத்தின் சந்தை மதிப்பின்படி சதுரடி கணக்கில் வாடகை நிர்ணயம் செய்யும் மோசமான நடவடிக்கையை இந்து சமய அறநிலையத்துறை மேற்கொண்டு, மக்களை துன்புறுத்தி வருகிறது.  நிலங்களில் குத்தகை சாகுபடி செய்து வந்த விவசாயிகளை, அவர்களின் குத்தகை உரிமையை பறித்து, புதிதாக ஏலம் விடும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. மேலும், பல ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் இனாம் நிலங்களில் சாகுபடி செய்து வரும் விவசாயிகளின் நில உரிமையை பறித்து, இனாம் நிலங்களையும் கோவில் நிலங்களாக மாற்றும் நடவடிக்கையை அறநிலையத்துறை மேற்கொண்டு வருகிறது.  இதுபோன்ற நடவடிக்கை களால் மாநிலம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான பயனாளிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, இந்து சமய அறநிலையத்துறையின் அறமற்ற நடவடிக்கைகளைக் கண்டித்தும்,  கோரிக்கைகளை நிறைவேற்றிடக் கோரியும் நடைபெற்ற தர்ணா போராட்டத்தில்  ஆயிரத்துக்கும் மேற்பட்ட, பாதிக்கப்பட்ட மக்கள் கலந்துக் கொண்டு கோரிக்கைகளை முழங்கினர்.  திருச்சி  தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், திருச்சி மாநகர், புறநகர் மாவட்டக்குழுக்கள் சார்பில் வியாழன் அன்று திருவானைக்காவல் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் கே.சி. பாண்டியன் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் முகமதுஅலி, மாவட்டச் செயலாளர் நா.கார்த்திகேயன், புறநகர் மாவட்ட தலைவர் முருகேசன், மாவட்டப் பொருளாளர் தனபால், பொருளாளர் கதிர்வேல், ஒன்றிய தலைவர் சிவகுமார், மணிகண்டம் ஒன்றியச் செயலாளர் ஜி. சிவகுமார், புறநகர் மாவட்டச் செயலாளர் நடராஜன், புறநகர் மாவட்டத் தலைவர் சீனிவாசன், ஒன்றியச் செயலாளர் குருநாதன், மாவட்டத் துணை செயலாளர் சங்கர், காட்டூர் பகுதிச் செயலாளர் செந்தில்குமார், அந்தநல்லூர் ஒன்றிய பொறுப்பாளர் முருகன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.  கும்பகோணம்  கும்பகோணம் தலைமை தபால் நிலையம் முன்பு தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் ஜீவபாரதி தலைமை வகித்தார் போராட்டத்தை விளக்கி மாநில பொருளாளர் எஸ் துரைராஜ், மாவட்டச் செயலாளர் எம். ராம், மாவட்டப் பொருளாளர் கொளஞ்சியப்பன், விவசாய சங்க மாவட்டச் செயலாளர் என.வி கண்ணன் மற்றும் தாராசுரம் மணி, விவசாய சங்க மாவட்டத் துணை தலைவர் கணேசன்உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினார் ஆர்ப்பாட்டத்தில் அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.