tamilnadu

img

சித்த மருந்தை ஆய்வுக்கு உட்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை:
சென்னையில் உள்ள இந்திய மருத்துவ மற்றும் ஹோமியோபதி இயக்குநரிடம் ஜூன் 26- ஆம் தேதி  சித்த மருத்துவர் கண்டுபிடித்துள்ள மருந்தை (ஆவணங்களுடன்) ஆய்வுக்கு உட்படுத்தவேண்டுமென  சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த சித்த மருத்துவர் எஸ்.சுப்பிரமணியன், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாகப்பரவி வருகிறது.  கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த 66 மூலிகைகள் கொண்டு கசாயப் பொடி  மருந்தை கண்டுபிடித்துள்ளேன்.இந்தப் பவுடரை தண்ணீரில் கொதிக்க வைத்து தினமும் இரு வேளை சாப்பிடுவதற்கு முன்பு குடித்து வந்தால் கொரோனா நோயிலிருந்து விடுபடலாம்.இந்த மருந்தால் எந்த பக்க விளைவுகளும் இல்லை. இந்த மருந்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடலில் வாதம், பித்தம், கபம் ஆகியன சரிபங்கில் இருக்கச் செய்யும். அனைத்து நோய்களையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் இந்த மருந்துக்கு உள்ளது. சீனாவில் கொரோனாவை கட்டுப்படுத்த பாரம்பரிய மருத்துவமே உதவியது. எனவே பொடி மருந்தை நுண்ணுயிர் ஆய்வுக்கு உட்படுத்தக்கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அளித்தேன். இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. எனவே கொரோனா நோயைக் குணப்படுத்தும் சித்த மருந்தான மூலிகை பொடியை நுண்ணுயிர் ஆய்வுக்கு உட்படுத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்திஅமர்வில் செவ்வாயன்று விசாரணைக்கு வந்தது, அப்போது மத்திய அரசு தரப்பில், கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மக்களுக்கு யுனானி, ஹோமியோபதி மருந்துகளைக் கொடுத்து வருக்கிறோம், புதிய மருந்து கண்டுபிடிப்புகள் குறித்து இதுவரை 35 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன எனத் தெரிவிக்கப்பட்டது.தொடர்ந்து மாநில அரசு தரப்பில் சென்னை,அரும்பகத்தில் ஆராய்ச்சி மையம் ஆரம்பிக்க உள்ளோம், அதற்காக 12 கோடி ரூபாயில் உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளன. பணியாளர்கள் நியமனம் விரைவில் நடக்கவுள்ளது எனத் தெரிவிக்கப் பட்ட்டது. மத்திய அரசின் வழிகாட்டுதலில் தான் கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: சென்னையில் உள்ள இந்திய மருத்துவ மற்றும் ஹோமியோபதி இயக்குநரிடம் ஜூன் 26- ஆம் தேதி  சித்த மருத்துவர் கண்டுபிடித்துள்ள மருந்துடைய ஆவணங்களுடன் நேரில் சென்று ஆய்வுக்குட்படுத்த வேண்டும், நிபுணர் குழு அமைத்து புதிய மருந்தை ஆய்வு செய்து, அதுகுறித்த அறிக்கையை ஜூன் 30- ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். வழக்கை ஜூன் 30- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.