ஆண்டுதோறும் கொண்டாடுகிறோம்
ஆணும் பெண்ணுமாய்
காதலர் தினமோ
நெருப்பாற்றில் நீந்தி நீந்தி
கரை சேரலும் சேராததுமாய்!
கலாச்சாரக் காவலர்கள்
உலா வருவர்
தடியெடுத்த தண்டல்கார்களாய்
காதலர்களின் கரங்களில்
ராக்கி அணிவிக்கும்
ரௌடித் தனத்துடன்
மௌனமுடைத்து முறியடித்தலில்
கவனம் தேவை காதலர் தினத்தில்
சாதிய ஆணிவேர்களை
வேரடி மண்ணோடு களையாது
வாய்ச் சவடாலில்
வீணே கழிகிறது காலம்
தானே நிகழ்கிறது
ஆணவக் கொலைக் கோலம்
மயக்க ஊற்றான மதம்
மயக்கக் காதலில் வெல்கிறது
மானுடரைக் கொல்கிறது
தேவதையாய் காதலி
திருமணத்துக்கு முன்பு
வாழ்க்கைச் சூறாவளியில்
சரித்திர நாயகியாய்
திருமணத்துக்குப் பின்பு
வரலாறை வாசியுங்கள்
காதலுக்காகவும் வாசியுங்கள்
செல்வம் துறந்த சீமாட்டி
செல்வமாய் சேர்த்தணைத்த
ஏந்தல் ஏழையின் பெருமாட்டி
வயதும் அழகும்
செல்வமும் சொகுசும்
காதலுக்கில்லை
புரிதலும் அன்பு சொரிதலுமே
காதலுக்கானது
மனைவியின் மரணம்
மார்க்சுக்கும் மரணவாயில்
மார்க்கமானது
செம்புலப் பெயல்நீராய்
அன்புடை நெஞ்சங்களின்
காதல் கோட்டையானது
மார்க்ஸ் ஜென்னி காதலுக்கு
வழிகாட்டும் வாழ்வானது
காதலர்களின் வாழ்தலுக்கு
- பெரணமல்லூர் சேகரன்