ஆளுநர் ரவியை பதவி விலக்க வேண்டும்!
கடலூர், ஏப். 9 - உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை ஒன்றிய அரசு உடனடியாக பதவியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். மதுரையில் நடைபெற்ற சிபிஎம் 24வது அகில இந்திய மாநாட்டில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் புதன்கிழமை கடலூருக்கு வருகை தந்த கே.பாலகிருஷ்ணனுக்கு கட்சியினர்- வெகுஜன அமைப்புகளின் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஆளுநர்களின் அடாவடிக்கு நீதிமன்றம் முற்றுப்புள்ளி இதன் பின்னர் கே. பாலகிருஷ்ணன், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, தமிழக ஆளுநரின் அத்துமீறலுக்கு கடிவாளம் இடும் வகையில் ‘’உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது” என்றார். ‘ஆளுநர் செய்தது முழுக்க, முழுக்க சட்டவிரோதம்; ஆளுநர் தனக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தை தாண்டி செயல்பட்டிருக்கிறார்’ என்று தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது. மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 12 மசோதாக்களை, 3 ஆண்டுகளாக கிடப்பில் போட்டுள்ளார். இதை கண்டித்துள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தங்களது தீர்ப்பில் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குவதற்கான, காலக்கெடுவை நீதிபதிகள் தீர்மானித்திருப்பதையும் சுட்டிக்காட்டினார். “ஆளுநரின் மோசமான செயல்பாட்டிற்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளது. ஆளுநர்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்பதற்கு இந்த தீர்ப்பு முற்றுப் புள்ளி வைத்துள்ளது. ஆளுநரும், குடியரசுத் தலைவரும் ஒப்புதல் வழங்க மறுத்த 10 மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றமே ஒப்புதல் வழங்கியுள்ளது. மசோதா ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்ட நாளில் இருந்து அது சட்டமாக்கப்படும் என்பது மிகவும் வரவேற்கத்தக்கது” என்று கே. பாலகிருஷ்ணன் கூறினார். தமிழக முதல்வருக்கு வாழ்த்துக்கள் “சிறப்பான தீர்ப்பைப் பெற்ற தமிழக முதல்வருக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதாகவும், இந்த தீர்ப்பு தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பாக அமைந்து விட்டது” என்றும் குறிப்பிட்டார். “ஒன்றிய அரசும், ஆளுநரும் தீர்ப்பு பற்றி ஒன்றும் கூறாமல் அமைதியாக உள்ளனர். ஆளுநர் சட்ட வரம்பை மீறி நடந்துள்ளார் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில், ஒன்றிய அரசு உடனடியாக ஆளுநர் பொறுப்பில் இருந்து ரவியை விடுவிக்க வேண்டும். அவரை திரும்பப் பெற வேண்டும். இதுதான் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு மரியாதை அளிப்பதாக இருக்கும் என்றும் கே.பாலகிருஷ்ணன் கூறினார். முஸ்லிம்கள் அளித்த சொத்தை அபகரிக்கும் மோடி அரசு வக்பு சட்டத் திருத்த மசோதா குறித்து அவர் கூறுகையில், “ஒன்றிய அரசு வக்பு சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நள்ளிரவு 2 மணிக்கு மேல் நிறைவேற்றி உள்ளது. இதன் மூலம் இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய இஸ்லாமிய மக்கள் பல நூற்றாண்டு காலமாக தங்களுடைய இறைவன் மீது நம்பிக்கை வைத்து அளித்த சொத்துக்களை அபகரிக்க ஒன்றிய அரசு முயற்சிக்கிறது. வக்பு வாரியத்தில் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி திட்டமிட்டு இந்துக்களையும் உள்ளே புகுத்துவது கண்டிக்கத்தக்கது” என்றார். “வக்பு சொத்துக்களை முழுவதுமாக கைப்பற்றவும், இஸ்லாமிய மக்கள் செய்து வரும் ஆன்மீகப் பணியை சீர்குலைக்கும் நோக்கத்திலும் இந்த சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் இந்த நாசகர முயற்சிக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்த சட்டத்தை எதிர்த்து மாநில அரசு தீர்மானம் நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளது. இதேபோன்று கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பப்பட்டுள்ளது. வக்பு சட்ட திருத்தத்தைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஏப்ரல் 17 அன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது” என்றும் அவர் தெரிவித்தார். தொழிலாளர் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காண வேண்டும் “ஒன்றிய அரசு சிலிண்டர் எரிவாயு விலையை உயர்த்தி உள்ளது கண்டனத்துக்கு உரியது. தமிழ்மீது பிரதமர் மோடிக்கு உண்மையான அக்கறை இருக்குமானால், அவர் ஏன், தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்கவில்லை. இன்றும் இந்தி மட்டும்தான் ஆட்சி மொழியாக உள்ளது. அதற்கான சட்ட திருத்தத்தை கொண்டு வர முடியுமா?” என்று அவர் கேள்வி எழுப்பினார். “பிரதமர் மோடி தமிழகத்துக்கு வரும்போது மட்டும் தமிழை பேசி நாடகம் ஆட வேண்டாம், என்றும்; அதை மக்கள் நம்பமாட்டார்கள்” என்றும் அவர் கூறினார். “மாநில அரசு நீண்ட காலமாக இருக்கக்கூடிய அரசு ஊழியர் - ஆசிரியர், போக்குவரத்து ஊழியர் பிரச்சனைக்கு சுமுகமான முறையில் பேசித் தீர்வு காண வேண்டும்; போக்குவரத்து தொழிலாளருக்கு கிட்டத்தட்ட 8 ஆண்டுகளாக கொடுக்க வேண்டிய அகவிலைப்படி நிலுவையில் உள்ளது. எனவே அவர்களது கோரிக்கைகளையும் மாநில அரசு நிறைவேற்றிட வேண்டும்’’ என்றும் கே. பாலகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார். செய்தியாளர் சந்திப்பின் போது, கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளர் கோ. மாதவன், மாநிலக்குழு உறுப்பினர் பா. ஜான்சிராணி, மூத்த தலைவர் டி. ஆறுமுகம், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜே. ராஜேஷ் கண்ணன், மாநகரச் செயலாளர் ஆர். அமர்நாத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.