சோவியத் கொடி, சின்னங்களை காட்சிப்படுத்த ஜெர்மனியில் தடை
பெர்லின்,மே 9- இரண்டாம் உலகப் போரின் நினைவுச் சின்னங்கள், சோவியத் கொடிகள் மற்றும் சின்னங்களை காட்சிப்படுத்துவதற்கான தடையை ஜெர்மனி நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. நாட்டின் பொது அமைதி மற்றும் உக்ரைன் போரை இத்தடைக்கு காரணமாகக் கூறியுள்ளது. இந்த தடை ஒரு மோசமான பாரபட்சம் நிறைந்த இழிவான செயல் என ரஷ்யா கண்டித்துள்ளது. பெர்லினில் உள்ள ரஷ்ய தூதரகமும் இதனை கடுமையாக விமர்சித்துள்ளது. மே மாதம் முதல் வாரத்தில் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் மே 8-9 ஆகிய தேதிகளில் சோவியத் பாடல்களைப் பொது இடங்களில் பாடுவதற்கும் சோவியத் தொடர்புடைய சின்னங்களை ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்வதற்கும் பெர்லின் நகர காவல்துறை தடை விதித்தது. இந்த தடையானது இரண்டாம் உலகப்போரில் ஹிட்லர் தலைமையிலான ஜெர்மனியின் நாஜி படையை சோவியத் வீழ்த்திய தினத்தை கொண்டாடும் வகையில் ட்ரெப்டோவில் நகரில் உள்ள நினைவுச்சின்னத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு ஒன்றுகூடும் சுதந்திரத்தை நியாயமற்ற முறையில் கட்டுப்படுத்தியதாக பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த தடையின் அடிப்படையில் சோவியத் கொடிகள், சோவியத் வெற்றியை பறைசாற்றுகிற, போற்றுகிற வகையிலான பதாகைகள், சோவியத் ராணுவச் சீருடைகள் மற்றும் போர்க்காலத்தில் வெளியிடப்பட்ட பாடல்கள் உட்பட எதையும் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டது. இந்த தடையை உறுதிப்படுத்திய நீதிமன்றம் சோவியத் தொடர்பான சின்னங்கள் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் முயற்சிகளை அனுதாபத்தின் வெளிப்பாடாகவும் பொது அமைதிக்கு ஆபத்தை விளைவிப்பதாகவும் அமையும். ஆகையால் இந்ததடையை உறுதிப்படுத்துவதாக ஜெர்மன் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.