tamilnadu

img

மதுரை - நத்தம் சாலையில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் அஜாக்கிரதையால் இடிந்தது : அமைச்சர் எ.வ.வேலு.... ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க சிஐடியு கோரிக்கை....

மதுரை:
மதுரை -நத்தம் சாலையில் நாராயணபுரம் அருகில் கட்டுமானப் பணியின் போது பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் ஒருவர் பலியானார். இடிந்துவிழுந்த பாலத்தை பொதுப்பணித் துறை அமைச்சர் ஏ.வ.வேலு  ஞாயிறன்று பார்வையிட்டார். பின்னர் அவர்கூறியதாது:-

மதுரை மாவட்டத்தில் நகரப் பகுதியிலிருந்து நத்தம் சாலையினை இணைக்கின்ற வகையில் ரூ.545 கோடி மதிப்பில் 7.5 கிலோ மீட்டர் நீளத்திற்கு இந்த மேம்பாலம் கட்டப்படுகிறது. தற்போது 5.9 கிலோ மீட்டர்நீளத்திற்கு பணிகள் நிறைவடைந்துள் ளன.  மும்பையை சார்ந்த ஜே.எம்.சி என்ற தனியார் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் இப்பணியினை கடந்தமூன்றாண்டுகளாக மேற்கொண்டு வருகிறது.  அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் பாலம் கட்டும் பணி முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.  அடுக்குச் சாலை பகுதியில் தான் விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த விபத்து தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.   ஒப்பந்ததாரரின் அஜாக்கிரதையால் தான் இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது. பாலம் இணைப்பு பணியின் போதுஹெரிடரை இணைக்கும் போது ஹைட்ராலிக் ஜாக்கி இயந்திரம் பழுதுகாரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது.  160 டன் ஹெரிடரை தூக்கி நிறுத்த 200 டன் ஹைட்ராலிக் ஜாக்கி பயன் படுத்துவதற்கு பதிலாக குறைந்த டன்அளவுள்ள ஹைட்ராலிக் ஜாக்கியை பயன்படுத்தியுள்ளனர்.  பாதுகாப்பற்ற நிலையில் பணிகளை மேற்கொண்டதன் காரணமாக விபத்து நேர்ந்துள்ளது.பணி நடைபெற்ற இடத்தில் பொறியாளர் இருப்பதற்கு பதிலாக தொழிலாளர்கள் மட்டுமே இருந்துள்ளனர்.  ஹைட்ராலிக் ஜாக்கியின் தன்மை குறித்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.என்.ஐ.டி தொழில்நுட்ப நிபுணர் பாஸ்கர்  தலைமையிலான குழு ஆய்வு செய்து  தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு விசாரணை அறிக்கை தாக்கல் செய்யவுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

ரூ.50 லட்சம் இழப்பீடு தருக!
பாலம் இடிந்த விபத்தில் உயிரிழந்த தொழிலாளி குடும்பத்திற்கு உரிய உதவி, நஷ்ட ஈடாக ரூ. 50 லட்சம்,காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவரும் தொழிலாளர்களுக்கு ரூ. 30 லட்சம் இழப்பீடாக கட்டுமான நிறுவனம் வழங்க தமிழக அரசு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்; எதிர்காலத்தில் உரிய பாதுகாப்போடு, பயிற்சிபெற்ற தொழிலாளர்களை கொண்டு பணிகள் நடைபெறுவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்; கட்டுமான நிறுவனங்கள் வெளிமாநிலத் தொழிலாளர்களைப் பணிகளில் பயன்படுத்தும்போது உரிய காப்பீடு, தொழிலாளர் துறை சட்டப்படி பதிவு செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தொழிலாளர் நலத்துறைக்கு அரசாணை பிறப்பிக்க வேண்டும் என மதுரை மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கம் (சிஐடியு) வலியுறுத்தி யுள்ளது.