திருச்சிராப்பள்ளி, நவ.5 - தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் செவ்வாயன்று திருச்சியில் நடந்தது. கூட்டத்திற்கு கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் என்.எல்.ஸ்ரீதரன் தலைமை வகித்தார். வேலை அறிக்கையை மாநில பொதுச் செயலாளர் எஸ்.ஜெகதீசன் வாசித்தார். வரவு -செலவு அறிக்கையை மாநிலப் பொருளாளர் கே.ஹர்சன் சமர்ப்பித்தார். கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 70 வயது நிறைந்த அனைத்து ஓய்வூதியர்களுக்கும் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். தமிழக அரசில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பொதுத்துறை ஓய்வூதியர் உள்ளிட்ட அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்க வேண்டும். அனைத்து ஓய்வூதியர்களுக்கும் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கம்முடேஷன் பிடித்தம் செய்யும் காலத்தை 15 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக குறைக்க வேண்டும். பணிக்கொடை உச்சவரம்பை தமிழக அரசு ஊழியர்களுக்கு ரூ.25 லட்சமாக உயர்த்தியதை பொதுத்துறை ஓய்வூதியர்கள் அனைவருக்கும் வழங்க வேண்டும். நீதிமன்ற தீர்ப்பு வழங்கிய பிறகும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 3.12.24 ஆம் தேதி மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம், தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஓய்வு பெற்றோர் நல அமைப்பு, அரசு விரைவு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு, தமிழ்நாடு பள்ளி கல்லூரி ஆசிரியர் ஓய்வு பெற்றோர் நல சங்கங்களைச் சார்ந்த மாநில செயற்குழு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முன்னதாக கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் சிராஜுதீன் வரவேற்றார். தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்க பர்வதராஜன் நன்றி கூறினார்.