பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சுப் போட்டிகள்
தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாளான ஜுன் 3 அன்று செம்மொழி நாள் விழாவாக 2025 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படவுள்ளது. செம்மொழியின் சிறப்பையும் முத்தமிழறிஞரின் தமிழ்த்தொண்டின் பெருமையையும் மாணவர்களிடம் உணர்த்திடும் வகையில் ஆண்டுதோறும் அனைத்து மாவட்டங்களிலும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இப்போட்டிகளில் அரசுப்பள்ளி, தனியார் பள்ளி, பதின்ம பள்ளி, அரசு நிதியுதவி பெறும் பள்ளி, மத்திய இடைநிலை கல்வி வாரியம் (CBSE) பயிலும் மாணவர்கள் பங்குபெறலாம். இப்போட்டிகளில் கலை மற்றும் அறிவியல், கல்வியியல், பொறியியல், பல்தொழில்நுட்பம், மருத்துவம், சட்டம், வேளாண்மை உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் பங்குபெறலாம். போட்டிகளில் கலந்து கொள்ளும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் விண்ணப்பப் படிவம் மற்றும் விதிமுறைகள் தமிழ் வளர்ச்சித் துறையின் https://tamilvalarchithurai.tn.gov.in என்ற இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து தலைமையாசிரியர்/ முதல்வரின் பரிந்துரையுடன் அவ்விண்ணப்பப் படிவங்களை tamilvalar.tnj@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 05.05.2025 ஆம் நாளுக்குள் அனுப்ப வேண்டும். மாவட்ட அளவில் கட்டுரை, பேச்சுப்போட்டியில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10,000, இரண்டாம் பரிசு ரூ.7000, மூன்றாம் பரிசு ரூ.5000 என பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பெற உள்ளன. 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 09.05.2025 (வெள்ளிக்கிழமை) அன்றும் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு 10.05.2025 (சனிக்கிழமை) அன்றும் தஞ்சாவூர், கரந்தை உமாமகேஸ்வரனார் கலைக் கல்லூரியில் காலை 9.00 மணிக்கு கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் நடைபெறவுள்ளன. போட்டிக்கான தலைப்புகள் போட்டியின் போது அறிவிக்கப்படும். “செம்மொழியின் சிறப்பு மற்றும் முத்தமிழறிஞர் கலைஞரின் தமிழ்த்தொண்டின் பெருமை” சார்ந்த தலைப்பு அளிக்கப்படும். மாவட்டப் போட்டிகளில் முதல்பரிசு பெறும் மாணவர் 17.05.2025 அன்று சென்னையில் நடைபெறும் மாநிலப்போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பினைப் பெறுவர். 03.06.2025 ஆம் நாளன்று நடைபெறவுள்ள செம்மொழி நாள் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கிச் சிறப்பிக்கப்பெறுவர். இக்கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளில் பங்கேற்று மாணவர்கள் பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.