நிர்மல் பள்ளிக்கு மாதம் ரூ.1000 நன்கொடை வழங்கும் ஓட்டுநர்
சென்னை, ஏப். 15 - நிர்மல் பள்ளிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் ஆட்டோ ஒட்டுநரை சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் பாராட்டி னார். சென்னை அயனாவரத்தில் அரசு உதவிப் பெறும் நிர்மல் பள்ளியை சிஐடியு நடத்தி வருகிறது. இந்தப் பள்ளிக்கான செலவுகளை ஈடுகட்ட சிஐடியு உறுப்பினர்கள் தங்களின் பிறந்தநாள், திருமண நாள், பணி ஓய்வு நிகழ்வு, நினைவு நாள், இல்ல விழாக்கள் போன்ற நிகழ்வுகளின் போது நன்கொடை வழங்கி வருகின்றனர். இந்தப் பள்ளியை தொழிலாளி வர்க்கம் நடத்தி வருகிறது என்றால் மிகையல்ல. இதனை மெய்ப்பிக்கும் வகையில், தென் சென்னை மாவட்டம், ஆட்டோ டாக்சி ஓட்டு நர் சங்கத்தின் கோயம்பேடு பகுதிக்குழு நிர்வாகிகள் மாதம் 100 ரூபாய் பள்ளிக்கு நன்கொடை வழங்க முடிவெடுத்தனர். அதன்படி மாதம் 1000 ரூபாய் பள்ளிக்கு நன்கொடையாக வழங்கி வருகின்றனர். இதில், பகுதி துணைச் செயலாளராக உள்ள ஆர்.பாலு, தனிப்பட்ட முறையில் தனது பங்காக மாதம் 1000 ரூபாய் நிர்மல் பள்ளிக்கு வழங்கி வருகிறார். மேலும், சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசனை சந்தித்து சனிக்கிழமையன்று (ஏப்.12) மேலும் 5 ஆயிரம் ரூபாயை நன்கொடையாக வழங்கினார். அப்போது, தன்னுடைய வாழ்நாள் முழுவதும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங்குவதாக உறுதியளித்தார். அவரை அ.சவுந்தரராசன், சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் ஆகியோர் பாராட்டினர். இந்நிகழ்வின்போது சிஐடியு மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன், ஆட்டோ சங்கத்தின் மாவட்டச் செயலாளர் இ.உமாபதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.