குடிநீர் ஏடிஎம் : சென்னையில் 50 இடங்களில் ஏற்பாடு
சென்னை, மே 21- குடிநீர் வாரியம் சார்பில் சென்னையில் 50 இடங்களில் 24 மணி நேர சுகாதார மான குடிநீர் வழங்கும் ஏடிஎம் அமைக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகர மக்கள் மற்றும் அருகிலுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு, சென்னை குடிநீர் வாரியம் மொத்தமாக குடிநீர் விநியோகம் செய்கிறது. குறிப்பாக, 15 பகுதி அலுவலகங்கள் மற்றும் 200 டிப்போ அலுவலகங்கள் மூலம் பொது மக்களுக்கு குடிநீர் வழங்கி வருகிறது. சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மேற்பரப்பு தண்ணீர் மற்றும் நிலத்தடி நீர் ஆகியவை எடுக்கப்படு கின்றன. பூண்டி – சோழவரம், செங்குன்றம் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகள் மேற்பரப்பு ஆதாரங்கள். செங்குன்றம் ஏரியில் இருந்து, ஏரிக்கு அருகில் புழல், சூரப்பேட்டை மற்றும் கீழ்ப்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலை யங்களுக்கு நீர் கொண்டு செல்லப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு சென்னை மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான கடற்கரை, பூங்காக்கள், பேருந்து நிலையம், பள்ளி, கல்லூரிகள் இருக்கும் பகுதிகள் என 50 இடங்களில் குடிநீர் ஏடிஎம்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த குடிநீர் ஏடிஎம்கள், பொதுமக்கள் தங்களின் வாட்டர் பாட்டில்களில் தண்ணீரை பிடித்து பருகும் வகையில் அமைக்கப்படுகின்றன. முதல்கட்டமாக, பட்டினப்பாக்கம், சைதாப்பேட்டை, கிண்டி பேருந்து நிலையம், அண்ணா நகர் டவர் பூங்கா, பாண்டி பஜார் உள்ளிட்ட 50 இடங்களில் குடிநீர் ஏடிஎம்கள் அமைக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளன. 150 மி.லி மற்றும் 1 லிட்டர் என்ற 2 வகைகளில் குடிநீர் வழங்கப்படவுள்ளது. இந்த திட்டம் எண்ணற்ற பொதுமக்களுக்குப் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஏடிஎம்களில் நிறுவப்பட்டுள்ள அதிநவீன நீர் சுத்திகரிப்பு அமைப்புகள் முன் வடிகட்டுதல், ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ் மற்றும் புற ஊதா கதிர்கள் ஆகியவற்றை கொண்டு தேசிய தரத்திற்கு இணையான தூய்மையான நீரை வழங்குகின்றன. 24மணிநேரமும் மிகக் குறைந்த செலவில் சுத்தமான குடிநீர் விநியோகம் இதன் சிறப்பம்சமாகும். தொட்டியில் நீரின் அளவு குறையும் போது அல்லது மின்ன ழுத்தம் குறைவாக இருக்கும்போதும் எச்சரிக்கை காண்பிக்கப்படும். இருப்பு இல்லாத நிலையில் கடவுச்சொல் மூலம் நீரை ரீசார்ஜ் செய்யும் வசதி இதில் உள்ளது. மேலும், கடைசி 50 முறை ரீசார்ஜ் செய்யப்பட்ட பரிவர்த்தனைகளின் விவரங்களையும் பயனர்கள் பார்க்க முடியும். இந்த விநியோக அமைப்பு பேட்டரி மூலம் இயங்குவது கூடுதல் சிறப்பாகும். கட்டண வசூலில் துல்லிய தன்மையை உறுதி செய்வதற்காக ஸ்மார்ட் கார்டு மற்றும் நாணயங்கள் பயன்படுத்தும் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குடிநீர், ரீசார்ஜ் மற்றும் விநியோகம் தொடர்பான தகவல்கள் எஸ்எம்எஸ் மூலம் பயனர்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்கப்படும். பாதுகாக்கப்பட்ட குடிநீர் இலவசமாக வழங்க வேண்டிய அரசு கட்டணம் நிர்ணயித்து வழங்குவது சமூக ஆர்வலர்களின் விமர்சனத்திற்கு உள்ளாகும். இத்திட்டம் விரைவில் அமலுக்கு வரும் என கூறப்படுகிறது.