மதுரை:
குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தும் பொருட்டு தேசிய மக்கள்தொகை பதிவேட்டினை உருவாக்கும் பணியை ஏப்ரல் 1 முதல் மத்திய அரசு துவக்க உள்ளது; இந்தப் பதிவேட்டிற்கு கேட்கப்படும் கேள்விகள் எதற்கும் நாட்டு மக்கள் பதில் சொல்ல வேண்டாம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி அழைப்பு விடுத்தார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்துமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரையில் ஞாயிறன்று மாலை மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய சீத்தாராம் யெச்சூரி, குடியுரிமை திருத்தச் சட்டம்(சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆர்) ஆகியவை பற்றி விரிவாக விளக்கினார்.பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தேசியகுடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) உருவாக்கும்திட்டமே தங்களிடம் இல்லை என்று மீண்டும்மீண்டும் பொய் சொல்லி வருகிறார்கள்; அவர்கள், தேசிய மக்கள் தொகை பதிவேட்டை உருவாக்கும் பணியைப் பற்றியும், அது எப்படிப்பட்ட வரிசைப்படி நடக்கவுள்ளது என்பது பற்றியும் திட்டமிட்டு பொய்களை பரப்பிவருகிறார்கள். உண்மையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமலாக்குவதன் ஒரு பகுதியே தேசிய குடிமக்கள் பதிவேட்டை உருவாக்குவது. தேசிய குடிமக்கள் பதிவேட்டை உருவாக்க வேண்டுமானால் அதற்குமுதல் பணியாக தேசிய மக்கள் தொகை பதிவேடு உருவாக்கப்பட வேண்டும். இந்தப் பணியைத்தான், எதிர்வரும் ஏப்ரல் 1 முதல் நடைபெற உள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பு (சென்சஸ்) என்ற வழக்கமான பணியுடன் இணைத்து நடத்துவது என்று மோடி அரசு முடிவு செய்து உத்தரவுகளை பிறப்பித்து, ஏற்பாடுகளை செய்து வருகிறது என்று சீத்தாராம் யெச்சூரி விளக்கினார்.
பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு(சென்சஸ்) பணி நடைபெறுகிறது. 2021க்கான பணி இப்போது துவங்க உள்ளது. அந்த சென்சஸ் கணக் கெடுப்பில் அலுவலர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நாம் பதிலளிக்கலாம். ஆனால் அத்துடன் சேர்த்து கூடுதலான சில கேள்விகளை முன்வைத்து தனி படிவத்தில் மக்கள்தொகை பதிவேட்டிற்கான கேள்விகளை கேட்க இருக்கிறார்கள். இந்தக் கேள்விகளில், உங்களது பெற்றோர் எங்கு பிறந்தார்கள், அவற்றுக்கான சான்றுகள் உள்ளதா என்பதுஉள்ளிட்ட விபரங்களை கேட்க இருக்கிறார் கள். அப்படிப்பட்ட சான்றுகளை இந்தியாவில் பெரும்பாலான மக்களால் அளிக்க முடியாது என்பதே இன்றைய நிலவரம் என்று சுட்டிக்காட்டிய சீத்தாராம் யெச்சூரி, அதற்கு உதாரணமாக தன்னையே குறிப்பிட்டார்.“நான் 1952ல் சென்னை அரசு பொது மருத்துவமனையில் பிறந்தேன். அப்போ தெல்லாம் பிறப்புச் சான்றிதழ் எதுவும் கிடையாது. எனவே எனக்கு அத்தகைய சான்றிதழ் இல்லை. இவர்கள் எனது தந்தையின் பிறப்புச்சான்றிதழையும் கேட்கிறார்கள். அவர் எப்போது பிறந்தார் என்பது தெரியும். அவரதுபாஸ்போர்ட்டில் வருடம் இருக்கிறது. ஆனால் அதற்கான சான்றிதழை கொண்டுவா என்று கேட்டால் எப்படி தர முடியும்? இதுதான் உண்மை நிலவரம். நாடு முழுவதும்அந்தக் காலக்கட்டத்தில் மிகப்பெருவாரியான பிரசவங்கள் வீடுகளில் தான் நடந்துள்ளன. எதற்குமே பதிவு கிடையாது. அதேபோல, முஸ்லிம்கள் மட்டுமல்ல, எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், குறிப்பாக பழங்குடி மக்களை எடுத்துக் கொண்டால் அவர்கள் ஒவ்வொரு பருவகாலத்திற்கும் வேறு வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து செல்வார்கள். அவர்களுக்கு குடியிருப்பு சான்று என்று எதுவும் இருக்க வாய்ப்பில்லை.
வெள்ளம், வறட்சி போன்ற பல காரணங்களால் இருக்கிற சான்றிதழ்களை தொலைத்து விட்டு இடம்பெயர்ந்து சென்றவர்கள் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள். இவர்களுக் கெல்லாம் எங்கே போய் சான்றிதழ் தேடுவது? அதேபோல தலித் மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள்உரிய குடியிருப்பு வசதிகள், மருத்துவ வசதிகள் ஏதுமின்றி காலம் காலமாக ஒடுக்கப்பட்டுக் கிடக்கிறார்கள். அவர்களிடம் சான்றிதழ் கேட்டால் எங்கே செல்வார்கள்? எனவே இதுமுஸ்லிம்களுக்கான பிரச்சனை அல்ல; ஒட்டு மொத்த இந்தியர்களின் பிரச்சனை” என்று விளக்கிய சீத்தாராம் யெச்சூரி, எனவே தேசியமக்கள் தொகை பதிவேட்டிற்காக கேட்கப்படும் இதுபோன்ற கேள்விகளுக்கு நாட்டு மக்கள் பதிலளிக்க முடியாது என்று மறுக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
ஏன் மறுக்க வேண்டும் என்பதையும் அவர் விரிவாக விளக்கினார்.தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் பதிவு செய்யப்படும் பதில்களை பின்னர் அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். அதில், நாம் அளித்த பதில் அவர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்றால் அல்லது உரிய சான்றுகள் இல்லை என்று கூறியிருந்தால், அந்த நபர் ‘சந்தேகத்திற்குரியவர்’ என்றுவகைப்படுத்தப்படுவார். சந்தேகத்திற்குரி யவர்கள் என்று வகைப்படுத்தப்பட்ட மக்கள்தவிர மீதி உள்ளவர்கள் மட்டுமே தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு(என்ஆர்சி) கொண்டு வரப்படுவார்கள். இவர்கள்தான் குடிமக்கள் என்று வரையறை செய்யப்படுவார்கள். எஞ்சியுள்ளவர்கள், உரிய சான்றிதழ்களை ஒப்படைக்க வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப் படுவார்கள். அப்படி ஒப்படைக்கவில்லை என்றால் அவர்கள் நாடற்றவர்கள் என்று அறிவிக்கப்படுவார்கள்.
இது மிகவும் பயங்கர மானது. இதுதான் சில மாதங்களுக்கு முன்பு அசாமில் நடந்தது. லட்சக்கணக்கான மக்கள்,முஸ்லிம்கள் மட்டுமல்ல, இந்துக்கள் உட்பட,பல்வேறு மதங்கள், இனங்களைச் சேர்ந்த வர்கள் உட்பட, பல்லாண்டுகாலமாக அசாமில் வசித்து வருபவர்கள் உரிய சான்றுகள் இல்லைஎனக் கூறி, சந்தேகத்திற்குரியவர்கள் என பட்டியலிடப்பட்டு, தேசிய குடிமக்கள் பதிவேட்டிலிருந்து நீக்கப்பட்டார்கள். ஒரு மாநிலத்திலேயே இத்தனை லட்சம் என்றால் இந்திய நாடு முழுவதும் எத்தனை கோடி மக்கள் நாடற்றவர்களாக மாற்றப்படுவார்கள் என்பதை எண்ணிப் பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது. எனவேதான், தேசிய குடிமக்கள் பதிவேட்டை உருவாக்குவதற்கான முதல் படியாக நடக்கப்போகிற தேசிய மக்கள்தொகை பதிவேடு பணியை மாநில அரசுகள் செயல்படுத்தக்கூடாது என்று வலியுறுத்துகிறோம்; இதுவரை 13 மாநில அரசுகள்தேசிய குடிமக்கள் பதிவேட்டை ஏற்கமாட் டோம் என்று அறிவித்துள்ளனர்; அந்த மாநில அரசுகள் அதை ஏற்கவில்லை என்றால், அதன்முதல்படியாக இருக்கிற தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கான பணியையும் அமலாக்கக்கூடாது என்று வேண்டுகோள் விடுக்கிறோம் என சீத்தாராம் யெச்சூரி அழைப்பு விடுத்தார்.
ஏப்ரல் 1 முதல் மக்கள் தொகை பதிவேட்டிற்கான கணக்கெடுப்புப் பணி துவங்குகிறது. எனவே அதற்கு முன்பு மார்ச் 1 முதல் 23 வரை நாடு முழுவதும், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பில் அலுவலர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லாதீர்கள் என்ற பிரச்சாரத்தை வீடு வீடாக நடத்துவது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி முடிவு செய்துள்ளது. அந்த முடிவை ஏற்று வீடு வீடாக மக்களை சந்திப்பீர் எனவும் சீத்தாராம் யெச்சூரி அழைப்பு விடுத்தார்.மார்ச் 23 பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகிய மகத்தான புரட்சி வீரர்களின் நினைவுதினம் என்பதை சுட்டிக்காட்டிப் பேசிய சீத்தாராம் யெச்சூரி, தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்ட போது இந்த மூன்று புரட்சியாளர்களும் நீதிமன்றத்திற்குள் “இன்குலாப் ஜிந்தாபாத்” என்று முழக்கமிட்டார்கள்; அதற்கு என்னஅர்த்தம் என்று பிரிட்டிஷ் நீதிபதி கேட்கிறார்; அப்போது முழக்கமிட்ட பகத்சிங், புரட்சி நீடூழி வாழ்க என அர்த்தம்; அது மட்டுமல்ல நாங்கள் கனவு காணும் இந்தியா பிரிட்டிஷாரிடமிருந்து அரசியல் விடுதலை பெற்ற இந்தியா மட்டுமல்ல, ஒட்டுமொத்த பாட்டாளி மக்களும் இந்த சுரண்டல் சமூகத்திலிருந்து பொருளாதார விடுதலை பெற்ற ஒரு சோசலிச இந்தியாவே எங்களது கனவு; அதற்கான புரட்சி ஓங்குக என்று முழக்கமிட்டார். அத்தகைய புரட்சிகரமான சோசலிச இந்தியாவை படைப்போம்; அதை நோக்கிய பயணத்தில் மதச்சார்பற்ற ஜனநாயக இந்திய குடியரசை பாதுகாக்கும் பணியில் முழுமையாக நம்மை அர்ப்பணிப்போம் என்றும் சீத்தாராம் யெச்சூரி அறைகூவல் விடுத்தார்.அவரது உரையை கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி தமிழில் மொழியாக்கம் செய்தார்.