tamilnadu

img

வழிபாட்டு உரிமையையும் தட்டிப்பறிப்பதா?

“ஒடுக்கப்பட்ட மனிதனின் ஏக்கப் பெருமூச்சு மதம்” என்றார் மார்க்ஸ். ஆம்!, துயருறும் கோடானு கோடி மக்களுக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் அளிப்பதாக மதமும், இறைவழிபாடும் கருதப்படுகின்றன. அரசிடம் தங்கள் கோரிக்கைகளையும், குறைபாடுகளை யும் வெளிப்படுத்துவதை விட அவற்றை ஆண்டவனிடம் முறையிடும் போக்கு சமூகத்தில் வலுவாக நிலவி வருகிறது. சமீப ஆண்டுகளில் இது அதிகரித்தும் வருகிறது. ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. ஐயப்பன் கோவில் மட்டுமல்ல, திருப்பதி, பழனி, திருச்செந்தூர் உள்ளிட்ட பிரபல கோவில்களுக்கு ஆண்டுதோறும் செல்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. ஆளும் வர்க்கங்களில் தவறான கொள்கைகளால் மக்களின் துயரங்கள் அதிகரிக்கும்போது - அதற்கு தீர்வு காண அதேஆளும் வர்க்கத்தைச் சார்ந்த பிரதான எதிர்கட்சி களிடம் உருப்படியான மாற்றுத்திட்டம் இல்லாத போது- மாற்றுத்திட்டம் கொண்டிருக்கக்கூடிய இடதுசாரி இயக்கங் கள் தேசம் தழுவிய அளவில் பலம்பெறாத நிலையில் மக்கள் பெருமளவில் அவநம்பிக்கை அடைகின்றனர். துயரங் களுக்கு தீர்வு கிடைக்காதா? என்று ஏங்கி தவிக்கின்றனர். இவர்கள் அவர்களின் உணர்வுகளுக்கேற்ப ஆலயங்க ளுக்குச் சென்று ஆண்டவனிடம் முறையிடுவது வியக்கத் தக்க ஒன்றல்ல. கம்யூனிஸ்ட்டுகள் கடவுள் நம்பிக்கை குறித்து விவாதிப் பதா என சிலர் வியப்படையலாம். கம்யூனிஸ்ட்டுகளுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா? இல்லையா? என்பதல்ல பிரச்சனை. கோடிக்கணக்கான மக்கள் தங்கள் துயரங் களைத் தாங்கி ‘இறை நம்பிக்கையுடன்’ கோவில்களுக்கு அணிவகுத்துச் செல்கிறார்கள் என்பதே இன்றைய எதார்த்தம்.

இதை கம்யூனிஸ்ட்டுகள் நன்கு புரிந்தே வைத்துள்ளனர். இச்சூழலில், இன்றைய சமூக அமைப்பு சாதியால் ஒடுக்கப்படும் தலித் மக்களின் ஆலய நுழைவு மற்றும் வழி பாட்டு உரிமைகளைக் கூட பல ஆலயங்களில் அனுமதிக்க மறுக்கிறது என்பது வெட்கக்கேடு. தலித் மக்கள் ஆல யத்திற்குள் நுழைந்தால் கோவிலும், சாமியும் தீட்டுப்பட்டு விடுமாம். இதைக் கூறி அனுமதி மறுக்கின்றனர் சாதிய சக்திகள். ஆயினும் செங்கொடி இயக்கம் தலையிட்டு தலித் மக்களைத் திரட்டி போராட்டங்களின் மூலம் ஏராளமான கோவில்களில் தலித் மக்களின் வழிபாட்டு உரிமையை மீட்டுத் தந்தது. இதற்கான ஏராளமான விபரங்கள் நம் கண்முன் விரிந்து கிடக்கின்றன. திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் தாலுகா வில் அமைந்துள்ள கிராமம் பந்தப்புளி. இக்கிராமத்தில் மாரியம்மன் கோவில் என்பது பிரபலமான கோவிலாகும். இக்கோவில் கட்டப்பட்டபோது இதன் கட்டுமானப் பணி களுக்காக நிதியளிப்பதில் தலித் மக்கள் குறிப்பிடத்தக்க பங்கு வகித்துள்ளனர். வருடா வருடம் கோவிலுக்கான வரி கட்டுவதிலும் இவர்கள் இதர பகுதி மக்களுக்கு சளைத்த வர்கள் அல்ல. ஆனால் கோவில் கட்டி முடித்ததும், கோவில் நிர்வா கத்தை ஒட்டுமொத்தமாக தன் கையில் எடுத்துக் கொண்டனர் சாதி இந்துக்களின் பிரதிநிதிகள். இவர்கள் தலித் மக்களை கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை. தலித் மக்கள் வழிபாடு நடத்த வந்தபோது அவர்களை காவல்துறை உதவியுடன் தடுத்து நிறுத்தி விட்டனர். காரணம் உள்ளே அனுமதித்தால் கோவில் தீட்டுப்பட்டுவிடும் என்பதுதான். மேலும், தலித் மக்கள் தொடர்ந்து நுழைய முயற்சி மேற்கொண்டிருந்ததால் கோவிலை இழுத்துப்பூட்டி விட்டனர்.

இதனால் மனம் வருந்திய தலித் மக்கள் தமிழக அரசு நிர் வாகத்திடம் முறையிட்டனர். ஆனால் நிர்வாகமும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் சாதித்தது. இதனால் ஆத்திரமடைந்த தலித் மக்கள் தங்கள் கண்டனத்தையும், உணர்வுகளையும் வெளிப்படுத்தும் வகையில் சங்கரன் கோவில் அருகில் உள்ள காரிகாத்தான் மலையின் மீது ஏறி குடும்பத்தோடு குடியமர்ந்தனர். இப்போதும் அரசு நிர்வாகம் இவர்களை ஊருக்குள் அழைத்துவர உருப்படியான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. ஆனால், சிபிஐ (எம்) உடனடியாக களத்தில் இறங்கியது. இதன் மாவட்ட தலைவர்கள் வீ. பழனி, ஆர். கிருஷ்ணன், கே.ஜி. பாஸ்கரன், உ. முத்துப்பாண்டி மற்றும் சங்கரன் கோவில் தாலுகா குழு தலைவர்கள் தலித் மக்களை நேரில் சந்தித்து அவர்களின் கோரிக்கைக்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர் மட்டுமல்ல அவர்களின் ஆலயப் பிர வேசத்திற்கும் ஏற்பாடு செய்வதாக வாக்குறுதியளித்தனர். இதனால் அம்மக்களிடம் உற்சாகமும், நம்பிக்கையும் ஏற்பட்டது. 12.12.2008 அன்று பந்தப்புளி மாரியம்மன் கோவில் ஆலயப் பிரவேசம் நடைபெறும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் அறிவித்தன. இப்போராட்டத்திற்கு கே. பாலபாரதி எம்.எல்.ஏ., என்.நன்மாறன் எம்.எல்.ஏ., வீ. பழனி, ஆர். கிருஷ் ணன், கே.ஜி. பாஸ்கரன், உ.முத்துப்பாண்டி தலைமை யேற்றனர். நூற்றுக்கணக்கான தலித் மக்களும், செங்கொடி இயக்கத் தோழர்களும் சங்கரன் கோவில் நகரிலிருந்து பந்தப்புளி மாரியம்மன் கோவில் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். அவ்வாறு ஊர்வலம் சென்றபோது வருவாய் கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.) மற்றும் காவல்துறையினர் ஊர்வலத்தை வழிமறித்தனர்.

பந்தப்புளி மாரியம்மன் கோவில் செல்ல அனுமதியில்லை என்று அறிவித்தனர். பாலபாரதிக்கும், ஆர்.டி.ஓ.க்கும் கடும் வாக்குவாதம் நடை பெற்றது. சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கவே ஊர்வலத்தை தடுத்து நிறுத்துவதாக ஆர்.டி.ஓ. தெரிவித்தபோது “நாங்கள் சட்டப்பூர்வமாகவே அமைதியான முறையில் கோவிலுக்குச் சென்று கொண்டிருக்கிறோம். நீங்கள் தான் சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் எங்களை தடுத்து நிறுத்துகிறீர்கள்” என பாலபாரதி ஆவேசத்துடன் பதிலளித்தார். எனினும், சட்டத்திற்கு புறம்பாகவே காவல் துறையினர் அனைவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து 15 நாள் பாளையங்கோட்டை சிறையில் அடைப்பதற்காக பேருந்துகள் மற்றும் வேன்களில் ஏற்றிவிட்டனர். இந்நிலையில் அன்றைய தமிழக முதலமைச்சர் கலைஞர் தலையிட்டு விடுதலை செய்ய உத்தரவிடவே அனைவரும் இரவு 9.30 மணிக்கு விடுவிக்கப்பட்டனர். எனினும், தலித் மக்களின் வழிபாட்டு உரிமையை நிலைநாட்ட சிபிஐ (எம்) தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்- காவல்துறை கண்காணிப்பாளரிடம் வலியுறுத்தியது. வீ. பழனி, ஆர்.கிருஷ்ணன், கே.ஜி.பாஸ்கரன் இதற்கான பெருமுயற்சி எடுத்துக்கொண்டார்கள். கட்சியின் மாநில தலைமையும் தமிழக முதல்வரிடம் தலித் மக்களின் வழிபாட்டு உரிமையை நிலைநாட்டிட உடனடியாக தலையிடுமாறு வலியுறுத்தியது. இப்பின்னணியில் அரசு நிர்வாகம் கோவிலை திறந்துவிட வும், தலித் மக்களை வழிபட அனுமதிக்கவும் முடிவு செய்தது. அன்றைய நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க் அவர்கள் காவலர்களுடன் பந்தப்புளி வந்து கோவிலின் பூட்டை உடைத்து தலித் மக்கள் உள்ளே நுழைந்து வழிபட அனுமதித்தார்.

தாங்களும் சேர்ந்து உருவாக்கிய கோவி லுக்குள் நுழைய முடியாதபடி சாதிய சக்திகள் தடுக்கின்றனவே என்ற ஏக்கத்துடன் இருந்த தலித் மக்கள் சிபிஐ (எம்) போராட்டங் களாலும், முயற்சிகளாலும் நிலைமையில் மாற்றம் ஏற்பட்டதை நேரில் கண்டனர். கோவிலுக்குள் நுழைந்த தலித் மக்களின் ஆனந்தத்திற்கும், உணர்ச்சிபிரவாகத்திற்கும் எல்லையே இல்லை. நெகிழ்ச்சியோடு வழிபாடு நடத்தினர். இதற்காக போராடிய சிபிஐ (எம்), தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர்களுக்கு உளப்பூர்வமான நன்றியையும், பாராட்டுதலை யும் வெளிப்படுத்தினர். ஆனால் சாதிய சக்திகளின் தூண்டுதலால் சாதி இந்துக்கள் வேறு முடிவுக்கு வந்தனர். தலித் மக்களின் நுழைவால் கோவில் தீட்டுப்பட்டுவிட்டதாகவும் இதனால் தாங்கள் கோவிலுக்கு வரவோ, வழிபாடு நடத்தவோ போவதில்லை எனவும் அவர்கள் அறிவித்து விட்டனர். இன்றுவரை அவர்கள் இக்கோவிலுக்கு வரவும் இல்லை. கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய முக்கிய அம்சம் என்னவென்றால் சாதி இந்துக்களான பிற்படுத்தப் பட்ட மக்களிலும் தலித் மக்களிலும் மிகக் கணிசமானவர்கள் உழைப்பாளிகள். வர்க்கம் என்ற முறையில் இவர்கள் ஒன்றுபட வேண்டியவர்கள். ஆனால், இந்திய சாதியமைப்பு இவர்களி டையே பகைமையையும், பிளவையும் ஏற்படுத்தி வருகிறது. சாதிய அமைப்பை ஒழிக்க போராடாமல் உழைக்கும் வர்க்க ஒற்றுமை சாத்தியமல்ல என்பதை உணர வேண்டும். * விருதுநகர் மாவட்டம், பழைய செந்நெல்குளம் என்ற கிராமத்தில் அமைந்துள்ள காளியம்மன் கோவிலில் ஒரு காலத்தில் தலித் மக்கள் நுழைந்து வழிபாடு நடத்த முடியாது.

1998ல் தலித் இளைஞர்கள் சிலர் தடையை மீறி கோவிலுக்குள் நுழைந்து விடுகின்றனர். கோவில் தீட்டுப்பட்டுவிட்டதாக கூறி கோவிலை இழுத்துப்பூட்டி விடுகின்றனர் சாதிய சக்திகள். தலித் மக்கள் தங்களுக்கு என முப்பிடாதியம்மன் கோவில் ஒன்றை கட்டத் துவங்கினர். ஆனால் சாதிய சக்திகள் அதிலும் வலுவாக தலையிட்டு அக்கோவில் கட்டுமானப் பணிகளையும் தடுத்து நிறுத்தி விட்டனர்.  இத்தகு சூழலில் தான் சிபிஐ (எம்) களத்தில் இறங்கி நூற்றுக்கணக்கான தலித் மக்களைத் திரட்டி 4.7.2003ல் காளியம்மன் கோவில் ஆலயப்பிரவேசத்திற்காக ஊர்வலமாக அழைத்துச் சென்றது. ஆனால், என்ன கொடுமை?. கோவி லுக்குச் செல்லும் வழியில் ஏராளமானோரை சாதியவெறி சக்திகள் அணி திரட்டி தலித் மக்களை வழிமறித்தனர். இவர்களில் கணிசமானவர்கள் பெண்கள். சாதிய சக்திகள் வரிந்து கட்டிக் கொண்டு செய்த ஏற்பாடு இது. மறுபுறம், சாதிய சக்திகளை அப்புறப்படுத்தி தலித் மக்களின் உரிமையை சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய காவல்துறையினர் தமது கடமையை நிறைவேற்றவில்லை. மாறாக, அவர்களும் தமது பங்கிற்கு ஆலயத்திற்குள் செல்ல விடாமல் தலித் மக்களை வழிமறித்தனர். பதட்டமான சூழ்நிலை யிலும் பதறாமல் உறுதிகாட்டியது சிபிஐ (எம்). அதிகாரி களுடன் சிபிஐ (எம்) கடுமையான வாக்குவாதம் செய்தது. செங்கொடி இயக்கமும், தலித்  மக்களும் காட்டிய உறுதியான நிலைபாடு காரணமாக வேறுவழியின்றி அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இருதரப்புக்கும் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன்படி இப்பிரச்சனையை நீதி மன்றத்திற்கு கொண்டு சென்று தீர்ப்பை பெறுவது - அதுவரை கோவிலை பூட்டி அரசு நிர்வாகம் எடுத்துக் கொள்வது என உடன்பாடு ஏற்பட்டது.

இதன்பிறகும், காவல்துறை அநீதியாகவும், பாரபட்சமாக வும் நடந்து கொண்டது. ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு தலித் மக்களின் உரிமைகளுக்காக போராடிய சிபிஐ (எம்) தோழர்கள் 75 பேர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ததது. ஆனால் ஆலயத்திற்குச் சென்ற தலித் மக்களை சட்டவிரோதமாக மறித்த சாதிய சக்திகள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. ஆயினும் மார்க்சிஸ்ட்டுகள் உறுதியுடன் செயல்பட்டனர். கே. பாலபாரதி எம்.எல்.ஏ., தலைமையில் வழிபாட்டு உரிமைக்காக பொங்கல் வைத்து போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மதுரை சரக டி.ஐ.ஜி மற்றும் விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலையிட்டு 12.9.2003ல் பேச்சு வார்த்தை நடத்தினர். கே. பாலபாரதி, பி. சுகந்தி இருவரும் கலந்து கொண்டனர். முப்பிடாதியம்மன் கோவில் கட்டுமானப் பணிகளை மீண்டும் துவக்க அனுமதி கிடைத்தது. இதனால் பொங்கல் வைக்கும் போராட்டம் தள்ளி வைக்கப்பட்டது. ஆயினும் காளியம்மன் கோவில் ஆலய நுழைவு பிரச்ச னைக்கு எந்த தீர்வும் ஏற்டாத நிலை நீடித்தது. இப்பிரச் சனையை மகளிர் ஆணையத்தின் கவனத்திற்கு மாதர் சங்கம் சார்பாக பி. சுகந்தி கொண்டு சென்றார். மகளிர் ஆணையம் இப்பிரச்சனை குறித்து விசாரணை நடத்தியது. இந்த விசாரணை யில் உ.வாசுகி கலந்து கொண்டார். விசாரணையின் முடிவாக காளியம்மன் கோவிலை திறக்கவும், தலித் மக்கள் வழிபாடு நடத்தவும் உரிமை வழங்கி உத்தரவிடப்பட்டது.

காளியம்மன் கோவிலுக்குள் நுழையவே முடியாதோ என்ற நிலையை உடைத்து 14.11.2003ல் தலித் மக்கள் ஆலய பிரவேசம் நடந்தேறியது. வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத மகிழ்ச்சியை அம்மக்களின் முகங்களில் காண முடிந்தது. தலித் மக்கள் வெளிப்படுத்திய உணர்வுகள் சிபிஐ (எம்) தலைவர்களை பரவசப்படுத்தியது. எஸ்.ஏ.பெருமாள் உள்ளிட்ட தலைவர்கள் இந்நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டு தலித் மக்களால் கௌரவிக்கப் பட்டனர். தங்களது நீண்ட கால கனவை நிறைவேற்றித் தந்த சிபிஐ (எம்) மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தை நெஞ்சாரப் பாராட்டினர் தலித் மக்கள். மேற்கண்ட கோவில்கள் மட்டுமல்ல பல ஆலயங்கள் சிபிஐ(எம்) நடத்திய போராட்டங்களால் தடைகள் தகர்க்கப்பட்டு தலித் மக்களின் வழிபாட்டிற்காக திறந்து விடப்பட்டுள்ளன.