tamilnadu

img

கொரோனா ஊரடங்கு.... புற்றுநோய் பாதிக்கப்பட்டவருக்கு உதவிக்கரம் நீட்டிய வாலிபர் சங்கம்

மதுரை:
கொரோனா பாதிப்பால் தமிழகம் முழுவதும் 144 தடையுத்தரவு அமலில் உள்ளது. இந்த நிலையில் புற்றுநோய் பாதிக்கப்பட்டவருக்கு வாலிபர் சங்கம் உதவிக்கரம் நீட்டியுள்ளது.

தேனி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் தனக்கான மருந்துகளை பெறுவதற்காக சென்னை சென்று பெற்றுவருவார்.தற்போது 144 தடையுத்தரவு அமலில் இருப்பதால் அவரால் சென்னை செல்ல முடியவில்லை. மாத்திரை கட்டாயம் என்ற நிலையில் அந்த இளைஞர் வாலிபர் சங்கத்தை தொடர்பு கொண்டுள்ளார். இதையடுத்து வாலிபர் சங்கத்தினர் மருந்துகளை பெறுவதற்கு முயற்சி மேற்கொண்டனர். இறுதியில் அந்த மருந்து மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் இருப்பதையறிந்து மாத்திரைகள் வாங்கப்பட்டன. மதுரையிலிருந்து வெளியாகும் தமிழ் நாளிதழ் செய்தியாளர் ஒருவரின் முயற்சியால் மருந்து சம்பந்தப்பட்ட கூடலூர் இளைஞருக்கு கிடைத்தது.

அர்ப்பணிப்பு மிக்க இந்தப் பணியில் வாலிபர் சங்க மாநிலத் துணைச் செயலாளர் பாலசந்திரபோஸ், தேனி மாவட்டச் செயலாளர் லெனின், மதுரை தெற்குவாசல் பகுதிக்குழு தலைவர்  போனிபேஸ், செயலாளர்  சதாம் உசைன், மாவட்டத் துணைத் தலைவர் வடிவேல் உள்ளிட்ட பலர் ஈடுபட்டனர்.