பட்டியலின மாணவர்களுக்கு எதிரான சாதி அடக்குமுறை கொல்லங்கரையில் நீடிக்கும் அநீதி
தஞ்சாவூர் மாவட்டம் வானம் பார்த்த பகுதியில் உள்ள கொல்லங்கரை கிராமம். திராவிடக் கொள்கையின் பற்றாளர்கள் நிறைந்த இந்த ஊரில் சாதி வேறுபாடு இருக்காது என்று எதிர்பார்ப்பது நியாயமே. ஆனால் இங்கு நடக்கும் சம்பவங்கள் அருவருக்கத்தக்கவை. பிரச்சனையின் தொடக்கம் கொல்லங்கரையில் சுமார் ஆயிரம் பட்டியலின மக்கள் வாழ்கிறார்கள். ஊர் தோன்றிய காலம் முதல் இவர்கள் அரசு பொதுத் தார்சாலையைப் பயன்படுத்தி வந்தார்கள். அரசு உயர்நிலைப் பள்ளி யில் படிக்கும் 96 பட்டியலின மாணவர் களும் இதே சாலை வழியாகத்தான் பள்ளிக்குச் செல்கிறார்கள். பத்தாண்டுகளுக்கு முன் ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் வாங்கு வதில் தகராறு. சாதி ஆதிக்க வகுப்பைச் சேர்ந்த சாமிநாதனுக்கும் பட்டியலின இளைஞர் ஒருவருக்கும் மோதல். சாமி நாதன் மகன் தியாகராஜன் ராணுவத்தி லிருந்து விடுப்பில் வந்திருந்தபோது, பட்டியலின தம்பதியை சாதியை இழி வாகப் பேசி தாக்குகிறார். இதனால் அவர் மீது தீண்டாமை வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்கு. காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதையாக தியாகராஜன் ராணுவ வேலையை இழக்கிறார். அந்த வெறுப்பால் பழிவாங்க, பட்டியலின மக்க ளும் மாணவர்களும் பயன்படுத்தி வந்த தார்சாலையை மறித்து கம்பி வேலி போடுகிறார். போராட்டங்களும் பேச்சுவார்த்தைகளும் வருவாய்த்துறையில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. 2024 ஜூன் மாதம் பாதிக்கப்பட்ட மக்கள் சாலை மறியல் நடத்து கிறார்கள். காவல்துறையும் வருவாய்த் துறையும் பேச்சுவார்த்தை நடத்தி வேலி திறக்கப்படுகிறது. ஆறேழு மாதங்கள் சாலையைப் பயன்படுத்திய பிறகு, திடீரென்று மீண்டும் சாலை அடைக்கப்படுகிறது. பொக்லைன் இயந்திரம் மூலம் தார்சாலையை தோண்டி பள்ளப்படுத்தி விடுகிறார். ஊர் பிரமுகர்களிடம் சொன்னாலும் பலனில்லை. “இது என்னுடைய நிலம். நான் எது வேண்டு மானாலும் செய்வேன். அந்த சாதிப் பயலுங்களுக்கு நீங்கள் சப்போர்ட்டா, பார்ப்போம்” என்று மிரட்டுகிறார். உயர்நீதிமன்றத்தில் அரசுமீது தொடுத்த வழக்கின்படி, சர்வே எண் 76A/18D - இது வண்டிப் பாதை என ‘அ’ பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் “கோர்ட்டு உத்தரவு இருக் கிறது” என்று பொய்யான தகவல்களை அதிகாரிகளிடம் சொல்லி தப்பித்து வருகிறார். இந்நிலையில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நிர்வாகிகள் கள ஆய்வு செய்கிறார்கள். வருவாய்த்துறை, காவல்துறை, மாவட்ட ஆட்சியர் ஆகியோரைச் சந்திக் கிறார்கள். நடவடிக்கை இல்லை. 2025 மே மாதம் 2ஆம் தேதி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன் உண்ணாவிரதப் போராட்டம். முத்த ரப்பு பேச்சுவார்த்தை நடக்கிறது. ஒப்பந்தத்தில் கையொப்பம் போடப்படு கிறது. ஆனால் கம்பி வேலி அகற்றப்பட வில்லை. மக்களே வேலியைப் பிரிக்கிறார்கள். அதிர வைத்த தாக்குதல் மீண்டும் மீண்டும் சாலை அடைக்கப் படுகிறது. பிள்ளைகள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் தவிக்கிறார்கள். வகுப்பு தொடங்கும் முன் போய்விட வேண்டுமே என்று குழம்பி, அழுது கொண்டு வீடு திரும்புகிறார்கள். இளை ஞர்கள் சிறிய அளவில் அடைப்பைத் திறந்து மாணவர்களை அழைத்துச் செல்கிறார்கள். அங்குதான் விபரீதம் அரங்கேறுகிறது. பள்ளிப் பிள்ளைகளை வழிமறித்து கையில் கம்பு, சாதியைக் கேவலமாகச் சொல்லி திட்டிக்கொண்டே விரட்டி விரட்டி அடிக்கின்றார் தியாகராஜன். மூன்று மாணவர்கள் காயமடைந்து தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் சிகிச்சை பெறுகிறார்கள். இந்தச் சம்பவம் வைரலாகப் பரவி பெரும் பரபரப்பானது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு நேரில் வந்து பார்த்துவிட்டு உடனடியாக போராட்டத்தை அறிவிக்க, வருவாய் வட்டாட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகளிடம் “இன்னும் இரண்டு நாளில் சாலைக்கு நல்ல தீர்வு காணப்படும். அதற்கான ஆவணங்கள் தயார் செய்து வருகிறோம்” என்று சொல்கிறார்கள். “சரி சார், இரண்டு நாளைக்கு பரீட்சை எழுதப் போக வேண்டும், அதற்கு என்ன வழி?” என்று கேட்டபோது வேன் வைத்து பிள்ளைகளைப் பள்ளியில் விட்டுவிட்டு மாலையில் அழைத்து வந்து வீட்டில் விடுவதாக உறுதியளிக்கிறார்கள். அது நடைமுறைப்படுத்தப்படுகிறது. இது பாராட்டப்பட வேண்டியது தான். ஆனால், வருவாய்த் துறை “இரண்டு நாளில் பிரச்சனை முடிந்துவிடும்” என்று சொல்லியது. இப்போது அது ஆமை நடையாய்ப் போகிறது. கொல்லங்கரை சாலையை பட்டியலின மக்களே அதிரடி யாக திறப்பதற்கு முன்பு மாநில அரசும், மாவட்ட ஆட்சியரும் தலையிடுவார் களா? பட்டியலின மக்களின் கவலை நிறைவேறுமா, அல்லது கனவாகுமா?