tamilnadu

img

விழுப்புரத்தில் இன்று மாபெரும் செம்படைப் பேரணி

அரசியல் அணுகுமுறை; பணிகள் குறித்து மாநாடு தீர்மானிக்கும்! -  மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேட்டி

சென்னை, ஜன. 2 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் அணுகு முறை, எதிர்காலப் பணி களை கட்சியின் 24-ஆவது மாநில மாநாடு தீர்மானிக்கும் என்று மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறி னார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 24-ஆவது மாநாடு, விழுப் புரத்தில் தோழர் சீத்தாராம் யெச்சூரி அரங்கில் (ஆனந்தா திருமண மகால், விழுப்புரம்) ஜனவரி 3 துவங்கி 5 வரை மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது. இதையொட்டி, விழுப்புரம் வருகை தந்த  கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பால கிருஷ்ணன், வியாழனன்று (ஜன.2) செய்தி யாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: இந்த புத்தாண்டு தமிழக உழைப்பாளி மக்கள், நடுத்தர மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தையும், வளர்ச்சியையும் ஏற்படுத்து வதாகவும், சாதி- மத ஒடுக்குமுறைகளைக் களைந்து ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குகிற ஆண்டாக அமையும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு விதிப்படி 3 ஆண்டுக்கு ஒருமுறை அமைப்பு மாநாடுகள் நடைபெறும். கிளை மாநாடு தொடங்கி, அகில இந்திய மாநாடு வரை நடைபெறும். அந்த வகையில், தமிழ்நாட்டில் 11 ஆயிரத்து 300 கிளை மாநாடுகள், 459 தாலுகா - ஒன்றிய, நகர மற்றும் இடைக்குழு மாநாடுகள், 41 மாவட்ட மாநாடுகள் நடந்து முடிந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக மாநில 24-ஆவது மாநாடு ஜனவரி 3 முதல் 5 வரை விழுப்புரத்தில் நடைபெறுகிறது. இதன்பிறகு ஏப்ரல் 2 முதல் 8 வரை மதுரையில் அகில இந்திய 24-ஆவது மாநாடு நடைபெறுகிறது. மாநில மாநாட்டில் 600-க்கும் மேற்பட்ட பிரதி நிதிகள் கலந்து கொள்கின்றனர். ஜனவரி 3 (இன்று) மாலை பிரம்மாண்டமான செந்தொண்டர் அணிவகுப்பு - பேரணி, பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. அரசியல் தலைமைக் குழு ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்காரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிருந்தாகாரத், எம்.ஏ. பேபி, ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

மாநாட்டின் இலக்கு

இந்த மாநாடு, மக்களின் பிரச்சனைகளை விவாதிக்கும் அதேநேரத்தில், தமிழ்நாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும்; அரசியல் பணிகள் எவ்வாறு முன்னேற வேண்டும் என்பதையும் விவாதிக்கும். ஒன்றிய அரசு மாநிலங்கள் மீது அனுதின மும் தொடுத்து வரும் பல்வேறு விதமான தாக்கு தல்களை எதிர்த்து, மாநில உரிமைப் பாது காப்பு, நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கச் செய்வது, இயற்கைப் பேரிடர்களுக்கு முழு நிவாரணம் கொடுக்க வற்புறுத்துவது, தமிழ் உள்ளிட்ட அட்டவணை மொழிகளை ஆட்சிமொழியாக்க கோருவது, உச்சநீதிமன்றத்தின் கிளையை சென்னையில் நிறுவுவது உள்ளிட்ட கோரிக்கை களையும் மாநாடு வலியுறுத்த உள்ளது. மாநில அரசுகளை ஒழித்துக்கட்டுகிற ஒன்றிய அரசின் கொள்கையை எதிர்த்து, மத  அடிப்படையில் சிறுபான்மை மக்களைக் குறி வைத்து தாக்கும் இந்துத்துவா கோட்பாட்டை எதிர்த்து வலுமிக்க இயக்கத்தை முன்னெடுக்க உள்ளோம். தேர்தல் நேரத்தில் பாஜக-வை வீழ்த்த மதச் சார்பற்ற கட்சிகள் இணைந்து பணியாற்று கிறோம். அதையும் தாண்டி இந்துத்துவாவை எதிர்த்து வலுவான கருத்தியல் போராட்டம் நடைபெற வேண்டியது அவசியம். அந்தப் போராட்டத்தை வலுவாக முன்னெடுக்கும் வழிமுறைகளை மாநாடு தீர்மானிக்கும். விடுதலை அடைந்து 75 ஆண்டுகளைக் கடந்தும் மக்களின் வாழ்க்கை நெருக்கடி மிகுந்ததாக உள்ளது. வேலைவாய்ப்பின்மை நீடிக்கிறது.  வேலையில் இருப்பவர்களுக்கு பணி நிரந்தரம் இல்லை. சமூகப் பாது காப்பு இல்லை, பட்டியலின மக்கள் மீது தீண்டாமைக் கொடுமை யும், ஒடுக்குமுறையும் அதிகரித்து வருகிறது. வழிபடும் உரிமை கூட மறுக்கப்படுகிறது. பெண்கள், குழந்தைகள் மீது அடுக்கடுக்கான குற்றங்கள் நிகழ்ந்து கொண்டி ருக்கின்றன. விவசாயிகள், தொழி லாளிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப் படுகிறது. இவற்றிற்கு தீர்வுகாண இடதுசாரி மாற்றை நோக்கி மக்கள் திரள வேண்டும். அதனை மக்களிடம் வலு வாகக் கொண்டு செல்வது குறித்து மாநாடு விவாதிக்கும். இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் கூறினார். இதன் பின்னர் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் கே. பாலகிருஷ்ணன் பதிலளித்தார்.  அண்ணா பல்கலை. சம்பவம் அப்போது, அண்ணா பல்கலைக் கழகம் தொடர்பான கேள்விக்கு “அண்ணா பல்கலைக்கழக சம்பவம் கொடுமையானது, தலைக்குனிவை ஏற்படுத்துகிறது. இதில் ஈடுபட்ட  குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கடும் தண்டனைக்கு உட்படுத்த வேண்டும்” என்று கே. பால கிருஷ்ணன் கூறினார். “பாலியல் வன்முறை கொடூர மானது. பாதிக்கப்பட்டவர்களை பகிரங்கப்படுத்துவது அதைவிட கொடியது. எப்ஐஆர் வெளியானது மிக அதிர்ச்சி அளிக்கிறது” என்ற அவர், “ஒன்றிய அரசின் தேசிய தகவல் மையத்தில் (என்ஐசி) ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் எப்ஐஆர் வெளியானது என்கிறார்கள். இதுதொடர்பாக என்ஐசி-யிடம் அரசு விசாரணை நடத்த வேண்டும்” என்றார். “வழக்கு விசாரணையில் காவல்துறை திட்டமிட்டு காலதாமதம் செய்ததாக தெரியவில்லை” என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆளுநரே பிரச்சனைக்கு காரணம்

“அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் இல்லை. துணை வேந்தரை நியமிக்க அரசு தேடுதல் குழுவை அமைத்தால், அதனை ஆளு நர் ஏற்க மறுக்கிறார். பல்கலைக் கழகத்தில் துணைவேந்தர் இல்லை யென்றால் யார் பொறுப்பெடுத்து செய்வார்கள்? உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை கல்விநிலையங் களில் அமல்படுத்த வேண்டும். அண்ணா பல்கலை. பிரச்சனைக்கு ஆளுநர்தான் காரணம். இதை யெல்லாம் பாஜக தலைவர் அண்ணா மலை கேள்வி கேட்காதது ஏன்?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார். “அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கை அரசியலாக்குவதாக உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்திருப்பது சரியானது. நடந்த சம்பவத்தில் நீதி  வேண்டும் என்பதற்கு மாறாக, திமுக ஆட்சியை தூக்கி எறியும் வரை செருப்பணியமாட்டேன் என்று ஒரு வர் சொன்னால் அவரின் நோக்கம்  என்ன? ஒரு தவறான சம்பவத்தை கண்டிக்க, இயக்கம் நடத்த அனை வருக்கும் உரிமை உள்ளது.  ஆனால், பொள்ளாச்சி சம்பவத்தின்போது அதிமுக ஏன்  போராடவில்லை? அந்தச் சம்ப வத்தில் உண்மையான குற்றவாளி களைக் கைது செய்ய மறுத்தது ஏன்?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த  கே. பாலகிருஷ்ணன், “இதுபோன்ற சம்பவங்களை அரசியல் ஆதா யத்திற்கு பயன்படுத்துவது சரியல்ல” என்றும், “பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க எல்லைக்குள் போராட்டம் நடத்த வேண்டும்” என்றார்.  நீதிமன்ற நடைமுறைகளால் பொள்ளாச்சி வழக்கு காலதாமதமாகி வருவதாகவும் குறிப்பிட்டார்.

முதலமைச்சரைச் சந்திப்போம்

“தமிழக காவல்துறையானது, ஜனநாயக முறையில் நடைபெறும் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், போராட்டம், தெருமுனைக் கூட்டங் களுக்கு அனுமதி தர மறுப்பது, கைது நடவடிக்கை மேற்கொள்வது தேவை யற்றது.  இது அரசியல் சாசனம் வழங்கி யுள்ள அடிப்படை உரிமைக்கு எதிரானது” என்ற விமர்சனத்தை முன்வைத்த கே. பாலகிருஷ்ணன்,  இது தொடர்பாக முதலமைச்சரை சந்தித்துப் பேச உள்ளதாகவும், கிராமத்தில் பட்டா கேட்டு இயக்கம் நடத்தினால், அதற்கும் கூடவா கைது செய்வார்கள், என்றும் கேள்வி எழுப்பினார்.

நிவாரணத்தை மறுக்கும் ஒன்றிய அரசு

“3 ஆண்டுகளாக புயல் - வெள்ளம் உள்ளிட்ட இயற்கைப் பேரி டர்களால் தமிழகம் பாதிக்கப் பட்டுள்ளது. விழுப்புரத்தில் இந்தாண்டு வந்ததுபோன்று வெள்ளம் வந்ததில்லை. பெஞ்சால் புயல் வந்தது. ஒன்றிய அரசு என்ன உதவி செய்தது? மாநில அரசு நிதி நெருக்கடியில் உள்ளபோது, அதை  ஒன்றிய அரசு ஈடுசெய்ய வேண்டும்.  அவ்வாறு ஒன்றிய அரசு செய்ய வில்லை. பாரபட்சமாக நடக்கிறது. உ.பி.,யில் பாலம் கட்ட 2 ஆயிரம் கோடி ஒதுக்கும் ஒன்றிய அரசு, தமி ழகத்தில் பல பாலங்கள் அடித்துச் செல்லப்பட்ட பிறகும் நிதி ஒதுக்க மறுப்பது ஏன்? விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய மறுப்பது ஏன்?” என்று கேட்ட கே. பாலகிருஷ்ணன், “மோடி அரசு  வருவதற்கு முன்புவரை இயற்கை இடர்பாடு ஏற்பட்டால் ஒன்றிய அரசு  நிதியுதவி செய்யும். மாநில அரசு  கோருகிற அளவிற்கு தராவிட்டா லும், நான்கில் ஒரு பங்கையாவது தந்தார்கள்” என்றார். கடனில் தள்ளப்படும்  மாநில அரசுகள் “மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு உரிய நிதி பங்கீட்டைத் தருவ தில்லை. ஜிஎஸ்டி அமலாக்கிய பிறகு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட மானியம் கொடுத்து வந்ததை 2022-ஆம் ஆண்டு முதல் பாஜக அரசு நிறுத்தி விட்டது. பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்க மறுக்கிறது. தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தவில்லை என்பதற்கு பழிவாங்கும் நடவடிக்கை யாக, தமிழகத்திற்கு 2461 கோடி ரூபா யைத் தர மறுக்கிறது. இதனால் பள்ளி களை மூடிவிட முடியுமா? எனவே, மாநில அரசு கடன் வாங்கித்தான் செல விட வேண்டியது உள்ளது. ஒன்றிய அரசு நிதி தர மறுக்கும் நிலையில், வரு வாயைப் பெருக்க மாநில அரசுக்கு வேறு வழியில்லை. ஒன்றிய அரசின்  பாரபட்சமான போக்கே, மாநில அர சுகள் கடன் வாங்கக் காரணமாக உள் ளது” எனவும் கே. பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டினார். இந்த செய்தியாளர் சந்திப்பின் போது மத்தியக்குழு உறுப்பினர் பெ. சண்முகம், மாநிலச் செயற்குழு உறுப்பினர் டி. ரவீந்திரன், விழுப்புரம் மாவட்டச் செயலாளர் என். சுப்பிர மணியன், வரவேற்புக்குழுத் தலை வர் ஆர். ராமமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

கல்வி அமைச்சரின் விளக்கம் வரவேற்கத்தக்கது

விழுப்புரம் பேட்டியின்போது, அரசுப் பள்ளி தனியார்மயம் தொடர்பாக அமைச்சர் அளித்திருக்கும் விளக்கம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த கே. பாலகிருஷ்ணன், “500 அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளிகள் தத்தெடுக்கும் என்று ஊடகங்களில் வந்த செய்தியை அடிப்படையாக வைத்துதான் அறிக்கை கொடுக்கிறோம். செய்தி வந்ததும் அரசோ, அமைச்சரோ மறுக்கவில்லை. எனவே, அறிக்கை விட வேண்டிய தேவை எழுந்தது. தற்போது, அமைச்சர் அதுபோன்று செய்யவில்லை என்று விளக்கம் அளித்திருப்பது நல்லது, வரவேற்கிறோம்” என்று தெரிவித்தார்.  “தனியார் பள்ளிகள் அரசு பள்ளிகளுக்கு உதவி செய்வது நல்லது தான். ஆனால், தனியார் பள்ளிகளே அரசுப் பள்ளிகளை நேரடியாக தேர்வு செய்து நிதியை வழங்காமல் அரசு அல்லது ஆட்சியரிடம் பணத்தை தரட்டும். எந்தப் பள்ளிக்கு தேவை  என்று  அரசு முடிவு செய்யட்டும்” என்ற அவர், “இத்தகைய அணுகுமுறையை கடைப்பிடிக்கப்  படாத பட்சத்தில், அரசுப்பள்ளி படிப்படியாக தனியார்மயமாக்கப்பட்டு விடுமோ என்ற அச்சம் எழுவது இயல்பானதே!” என்றும் அவர் குறிப்பிட்டார்.