மொழிகள் மீதான தாக்குதல் வடகிழக்கில் உள்ள 19 பழங்குடி
மொழிகளை இந்திமயமாக்கும் முயற்சியில் பாஜக இறங்கியிருக்கிறது. திரிபுராவில் 2011 ஆம் ஆண்டுக் கணக்குப்படி கோக்போரோக் மொழியை 8,80,537 பேர் பேசுகிறார்கள். இவர்கள் மாநில மக்கள் தொகையில் 30 விழுக்காட்டினர். மாநிலத்தின் அலுவல் மொழிகளில் ஒன்றாக 1979 ஆம் ஆண்டில் கோக்போரோக்(Kokborok)கை இடது முன்னணி அரசு சட்டபூர்வமாக்கியது. அந்த மொழியை மேம்படுத்த தனி இயக்குநரகத்தை உருவாக்கினார்கள். கோக்போரோக்கை மட்டுமின்றி, விஷ்ணுபிரியா, சக்மா, ஹலாம், குகி-மிஸோ, மணிப்பூரி, மோக், காரோ ஆகிய மொழிகளின் மேம்பாட்டையும் இந்த இயக்குநரகம் மேற்கொண்டு வந்தது. தற்போது வங்க எழுத்துருவில் கோக்போரோக் எழுதப்படுகிறது. இதை ரோமன் எழுத்துருவாக மாற்ற வேண்டும் என்று போரோக் பழங்குடியினத்தினர் கோரி வருகிறார்கள். கோக்போரோக் உள்ளிட்ட 19 மொழிகள் தேவநாகரி எழுத்துருவை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பாஜக முரண்டு பிடித்துக் கொண்டிருக்கிறது. இடது முன்னணி ஆட்சியில் பெற்ற வளர்ச்சியை குலைக்கும் வேலை தொடர்கிறது.
மயக்கம் என்ன.. இந்த மவுனம் என்ன..!
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் உள்ள பத்மஜா நாயுடு இமாலய விலங்குகள் பூங்காவில் வயதில் மூத்த ஐந்து புலிகளில் ஒன்று சாம்ராட். 20 வயதான இந்த வங்கப் புலிக்கு வலது முன்னங்கால் நகம் பெரிதாக வளர்ந்து விட்டது. பல நாட்களாக நொண்டி, நொண்டி நடந்து கொண்டிருந்தது. அதை வெட்டி எடுக்க விலங்கு மருத்துவர்கள் மிகவும் தயங்கினர். வயது அதிகம் என்பதால் மயக்க மருந்து கொடுப்பது ஆபத்து என்றனர். சில விலங்கு சிறப்பு மருத்துவர்கள் மயக்க மருந்து கொடுக்காமலேயே அந்த நகத்தை எடுத்துவிட்டனர். புலியும் சிகிச்சை முடியும் வரையில் மவுனமாக இருந்து ஒத்துழைப்பு கொடுத்தது. இப்போது புலிப்பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருக்கிறது.
சூதாட்டம்தான் முடிவு செய்ததா..?
குத்துச் சண்டைப் போட்டிகள் அனைத்திலும் பெரு நிறுவனங்களின் சுரண்டலே அதிகமாக இருந்ததால், தொழில் ரீதியான போட்டிகளில் தங்கள் நாட்டு வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று 1962 இல் பிடல் காஸ்ட்ரோ அறிவித்தார். 2022 இல் இந்த முடிவு மாறியது. ஆன்டி குரூஸ் என்ற கியூப வீரர் தொழில் ரீதியான போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினார். ஒரே ஆண்டில் இலகுரக எடைப்பிரிவில் உலக சாம்பியன் பட்டத்தை வென்றார். 2026 ஜனவரி 24 அன்று தனது பட்டத்தைத் தக்க வைக்கும் போட்டியில், 12 சுற்றுகளுக்குப் பிறகு, நடுவர்கள் முடிவில் பெரும்பான்மை அவருக்கு எதிராக அமைந்தது. ஆனால், சூதாட்டம்தான் இந்தப் பெரும்பான்மையை முடிவு செய்தது என்ற குற்றச்சாட்டு உள்ளது. ஆன்டி குரூஸ்தான் வெற்றி பெறுவார் என்று ஏராளமானோர் பணம் கட்டியிருந்திருக்கிறார்கள்.
கம்யூனில் நான்...
நான் ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவள். கம்யூனிஸ்ட் கட்சியின் கம்யூனில் நான் வளர்ந்தேன். எட்டு சிறிய அறைகளில் எட்டு குடும்பங்கள் வசித்தன. ஒரு குளியலறையையும், ஒரு கழிப்பறையையும் அக்குடும்பங்கள் பகிர்ந்து கொண்டன. ஒன்பது வயது வரையில் நான் அங்குதான் இருந்தேன். பின்னர், மும்பைக்கு மாறினோம். நடிகை ஷப்னா ஆஸ்மி.
தேடுதலில் முந்திய ஜெய் ஷா மகாராஷ்டிர கிரிக்கெட்
வாரியம் தொடர்பான வழக்கில், “மட்டையைப் பிடிக்கத் தெரியாதவர்களை எல்லாம் கிரிக்கெட் நிர்வாகிகள் ஆக்குகிறீர்கள்” என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் மிஸ்ரா காய்ச்சி எடுத்துவிட்டார். இந்தச் செய்தி வந்ததும், இணையதளங்களில் ஜெய் ஷாவின் கிரிக்கெட் “சாதனைகள்” தேடப்பட்டன. மட்டையைப் பிடிக்கத் தெரியாதவர் சர்வதேசக் கிரிக்கெட் கவுன்சில் தலைவரானது எப்படி என்று வலைத்தளங்களில் வறுத்தெடுத்தனர்.
நேபாளத்துல நம்ம ஜென் ஸிதான் ஆட்சி மாற்றத்த ஏற்படுத்துச்சு..
ஆனா, உங்கள மாதிரி ஒரு சூப்பர்மேன் வந்து மாற்றம் ஏற்படுத்துவாருன்னு கனவு கண்டோம்.. ஆனா, அப்படிலாம் நடக்காதுன்னு இப்பதான் தெரியுது.. அடடே... இது வெறும் வேஷம்தானே..
