tamilnadu

img

அகில இந்திய மாநாடு 2.2

ஏ.கே.ஜி. என அன்புடன் அழைக்கப்பட்ட ஏ.கே. கோபாலன் - இந்திய விவசாயிகளின் குரலாக ஒலித்த அந்த பெருந்தலைவர், 1904 அக்டோபரில் வடக்கு மலபாரின் மாக்கேரி கிராமத்தில் பிறந்தார். ஒரு சாதாரண ஆரம்பப் பள்ளி ஆசிரியராகத் துவங்கிய வாழ்க்கை, பின்னாளில் இந்திய உழைக்கும் மக்களின் விடுதலைக்கான போராட்டமாக மலர்ந்தது. விடுதலை வேட்கை அவரை ஆசிரியப் பணியிலிருந்து காங்கிரஸ் இயக்கத்திற்கு இழுத்து வந்தது. மலபாரின் கிராமங்கள் தோறும் நடந்து சென்று சுதந்திரக் கனவுகளை விதைத்தார். குருவாயூர் கோயிலில் தலித் மக்களுக்கான ஆலய நுழைவுப் போராட்டம் அவரது முதல் சமூக நீதிப் போர். சாதி வெறியர்களின் தாக்குதலையும் பொருட்படுத்தாமல், ஆறு மாத சிறைத் தண்டனையையும் ஏற்று, போராட்டத்தை முன்னெடுத்தார். 1932-ல் உப்புச் சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார். கண்ணனூர் சிறையில் தேங்காய் உரிக்க மறுத்ததற்காக கடும் தண்டனை பெற்றார். கடலூர் சிறையில் பைத்தியக்காரர்கள் பிரிவில் அடைக்கப்பட்டபோது, ஆறு நாட்கள் உண்ணாவிரதம் இருந்து போராடினார். 1933-ல் தன் சொந்த வாழ்க்கையில் பெரும் துயரம். மனைவி கல்யாணியை அழைத்து வர சென்றபோது, அடிக்கடி சிறை செல்லும் மருமகனை விரும்பாத மாமனார், மகளை அனுப்ப மறுத்துவிட்டார். தேச விடுதலைக்காக குடும்ப வாழ்வை துறந்த தியாகி! 1935-ல் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியில் இணைந்து தொழிற்சங்கங்களை உருவாக்கினார். வறட்சி, வேலையின்மை ஆகியவற்றுக்கு எதிராக கோழிக்கோட்டிலிருந்து சென்னை வரை பட்டினிப் பேரணி நடத்தினார். திருவாங்கூர் சுயாட்சிப் போராட்டத்தில் பங்கேற்று மீண்டும் சிறை சென்றார். கோட்டயம் காவல் நிலையத்தில் கடும் தடியடி வாங்கியபோதும் உண்ணாவிரதம் இருந்து போராடினார். 1941-ல் வேலூர் சிறையிலிருந்து துணிச்சலாக தப்பி, மூன்று ஆண்டுகள் வட இந்தியாவில் தலைமறைவு வாழ்க்கை. 1947 சுதந்திர தினத்தன்று கூட சிறையிலேயே! சிறிய தேசியக் கொடியுடன் சிறைக் கைதிகளிடம் சுதந்திர உரை நிகழ்த்தினார். 1948-ல் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டபோது மீண்டும் சிறை. கடலூர் சிறையில் அவரையும் தோழர் எம்.ஆர்.வெங்கட்ராமனையும் சுட்டுக்கொல்ல முயன்றபோது, இரு ஆந்திரத் தோழர்கள் தங்கள் உயிரைக் கொடுத்து காப்பாற்றினர். விடுதலைக்குப் பின் மதுரை வந்தபோது, அவரது பேச்சைக் கேட்க 50 பேருடன் துவங்கிய கூட்டம், வைகையாற்றங்கரையில் 20,000 பேராக பெருகியது! 1952-ல் கண்ணனூரிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினரானார். மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக வலுவான குரல் கொடுத்தார். சட்டக் கல்லூரி மாணவி சுசீலாவை மணந்து புதிய வாழ்வு. சோவியத் நாடு, சீனா சென்று ஸ்டாலின், மாவோவுடன் உரையாடிய பெருமை. 1959-ல் அமராவதி காட்டுப்பகுதி மக்களுக்காக 12 நாட்கள் உண்ணாவிரதம். தொடர்ந்து விவசாயிகளுக்கான போராட்டங்கள். 1964-ல் மார்க்சிஸ்ட் கட்சி உருவானபோது அரசியல் தலைமைக்குழு உறுப்பினர். 1974-ல் ரயில்வே தொழிலாளர் போராட்டத்திற்கு ஊக்கமளித்த கடைசி பெரும் போராட்டம். 1977 மார்ச் 24-ல் இயற்கை எய்தினார். திருவனந்தபுரத்திலிருந்து கண்ணனூர் வரை அவரது இறுதிப் பயணத்தில் லட்சக்கணக்கான மக்கள் கண்ணீருடன் விடைகொடுத்தனர். விவசாயிகள், தொழிலாளர்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் என அனைவரின் விடுதலைக்காகவும் வாழ்நாள் முழுவதும் போராடிய அந்த மாமனிதரின் வரலாறு, இந்திய சுதந்திரப் போராட்டத்தின் பொன்னேடுகளில் என்றென்றும் புகழுடன் திகழும்.