மதுரை, ஏப்.17-மதுரை தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யனும் அவரது தந்தையும் வடக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ராஜன் செல்லப்பாவும் வாக்காளர்களை கடந்த இரண்டு தினங்களாக விலை பேசிவந்தனர். இது குறித்துஎழுத்துப்பூர்வமாக புகார் அளித்தும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ச.நடராஜன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.இந்த நிலையில் புதனன்று பிற்பகல் மதுரை தைக்கால் தெருவில் ராஜ்சத்யனுக்கு ஆதரவாக வாக்காளர்களை விலைபேசும் இழி செயலில் ஈடுபட்ட 82-ஆவது வார்டு அதிமுக வட்டச் செயலாளர் எம்.தேவதாஸ், பிச்சைமணி, கணேசன், ராஜகோபால் ஆகியோர் தேர்தல் பறக்கும் படையினரிடம் சிக்கிக்கொண்டனர். தைக்கால் தெருவில் உள்ள அதிமுக அலுவலகத்தை விளக்குத்தூண் காவல் ஆய்வாளர் தலைமையில் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். அப்போது வாக்காளர் பட்டியல் மற்றும் ரூ.19,100 ரொக்கம் சிக்கியது. இதையடுத்து நான்குபேரையும் காவல்துறையினர் பிடித்துச் சென்றனர். இதில் அதிமுக வட்டச் செயலாளர் எம்.தேவதாஸ் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.