கடலூர் அருகே அரசு விரைவு பேருந்துடன் தனியார் பேருந்து மோதி விபத்து
கடலூர், ஏப்.11- கடலூர் அருகே ஆலப்பாக்கத்தில் அரசு விரைவு பேருந்து தனியார் பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் 15 க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்து, கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னையிலிருந்து வேளாங் கண்ணிக்கு அரசு விரைவு பேருந்து சென்றது. வியாழக்கிழமை காலை ஆலப்பாக்கம் அருகே சென்ற பொழுது குள்ளஞ்சாவடி சாலையில் திரும்பிக் கொண்டிருந்த தனியார் பேருந்து மீது அதி வேகமாக மோதியது. மோதிய வேகத்தில் அரசு பேருந்து அருகில் இருந்த வயல் வெளியில் கவிழ்ந்தது. அரசு விரைவு பேருந்தை பச்சையப்பன் (வயது 52) என்பவர் ஓட்டி வந்தார். பேருந்தில் பயணம் செய்த உதயகுமார் (வயது 40), அமிர்தவல்லி (வயது 60), தமிழரசி (வயது 65), காந்திமதி (வயது 40), வீரக்குமார் (வயது 32), தமிழ்பிச்சை (வயது 35), மாலதி (வயது 45), உள்ளிட்ட 15 பேர் காயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனு மதித்தனர். இது குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் கடலூர் சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.