தில்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகம் எதிரில் தெருவோர டீக்கடையில் மாணவர் சங்கத் தோழர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டே தேநீர் அருந்திக் கொண்டிருந்தார் சீத்தாராம் யெச்சூரி. அவரிடம் பேட்டி எடுக்க சுற்றிலும் கேமராக்கள் தயாராக இருந்தன. மின்னும் கண்களுடன் சிரித்துக்கொண்டே யெச்சூரி பேசும் முகத்தை ரசித்துப் பார்த்துக் கொண்டே இருந்தேன். இன்று அதே டீக் கடை எதிரில் கேமராக்கள் சூழ்ந்து இருக்கின்றன. யெச்சூரி பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். ஆனால் அதை காது கொடுத்து கேட்காமல் உயிரற்ற உடலாக சிவப்பு ரோஜாக்கள் சூழ கிடத்தப்பட்டுள்ளார். “யெச்சூரி உயிரோடு இல்லையா?” நம்பு வதற்கே மனம் ஒப்பாமல் பல்லாயிரம் குரல்கள் வெவ்வேறு மொழிகளில் விசும்புகின்றன.
சங்கரய்யா மெச்சிய மேதை
பன்னிரண்டாம் வகுப்பில் தொழிற் பாடப்பிரிவில் மாநிலத்தில் முதலிடத்தில் வந்ததை ஓடோடிச் சென்று தோழர் சங்கரய்யா விடம் சொன்னபோது, தட்டிக் கொடுத்து பாராட்டியவர். “மாணவர் சங்கத் தோழர்கள் படிப்பிலும் கில்லாடியாக இருக்கனும். நம்ம கட்சி தலைமையிலுள்ள யெச்சூரி, காரத் இருவரும் படிப்பில் கோல்டு மெடலிஸ்ட், அப்படி அவங்க படிச்சது தொழிலாளி வர்க்கக் கட்சிக்கு எவ்வளவு உதவியா இருக்கு பாத்தியா.அப்படி இருக்கணும்” எனச் சொன்னார். விடுதலைப் போராட்ட வீரர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானதற்கு வித்திட்ட 32 பேரில் ஒருவர் சங்கரய்யா. அவரே மெச்சி பேசிய தலைவர். அந்த மகத்தான மேதையை சில வருடங்களிலேயே சந்தித்துப் பேசவும், தனிப்பட்ட முறையில் அரசியல் கேள்விகள் கேட்கவும் வாய்ப்பு கிடைத்தது. அவருடன் உரையாடுவதற்கு முன்பின் அறிமுகம் தேவை இல்லை. ஒரு புன்னகை போதும். உள்ளத்திலிருந்து வார்த்தைகளை எடுத்து உரையாடுவார். உலக அரசியல் பொருளாதார விஷயங்கள் தொடங்கி பிரேம் சந்த் கதைகள், பயஸ் கவிதைகள், தாகூர்,பாரதி பாடல்கள், அப்போது வந்த சினிமா என எல்லாவற்றையும் பேசுவார்.
தலித் மாணவர்களின் கல்விக்காக...
தலித் மாணவர்கள் தொழிற் கல்வி நிலையங்களில் கல்வி உதவி பெற பள்ளி இறுதி தேர்வில் கட்டாயம் 60% மதிப்பெண் எடுக்க வேண்டுமென்று 2008 ல் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு அரசாணை கொண்டு வந்தது. அந்த அரசாணையை எரித்து இந்திய மாணவர் சங்கம் தமிழகத்தில் போராட்டம் நடத்தியது. தனியார் தொலைக்காட்சி ஊடக விவாதத்தில் காங்கிரஸ் அரசாணையை எதிர்க்காமல் அதற்கு இசைவாக பாஜகவும் செயல்படுகிறது என நாங்கள் குற்றம் சாட்டிய போது, விவாதத்தில் பங்கேற்ற தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே இதை எதிர்க்கவில்லை என அப்பட்டமாக தவறான தகவலை சொன்னார். அவரது தகவல் தவறானது எனக் குறிப்பிட்டபோது ஆதாரம் காட்டச் சொன்னார். அடுத்து இரண்டு நாட்களில் சீத்தாராம் யெச்சூரி உரையாற்றும் பொதுக்கூட்டம் பல்லாவரத்தில் நடைபெற்றது. ஆயிரக்கணக் கான மக்கள் கூடியிருந்தனர். தோழர் யெச்சூரி உரையை தோழர் உ.ரா.வரதராசன் அவர்கள் மொழியாக்கம் செய்கிறார். தனது பேச்சில் தலித் மாணவர்களுக்கு உதவித்தொகை பெற 60% மதிப்பெண் நிபந்தனை விதிக்கும் அரசாணை குறித்து யெச்சூரியை பேசச் செல்லுமாறு உ.ரா. வரதராசன் மொபைல் போனுக்கு ஒரு மெசேஜ் அனுப்பினேன். அந்த மெசேஜை அப்படியே தனது அருகிலிருந்த யெச்சூரிக்கு காண்பிக் கிறார். அடுத்து பேசத் தொடங்கிய தோழர் யெச்சூரி, தலித் மாணவர்கள் ஸ்காலர்ஷிப் பெறுவதற்கு அறிவிக்கப்பட்ட அரசின் திட்டத்தை கடுமையாக சாடிப் பேசுகிறார். திரும்பப் பெற வலியுறுத்துகிறார். ஊடகங்களில் இந்தச் செய்தி முக்கியத்துவம் பெறுகிறது. அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்க அந்த ஆணை திரும்பப் பெறப்பட்டது.
நிகர்நிலைப் பல்கலைக்கழகப் பிரச்சனையில்...
நிகர் நிலைப் பல்கலைக்கழகங்களில் பொறி யியல் பாடப்பிரிவுகளுக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஏஐசிடிஇ) அங்கீகாரம் அவசியம். அப்படி அங்கீகாரம் பெறாத பட்டங்கள் செல்லாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு எதிராக தமிழகத்தில் எஸ்ஆர்எம், சத்யபாமா (ஜேபிஆர்) பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். மாணவர்களின் போராட்டத்தை வன்முறை யாக நிர்வாகம் சித்தரித்தது. இந்த விஷயத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் மாண வர்களின் நலன்களை முன் வைத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தனியார் நிகர் நிலைப் பல்கலைக்கழகங்களில் அரசின் வழிகாட்டுதலின்படி ஆசிரியர், அடிப் படை வசதிகள் இல்லாததை நீதிமன்றத்தில் எடுத்துரைத்தது. இந்திய மாணவர் சங்கத்தின் இந்த முன்னெடுப்பை, மறைந்த கல்வியாளர் மு.அனந்த கிருஷ்ணன், விமானத்தில் பய ணிக்கும் போது யெச்சூரி அவர்களிடம் குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளார். இந்தப் பின்னணி யில் தில்லியில் இந்திய மாணவர் சங்கக் கூட்டத்திற்கு சென்ற பொழுது பல்வேறு விஷயங் களுக்காக அன்றைய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் அர்ஜுன் சிங் அவர்களை சந்திப்பதற்கு யெச்சூரி செல்லும் பொழுது, உடன் என்னையும் அழைத்துச் சென்றார். நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் பிரச்ச னைகளை அமைச்சரிடம் பட்டியலிட்டுக் காண்பித்தார் யெச்சூரி.
எப்போதும் தட்டிக் கொடுப்பவர்
இந்திய மாணவர் சங்கத்தின் இணைச் செயலாளராக தில்லியில் செயல்பட்ட போது “Student Struggle” (ஸ்டூடண்ட் ஸ்ட்ரகிள்) பத்திரி கையின் ஆசிரியர் பணியில் செயல்பட வேண்டி இருந்தது. இந்த இதழின் ஆரம்பகால ஆசிரியர் யெச்சூரி. இடதுசாரி மாணவர் இயக்கத்தின் இதழ் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அக்காலத்திய இதழ்கள் அமைந்திருக்கும். “நீங்கள் சிறப்பாக நடத்திய பத்திரிகைக்கு இப்போது நான் தான் ஆசிரியர். அதுவும் அரைகுறை ஆங்கிலம் தெரிந்த நபர்” என சிரித்துக் கொண்டே சொன்னபோது, “அப்படி எல்லாம் பார்க்கக் கூடாது; தொடர் பயிற்சியும், வாசிப்பும், தோழர்களின் கூட்டு உழைப்பாலும் சிறப்பாக கொண்டு வர முடியும்” என தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்தினார்.
சென்னையில் யெச்சூரி
2015 மழை வெள்ளத்தில் சென்னை பெரும் சேதத்தை சந்தித்தது. மக்கள் தவித்தனர். நேரில் பார்வையிடுவதற்கு யெச்சூரி வந்தார். அப்போது விருகம்பாக்கம் பகுதியில் காசி தியேட்டர் அருகில் நடை மேம்பாலம் முழுவது மாக உடைந்து இருந்தது. அங்கிருந்து அடை யாற்றின் கரையோரமாக இருந்த குடிசைப் பகுதிகளை அன்னை சத்தியமூர்த்தி நகர், சூளை பள்ளம் பகுதிகளின் உட்புற தெருக்களில் நேரடியாக வந்து பார்வையிட்டார். அப்பகுதி மக்களின் கரம் பிடித்து ஆறுதல் சொன்னார். நிவாரணப் பணிகளில் முழுமையாக ஈடுபடு மாறு தோழர்களுக்கு அறிவுறுத்தினார். சில மாதங்கள் கழித்து அவரை நேரில் பார்க்கும் போது பீப்பிள்ஸ் டெமாக்ரசி பத்திரிகை யில் இந்த வெள்ளம் நிவாரணம் குறித்து நான் எழுதிய கட்டுரையை படித்தீர்களா என ஆசையோடு அவரிடம் கேட்டேன். அவர் படித்து இருப்பாரா என தெரியவில்லை, ஆனால் உடனே உள்ளூர் அளவில் நடைபெறும் இயக்கங்கள் அனுபவங்கள் கட்டுரையாக வருவது மிகுந்த முக்கியத்துவம் உடையது; தொடர்ந்து எழுதுமாறு உற்சாகப்படுத்தினார். நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்காக 2024 ஏப்ரல் 11 அன்று புரசைவாக்கம் தாணா தெருவில் அவர் ஆற்றிய உரைதான் சென்னை யில் அவர் பேசிய இறுதிப் பேச்சாக அமைந்து விட்டது. நாடாளுமன்ற ஜனநாயகத்தை பாதுகாக்க பலப்படுத்த வேண்டியதன் தேவை யை இந்தியா கூட்டணி வெற்றி பெறுவதன் மூலமாக எப்படி சாத்தியமாகும் என்பதை அடுக்கடுக்காக எடுத்துரைத்து பேசினார். குழந்தைகள் மாணவர்கள் கொடுத்த வரவேற்பு முழக்கத்தை மகிழ்ச்சியோடு ஏற்றார். அதிலொரு மாணவி ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் பயில்வதாக சொன்னவுடன் தனது பாட்டியும் அந்த கல்லூரியில் படித்ததை சிரித்தபடி நினைவு கூர்ந்தார். இந்திய நாட்டின் பண்பாட்டு தளத்தை நுட்ப மாக ஆய்வு செய்து, மானுட நேயம் மிக்க கூறு களை எடுத்துரைப்பதில் ஆழ்ந்த புலமை பெற்ற வர். சமஸ்கிருத ஸ்லோகங்கள் பக்தி இலக்கி யங்கள் ஆகியவற்றை மேற்கோள் காட்டி, இந்து மத அடிப்படைவாதிகளை நேருக்கு நேர் நின்று கருத்தியல் ரீதியாக அம்பலப்படுத்துவதில் வல்லவர் அவர். சமகால முதலாளித்துவ சுரண்டல் சமூகத்திற்கு சோசலிசமே மாற்று என்பதை கேட்போர்க்கு இனிக்கும் வகையில் சொல்வதில் அவருக்கு நிகர் அவர்தான்.
எங்கள் ஆசிரியர்
அரங்கக் கூட்டம், மாநாடு, தனிப்பட்ட உரையாடல் என எல்லா நேரத்திலும் வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் யெச்சூரியிடம் கேள்வி கேட்பது உற்சாகமான விஷயம். நீங்கள் என்ன கேள்வி கேட்டாலும் சுருக்கமாக ஆனால் காத்திரமாக, குறிப்பாக எளிமையான ஆங்கிலத்தில் ஒவ்வொரு விஷயமாக எடுத்துரைத்து விளக்குவதில் வல்லவர். தலைசிறந்த சிந்தனையாளர்களில் ஒருவரான சீத்தாராம் யெச்சூரி என்கின்ற ஆசிரியரிடம் அரசியல் பயின்றோம் என்கிற இறுமாப்பும் பெருமையும் கர்வமும் தமிழக இளம் தலைமுறைக் கம்யூனிஸ்ட்டுகளுக்கு உண்டு.