மதுரை, செப்.10 - சு.வெங்கடேசன் எம்.பி., நடத்திய முகாம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மாதர் சங்கத்தின் தொடர் தலையீடு மூலம் 23 குடும்பங்களுக்கு பட்டா கிடைத்துள்ளது. மதுரை மாவட்டம் கோவில் பாப்பாகுடி ஊராட்சி சிக்கந்தர் சாவடி மந்தையம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த 23 குடும்பங்கள், கடந்த 25 ஆண்டுகளாக பட்டா இல்லாமல் குடியிருந்து வந்த நிலையில், பட்டா கோரி பல கட்ட முயற்சிகளை மேற்கொண்டனர். கடந்தாண்டு இவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் நடத்திய மக்கள் குறை கேட்பு முகாமிற்கு வந்து, 25 ஆண்டுகளுக்கு மேல் குடியிருக்கும் எங்களுக்கு பட்டா கிடைக்கவில்லை என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இதைப் பரிசீலித்த அவர், உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு பரிந்துரைத்தார். அதன் பிறகு அப்பகுதி மக்கள், வடக்கு தாசில்தாரை சந்தித்து மனு கொடுத்தனர். இம்மக்களுக்கு பட்டா கோரி தொடர்ந்து நடந்த போராட்டம் மற்றும் தலையீடுகளில் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.பாலா, ஒன்றியச் செயலாளர் ஜீவானந்தம், மாதர் சங்க மாவட்டத் தலைவர் என்.விஜயா எம்.சி., ஒன்றியச் செயலாளர் சரஸ்வதி, ஒன்றியத் தலைவர் அமிர்தவள்ளி, மாவட்ட நிர்வாகிகள் மலர், இந்திரா மற்றும் ஆகியோர் பங்கேற்றனர். இந்நிலையில் செப்.9 அன்று நடந்த அரசு விழாவில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பட்டாக்களை வழங்கினார். இதன்மூலம் பட்டா பெறுவதற்காக, மந்தையம்மன் கோவில் வீதி மக்கள் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டாக நடத்திய போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. போராட்டத்தின் வெற்றி குறித்து உதயா என்ற பயனாளி கூறுகையில், “நான் 11 ஆம் வகுப்பு படிக்கும் போது இருந்தே பட்டா கேட்டு போராடி வந்தோம். இங்கிருக்கும் அனைவருக்கும் நான்தான் பட்டா வழங்க கோரி, மனு எழுதிக் கொடுப்பேன். இன்று என் மகன் 5 ஆம் வகுப்பு படிக்கிறான். இப்பொழுதுதான் பட்டா கிடைத்திருக்கிறது” என்றார். இதுகுறித்து பயனாளி ஈஸ்வரி கூறுகையில், “என் மகளுக்கு திருமணம் என்பதால்தான், சுற்றுச்சுவர் அமைத்து, ஆஸ்பெஸ்டாஸ் சீட்டு போட்டு இருக்கிறேன். பட்டா இல்லாததால், பயந்து கொண்டே வீட்டை கட்டினேன். இப்ப என் மகளுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இச்சமயத்தில் பட்டாவும் கிடைத்தது மகிழ்ச்சி” என்றார்.