போபால், ஏப். 19- மலேகான் குண்டுவெடிப்புத் தாக்குதல் சம்பவத்தில் 2008-ல் சிறைக்குச் சென்ற இந்துத்துவா மதவெறி பெண் சாமியார் சாத்வி பிரக்யா, 26/11 மும்பை பயங்கர வாதத் தாக்குதலை எதிர்த்துப் போராடி சண்டையிட்டு அதில் வீர மரணம் அடைந்த போலீஸ் அதிகாரி ஹேமந்த் கார்க்கரேவின் மரணத்துக்கு தனது சாபமே காரணம் என்று கூறியுள்ளார். பயங்கரவாத எதிர்ப்புக் காவல்படையின் அதிகாரி ஹேமந்த் கார்க்கரே 2011ம் ஆண்டு மும்பையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின்போது எதிரிகளுடன் சண்டையிட்டு அதில் வீரமரணம் அடைந்தார். அவரது தியாகம் இந்தியாவே போற்றிவீரவணக்கம் செய்யும் ஒன்றாகும். கார்க்கரே மீது மக்கள் தரப்பில் நல்லதொரு அபிமானம் இருந்து வரு கிறது. இந்நிலையில் 2008 மாலேகான் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தன்னை கைது செய்த போது கார்க்கரே தன்னை படுமோசமாக, கடுமையாக நடத்தினார் என்றும் அப்போது சாபம் கொடுத்ததாகவும் சாத்வி பிராக்யா தெரிவித்துள்ளார்.“இந்த ஹேமந்த் கார்க்கரேதான் என்னை தவறாக குற்றவாளியாக்கினார். நான் அப்போதே அவரிடம் கூறினேன், நீங்கள் அழிந்து போவீர்கள் என்று. அவரது பரம்பரையே அழிக்கப்படும் என்று சாபமிட்டேன், அதுதான் 26/11 தாக்குதலில் அவரது மரணத்திற்குக் காரணமாகும்” என்று சாத்வி பிரக்யா தற்போது வெறித்தனமாக கூறியுள்ளார்.
ஐபிஎஸ் அதிகாரிகள் அமைப்பு கடும் கண்டனம்
சாத்வி பிரக்யாவின் இந்த கூற்றை எதிர்த்து ஐபிஎஸ் அதிகாரிகள் கூட்டமைப்பு தங்கள் எதிர்ப்பை ட்விட்டரில் பதிவு செய்துள்ளது “அசோக சக்கர விருது வென்ற, வீர மரணம் எய்திய ஹேமந்த் கார்க்கரே பயங்கரவாதிகளுக்கு எதிராகச் சண்டையிட்டு தியாகியாகியுள்ளார். ஆகவே சீருடை அணிந்த நாங்கள் அனைவரும் மிகவும் புண்பட்டுள்ளோம். பாஜக சார்பில் போபால் தொகுதியில் போட்டியிடும் மேற்கண்ட வேட்பாளர் தன் கருத்திற்கு மன்னிப்பு கேட்க வேண்டும், எங்களுடைய தியாகங்கள் மதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்” என்று அப்பதிவில் கூறியுள்ளனர்.