tamilnadu

img

பாஜக-வுக்கு எதிராக காவிக் கொடிகளுடன் திரண்ட சாமியார்கள்..

போபால்:

போபால் மக்களவைத் தொகுதியில், பாஜக-வுக்கு எதிராக ஆயிரக்கணக்கான சாமியார்கள் காவிக் கொடிகளுடன் திரண்டு பேரணி நடத்தியுள்ளனர். பாஜக-வை தோற்கடிக்காமல் ஓயமாட்டோம் என்றும் அப்போது அவர்கள் அறிவித்துள்ளனர்.


மத்தியப்பிரதேசத்தின் போபால் மக்களவைத் தொகுதியில், பாஜக சார்பில், மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பிரக்யா சிங் தாக்குர் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, மூத்த தலைவரான திக்விஜய் சிங்கை காங்கிரஸ் வேட்பாளராக இறக்கி விட்டுள்ளது.


போபால், கடந்த 1989 முதல் 30 ஆண்டுகளாக பாஜக வசமிருக்கும் தொகுதி என்பதால், மீண்டும் எளிதில் வெற்றிபெற்று விடலாம் என்று பாஜக கணக்கு போட்டிருந்தது. இங்கிருக்கும் சாமியார்கள் தங்களைத்தான் ஆதரிப்பார்கள் என்பதும் அதற்கு ஒரு காரணம்.


இந்நிலையில்தான், பாஜக-வின் எண்ணத்தில் மண்ணள்ளிப் போடும் விதமாக, கம்ப்யூட்டர் பாபா என்று அழைக்கப்படும் சாமியார் நாம்தேவ் தியாகி தலைமையில் ஆயிரக்கணக்கான சாமியார்கள் போபாலில் வியாழனன்று காவிக் கொடிகளுடன் பேரணி நடத்தியுள்ளனர்.


“பாஜக வேட்பாளரான பிரக்யா சிங், சாமியார் என்றே அழைக்கத் தகுதி இல்லாதவர். குண்டுவெடிப்பு, கொலை போன்றவற்றில் தொடர்பு உள்ளவர். வீர மரணம் அடைந்த ஹேமந்த் கார்கரே குறித்து, மோசமான கருத்து தெரிவித்தவர்; அவரை பாஜக வேட்பாளராக நிறுத்தியிருப்பதை ஏற்க முடியாது” என்று சாமியார்கள் கொதித்து எழுந்துள்ளனர். 

இது பாஜக-வினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.