போபால்:
போபால் மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருப்பவர், பிரக்யா சிங் தாக்குர். பெண்சாமியாரிணியான இவர், மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கியக் குற்றவாளி ஆவார். அத்துடன் சர்ச்சைப் பேச்சுக்கு பெயர்போனவர்.‘கோமியம் அருந்தியதால் எனது புற்றுநோய் குணமானது’; ‘எனது சாபம் காரணமாகவே மும்பை பயங்கரவாத தடுப்புப்படையின் தலைவர் ஹேமந்த் கார்கரே இறந்து போனார்’; ‘கோட்சே மிகச்சிறந்த தேசியவாதி’ என்று அடுத்தடுத்து அவர் கிளப்பிய சர்ச்சைகளால் மோடியே எரிச்சல் அடைந்தார்.
அண்மையில் கூட பாஜக தலைவர்கள் அடுத்தடுத்து மரணம் அடைந்து வருவதாகவும், இதற்கு எதிர்க்கட்சிகள் சூனியம் வைத்திருப்பதே காரணம் என்று கூறி, பாஜக-வுக்கு உள்ளேயே கண்டனத்திற்கு உள்ளானார். இதையொட்டி, பிரக்யா எதைப்பற்றியும் பேசக்கூடாது என்று பாஜக தலைமை அவருக்கு வாய்ப்பூட்டுபோட்டதாகவும் கூறப்பட்டது.ஆனால், இரண்டு நாட்களுக்கு முன்பு, மத்தியப்பிரதேச மாநிலம் செஹோரில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரக்யா சிங், அவர்கள் முன்பாகவே,செஹோர் நகர பத்திரிகையாளர்கள் நேர்மையற்றவர்கள் என்று பேசி மீண்டும் வம்பை ஆரம்பித்துள்ளார். இதற்கு அப்போதே கண்டனம் தெரிவித்த பத்திரிகையாளர்கள் தற்போது, பிரக்யா சிங் மன்னிப்பு கோர வேண்டும், பிரக்யா சிங்கை பாஜக-லிருந்து நீக்கி, அவரது எம்.பி. பதவியை பறிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளனர்.