அவிநாசி, ஜூலை 8- அவிநாசி அருகே நியூ டவுன் குடியிருப்பு பகுதியில் ரிசர்வ் சைட் பகுதியை ஆக்கிரமித்து கட்டியுள்ள வீட்டை அகற்றக் கோரி பேரூராட்சி அலுவலர்களை பொதுமக்கள் முற்றுகை யிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி பேரூராட்சிக்குட்பட்ட நியூ டவுன் குடியிருப்பு பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும் பத்தினர் வசித்து வருகின்றனர். இக்குடியிருப்பு பகுதியில் பொதுப் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் பிரபல ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவன உரிமையாளர் ஆக்கிர மித்துள்ளதாக க் கூறி பொதுமக்கள் அவிநாசி பேரூராட்சி அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், அப்பகுதியில் பேரூராட்சி சார்பாக நில அளவை செய்ய செவ்வாயன்று செயல் அலுவலர் குணசேகரன், நில அளவையர் உள்ளிட்ட அதிகாரிகள் வந்துள்ளனர். இதையறிந்த அப்பகுதி மக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற் பட்டது. இதன்பின் ஆக்கிரமிப்பு தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என செயல் அலுவலர் உறுதி யளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.