ராஞ்சி:
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரனின் சாதியைக் குறிப்பிட்டு, இழிவுபடுத்திப் பேசியதாக, ஜார்க்கண்ட் பொறுப்பு முதல்வர் ரகுபர் தாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல் முடிவில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்)- காங்கிரஸ் - ராஷ்ட்ரிய ஜனதாதளம் (ஆர்ஜேடி) கூட்டணி 47 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியமைக்க உள்ளது. ஜேஎம்எம் தலைவர் ஹேமந்த் சோரன் டிசம்பர் 29-ஆம் தேதி முதல்வராகப் பதவியேற்க உள்ளார்.முன்னதாக ஜம்தாராவில் நடைபெற்ற தேர்தல் கூட்டம் ஒன்றில் ரகுபர் தாஸ் பேசியபோது, பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஹேமந்த் சோரனை, சாதியை குறிப்பிட்டு இழிவுபடுத்தியதாக புகார் எழுப்பப்பட்டு இருந்தது.இதுதொடர்பாக கடந்த டிசம்பர் 19-ஆம்தேதியே ஹேமந்த் சோரன் புகார் அளித்திருந்தார். அதன்பேரில், தற்போது ரகுபர் தாஸ் மீது எஸ்சி- எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், தும்கா காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.“ரகுபர் தாஸ், எனது சாதி குறித்து இழிவாகப் பேசினார்; அவரது வார்த்தைகள் என்னைக் காயப்படுத்தியது. பழங்குடிக் குடும்பத்தில் பிறந்தது என் குற்றமா?” என்றுஹேமந்த் சோரனும் கேள்வி எழுப்பியுள்ளார்.