வயநாடு
இந்தியாவில் கொரோனா எழுச்சி பெற்ற காலத்தில் அதிக பாதிப்பைச் சந்தித்த கேரளா மாநிலம் தற்போது கொரோனா இல்லாத மாநிலமாக முன்னேறி வருகிறது.
இன்னும் 127 பேர் மட்டுமே அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்ற அனைவரும் வீடு திரும்பியுள்ள நிலையில், கேரளத்தின் வடகிழக்கு எல்லைப்பகுதி மாவட்டமான வயநாட்டில் பொது இடங்களுக்கு வரும் மக்கள் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு இளங்கோ அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது," முகக்கவசம் அணியாமல் சுற்றும் நபர்கள் மீது கேரள காவல் சட்டம் 118 இ-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு ரூ.5000 அபராதம் வசூலிக்கப்படும். குற்றம்சாட்டப்பட்ட நபர் நீதிமன்றத்தில் வழக்கைத் தொடர விரும்பினால், சட்டத்தின் படி குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ரூ.10,000 அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்" என அறிவித்துள்ளார்.
மலைகள் அதிகம் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் இந்த வயநாடு மாவட்டம் கொரோனா பரவலில் ஆரஞ்சு மண்டலமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.