ஓசூர், ஏப். 24-ஓசூர் வட்டம் பாகலூர் பகுதியில் உள்ள பாலிகானப் பள்ளி கிராமத்தில் தலித் வகுப்பை சேர்ந்த வெங்கட்டப்பா உட்பட 7 குடும்பங்கள் 40 ஆண்டுகளாக அரசு புறம் போக்கு நிலம் சர்வே எண் - 41/3ல் காட்டு விவசாயம் செய்தும், ஆடு மாடுகள் மேய்த்தும் பிழைத்து வருகின்றனர். இந்நிலையில், பெங்களூர் நில புரோக்கர் சுப்பாச்சாரி இந்த நிலத்திற்கு கிராம நிர்வாக அலுவலர் பெயரில் போலி ஆவணங்களை தயார் செய்து கையெழுத்திட்டு சுமார் 3 ஹெக்டேர் நிலம் தனக்கு சொந்தமானது என 2010ல் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். மேலும், அனைத்து நிலமும் தன் பரம்பரை சொத்து எனக் கூறி வேலி போட்டு இந்த 7 குடும் பத்தின் வாழ்வாதாரத்தையும் சீரழித்து வருகிறார்.பாதிக்கப்பட்ட வெங்கடப்பா உட்பட 7 குடும்பங்களும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், மார்க்சிஸ்ட் கட்சியுடன் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது. சாராட்சியர், வட்டாட்சியர், காவல் துறை என பலருக்கும் பலமுறை புகார் மனுக்களும் கொடுத்துள்ளனர். மேலும், சுப்பாச்சாரிக்கு எதிராக வழக்கும் தொடுத்தனர். அத்துடன் சுப்பாச்சாரியே தயாரித்த ஆவணங்கள் போலி என்பதை நிரூபித்து வழக்கில் வெற்றியும் பெற்றனர். இதற்கான உத்தரவையும் பெற்றனர். வட்டாட்சியரும் கடிதம் இந்த குடும்பங்கருக்கு வழங்கியுள்ளனர்.நீதிமன்ற ஆணைப்படி சுப்பாச் சாரி வெளியேற்றப்பட்டு பெயர் பலகை வைக்கப் பட்டது. ஆனால் பெயர் பலகையை அகற்றிவிட்டு வேலி அமைத்து, விவசாயம் செய்து வருகிறார்.இது குறித்தும் கடந்த 2 வருடமாக போராட்டங்கள் நடத்தி புகார் மனுக்கள் கொடுத்தும் பாகலூர் வருவாய் அலுவலர் மறைமுகமாக சுப்பாச்சாரிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.இந்நிலையால் பாதிக்கப்பட்ட 7 குடும்பத் தினரும், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் கோதண்டராமன், ஒன்றியச் செயலாளர் தேவராஜ், பொருளாளர் ராஜா ரெட்டி, மார்க்சிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் பி.ஜி.மூர்த்தி, சிஐடியு சங்க நிர்வாகிகள் நாராயண மூர்த்தி, ராஜேந்திரன், விவசாயிகள் சங்க நிர்வாகிகள், முனிராஜ், எல்லப்பா, சின்னம்மா, மஞ்சு, ராமகிருஷ்ணப்பா ஆகியோர் துணை வட்டாட்சியர், வருவாய் அலுவரிடம் மீண்டும் புகார் செய்தனர். இதனையடுத்து, பேச்சுவார்த்தை நடைபெற்றது. நீதிமன்ற தீர்ப்பின்படி சுப்பாச்சாரிக்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டுத்தருவதாக உறுதியளித்தனர்.