கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் முக்கிய குற்றவாளி சிவராமன் தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவருக்கு உடந்தையாக இருந்த காவேரிப்பட்டினத்தை சேர்ந்த ரவி (30) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி அருகே கந்திகுப்பத்தில் உள்ள தனியார் பள்ளியில் போலி என்.சி.சி. முகாமில் நடத்தி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய வழக்கில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சிவாராமன், சம்பவத்தை மறைத்த பள்ளி தாளாளர், முதல்வர் உள்ளிட்ட 13 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையில், விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்த சிவாராமன், சிகிச்சை பலனின்றி கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி உயிரிழந்தார்.
இதை அடுத்து, ஐ.ஜி. பவானீஸ்வரி தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவும், சமூக நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையிலான பல்நோக்கு குழுவினரும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் மற்றொரு தனியார் பள்ளியில் நடத்தப்பட்ட போலி முகாமிலும், 14 வயது மாணவி ஒருவர் சிவராமனால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதும் தெரியவந்ததை தொடர்ந்து அப்பள்ளியின் முதல்வர் கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து சிவராமனால் நடத்தப்பட்ட போலி முகாம்கள் குறித்த தகவல்களை மறைத்ததாக. காவேரிப்பட்டணம் சந்தைபாளையம் பகுதியைச் சேர்ந்த என்.சி.சி. பயிற்சியாளர் கோபு என்பவரும், சிவராமனின் அலுவலக சிசிடிவி காட்சிகளின் Hard Disk-ஐ எரித்ததற்காக நாதக முன்னாள் நிர்வாகி கருணாகரன் என்பவரும் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், சிவராமனுக்கு உடந்தையாக இருந்த காவேரிப்பட்டினத்தை சேர்ந்த ரவி (30) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வழக்கில் இதுவரை 20 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.